You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்
உலகம் முழுவதும் பிரபலமான பிரிட்டிஷ் எழுத்தாளர் அகதா கிரிஸ்டியின் 'மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே 1974ல் ஒரு முறை திரைப்படமாகவும் பல முறை தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்த கதை என்றாலும் வசீகரம் குன்றாத மர்மத்தைக் கொண்ட கதை.
ஜெருசலத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கைத் தீர்க்கும் ஹெர்க்யூல் பொய்ரோ (கென்னத் பிரனா), சில நாட்கள் ஓய்வெடுக்க நினைக்கையில் ஒரு வழக்கை விசாரிக்க வருமாறு லண்டனிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வருகிறது. இஸ்தான்புல்லில் இருந்து பிரான்சின் காலேவுக்குப் புறப்படும் ஓரியண்ட் எக்ஸ்பிரசில் அவருடைய நண்பர் பூக்கின் (டாம் பேட்மேன்) உதவியால் இடம் கிடைக்கிறது.
அந்த ரயிலில் சாமுவேல் ராஷே (ஜானி டெப்) என்ற ஒரு தொழிலதிபரும் பயணம் செய்கிறார். தன்னை பழிதீர்க்க சிலர் நினைப்பதாகவும் தனக்குப் பாதுகாப்பளிக்கும்படியும் பொய்ரோவிடம் கோருகிறார் அவர். பொய்ரோ மறுக்கிறார். அன்று இரவே ராஷே கொல்லப்படுகிறார்.
அதே நேரத்தில் ரயில், ஒரு பனிச் சரிவில் சிக்கி தடம்புரண்டுவிடுகிறது. அதிலிருந்து ரயில் மீட்கப்படுவதற்குள் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் நிர்பந்தம் பொய்ரோவுக்கு. ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவர் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது. 1934ல் வெளிவந்த இந்த கதையின் முடிவு எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
நாவலில், கொலையைச் சுற்றியும் அதன் பின்னணியைச் சுற்றியும் கதை பின்னப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் படம் துப்பறிவாளரான பொய்ரோவைச் சுற்றியே நடக்கிறது. "என் பெயர் ஹெர்க்யூல் பொய்ரோ. அனேகமாக உலகில் நானே மாபெரும் துப்பறிவாளன்" என்று அறிவித்தபடி, கென்னத் பிரனா பொய்ரோ அறிமுகமாகும் காட்சியிலேயே படம் சூடுபிடித்துவிடுகிறது.
அகாதா கிரிஸ்டியின் நாவலைப் படித்துவிட்டவர்களுக்கு அதில் இருந்த முழுமை இதில் இல்லையென்றும் சிட்னி லூமே இயக்கத்தில் 1974ஆம் வருடம் வெளிவந்த படம் இதைவிடச் சிறந்த தயாரிப்பு என்றும் தோன்றக்கூடும்.
ஆனால், எந்த தயாரிப்புமின்றி படத்தைப் பார்ப்பவர்கள் உண்மையிலேயே அசந்துபோவார்கள். பெரிய ஆக்ஷன் காட்சிகள் கிடையாது. ஆனால், ரசிக்கத்தக்க வசனங்கள், ஓவியங்களுக்கு நிகரான காட்சிகள் ஆகியவை மூச்சை நிறுத்தச் செய்கின்றன.
வால்கைரி, டன்க்ரிக் படங்களில் அசத்திய கென்னத் பிரனாவுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடு, ஹெர்க்யூல் பொய்ரோவாகவும் வரும் கென்னத் பிரனா, பாத்திரத்தோடு மிகவும் பொருந்திப்போகிறார். அதேபோல, ராஷேவாக வரும் ஜானி டெப்புக்கு இது மிக முக்கியமான படம்.
ஆனால், சில காட்சிகள் உறுத்துகின்றன. ரயில் தண்டவாளத்தில் பனி குவிந்துவிடுவதால் ரயில் பயணம் தடைபடுவதாக நாவலில் வரும். ஆனால் இந்தப் படத்தில் பனிச்சரிவில் சிக்கி ரயில் தடம்புரண்டுவிடுகிறது. பத்துப் பதினைந்து பேர், பனியை அகற்றி மீண்டும் எஞ்சினை தூக்கி நிறுத்துவது நம்பும்படியாக இல்லை. படம் பிரதான கதைக்குள் நுழையவும் சிறிது நேரம் பிடிப்பது பலருக்கு சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்