You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘காவிரி, ஸ்டெர்லைட்’ - போராட்ட களத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம்
விஜய்யுடன் நடிக்க ஆசை!
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு‘ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பிரபலமானவர் கருணாகரன்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ‘சூதுகவ்வும்‘, ‘பீட்சா‘, ‘ஜிகர்தண்டா‘, ‘லிங்கா‘, ‘இன்று நேற்று நாளை‘ உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார்.
‘விவேகம்‘ திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
முதன் முறையாக சிவாவுடன் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக கருணாகரன் கூறியுள்ளார்.
கருணாகரன் கதாபாத்திரத்தில் தன்னுடைய நண்பரும் நகைச்சுவை நடிகருமான சதீஷை நடிக்க வைக்க சிவகார்த்திகேயன் முயற்சித்துள்ளார்.
ஆனால், இயக்குநர் ரவிக்குமார் தன்னுடைய முதல் படமான ‘இன்று நேற்று நாளை‘ படத்தில் நடித்த கருணாகரன்தான் வேண்டும் என்று உறுதியாக கேட்டு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருப்பதைபோல் நடிகர் விஜய்யுடனும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் கருணாகரன்.
சில்க் புடவைக்கும் நட்டிக்கும் உள்ள தொடர்பு
இந்திய சினிமாவில் இருக்கும் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் நட்டி-யும் (நட்ராஜ்) ஒருவர்.
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்கு சென்ற இவர், அங்கு இருக்கும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதேபோல் நடிப்பிலும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார். ‘சதுரங்க வேட்டை‘ படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில் தற்போது இரட்டை இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரிஸ் இயக்கும் ‘சில்க்‘ என்ற புதுப்படத்தில் டெலிவரி பையனாக நடிக்கிறார் நட்டி.
காஞ்சிபுரம் பகுதியை மையமாக வைத்து ‘சில்க்‘ படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சில்க் புடவைக்கும் நட்டியின் கதாபாத்திரத்திற்கும் நிறைய தொடர்பு இருப்பதுபோல் இயக்குநர்கள் கதை எழுதியுள்ளனர். இந்த படத்தின் வேலைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
காவி்ரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம்
காவி்ரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் 8ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்த உள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நடிகர்களுக்கும் அழைப்புவிடுக்கப்படவுள்ளது.
அதேபோல் சினிமாவில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து அறவழிப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தவிருக்கும் இந்தப் போராட்டம் வரும் ஞாயிறு காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தை ஒரு நாள் முழுவதும் நடத்த அரசிடம் அனுமதிக் கேட்டுள்ளனர். ஆனால் 1 மணி வரை மட்டுமே நடத்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனது அம்மாவின் உயிரை ஸ்டெர்லைட் ஆலை திருப்பி தருமா?"
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்