You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: சவரக்கத்தி
சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் எந்த வகை திரைப்படங்களிலும் சேராமல், வேறுமாதிரியான ஒரு கதை - திரைக்கதையுடன் துயர நகைச்சுவையுடன் தன் முதல் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர். ஆதித்யா.
சைக்கோத்தனமான ரவுடி, அவனிடம் தெரியாமல் மோதிவிடும் ஒரு சாதாரண மனிதன், கர்ப்பமாக உள்ள, காது கேட்காத அவனது மனைவி - இந்த மூவரின் ஒரு நாள் பயணம்தான் படம்.
சரளமாக பொய்பேசி, பில்ட்-அப் கொடுக்கும் சிகையலங்காரக் கலைஞர் பிச்சை (ராம்). இவரது காது கேட்காத, நிறைமாத கர்ப்பிணி மனைவி சுபத்ரா (பூர்ணா). மாலை சிறை திரும்ப வேண்டிய காரணத்தால் பெரும் கோபத்தில் இருக்கும் சைக்கோ ரவுடி மங்கா (மிஷ்கின்).
சுபத்ராவின் தம்பியின் திருமணத்திற்காக அவசரமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பிச்சை, போகும் வழியில் மங்காவோடு மோத வேண்டிவருகிறது. இதனால் பிச்சையைத் துரத்த ஆரம்பிக்கிறான் மங்கா. சிறை திரும்புவதற்குள் மங்காவும் பிச்சையும் ஆடும் ஆடு-புலி ஆட்டமே சவரக்கத்தி.
மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள். ஒரே நாளுக்குள் நடக்கும் சம்பவங்கள் என ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு தன் முதல் படத்தை முயற்சித்திருக்கும் ஆதித்யா, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை மங்கா, பிச்சையைத் துரத்துவதுதான் கதை.
இந்த ஒற்றை வரியை சுவாரஸ்யமான சம்பவங்கள், வெவ்வேறு விதமான மனிதர்கள் ஆகியவற்றை வைத்து விறுவிறுப்பாக பின்னிக்கொண்டே செல்கிறார் இயக்குனர். இடைவேளை வரை படம் பறக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டு, இறுதிக் காட்சியில் மீண்டும் சூடுபிடிக்கிறது படம்.
சுமார் ஒன்றே முக்கால் மணி நேரமே ஒடுகிறது படம். இரண்டே இரண்டு பாடல்கள். இந்த அம்சங்களும் இந்தப் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.
பிரதானமான முன்று கதாபாத்திரங்கள் தவிர, மங்காவுடன் அடியாட்களாக வரும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்படுவதன் மூலம் சில நிமிடங்களிலேயே ஒரு தனி பாத்திரமாக நிலைபெற்றுவிடுகிறார்கள்.
படத்தில் வரும் எல்லோருமே சிற்சில காட்சிகளே வந்தாலும், சட்டென மனதில் பதிந்துவிடுவது இந்தத் திரைக்கதையின் வெற்றி.
பிச்சையாக வரும் இயக்குனர் ராம், படத்தின் பல தருணங்களில் பின்னியெடுக்கிறார். நாயகி பூர்ணா, மிஷ்கின் என எல்லோருமே சில தருணங்களில் அட்டகாசமாக வெளிப்படுகிறார்கள். ஆனால், மீதமிருக்கும் காட்சிகளில், படத்தில் வரும் எல்லோருமே நவீன நாடகங்களுக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்துவது உறுத்தலாக இருக்கிறது.
அடியாளாக நடிப்பவர்கள் முதற்கொண்டு, விசித்திரமாக நடக்கிறார்கள், ஓடுகிறார்கள். மிஷ்கின் இயக்கும் படங்களுக்கே உரிய பிரச்சனை இந்தப் படத்திலும் இருக்கிறது. இந்த சிறிய பிரச்சனையை விட்டுவிட்டால், பார்த்து ரசிக்கக்கூடிய படம்தான் சவரக்கத்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்