சினிமா விமர்சனம்: நெஞ்சில் துணிவிருந்தால்

'அறம் செய்து பழகு' என்ற பெயரில் துவக்கப்பட்ட படம், பிறகு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று பெயர் மாற்றப்பட்டு இப்போது வெளியாகியிருக்கிறது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையின்போது "இப்படியும் நடக்கக்கூடுமோ?" என்று அஞ்ச வைக்கக்கூடிய ஒரு கதையை எடுத்துக்கொண்டு, ஒரு சுவாரஸ்யமான த்ரில்லராக்க முயற்சித்திருக்கிறார் சுசீந்திரன். ஆனால், அப்படி ஆகவில்லை.

குமாரும் (சந்தீப்) மகேஷும் (விக்ராந்த்) நண்பர்கள். குமாரின் தங்கை அனுராதா (சாதிகா) ஒரு எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ள மருத்துவர். மேற்படிப்புப் படிக்க காத்திருப்பவர். அவரை மகேஷ் காதலிக்கிறார். நகரிலிருக்கும் கொடூரமான கூலிப்படை ஒன்று, திடீரென மகேஷை கொல்ல முடிவுசெய்கிறது.

இதற்கான காரணத்தைத் தேடுகிறார் குமார். அந்தத் தேடுதலில், கொலைக்கான இலக்கு உண்மையில் மகேஷ் இல்லை, தன் தங்கை அனுராதாதான் என்ற தகவல் தெரியவருகிறது. அனுராதா படிக்க விரும்பும் மருத்துவ மேற்படிப்பே அந்தக் கொலைக்குக் காரணம் என்றும் புரிகிறது.

நாட்டின் உயரிய மருத்துவக் கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த சந்தேக மரணத்தை இந்தக் கதை நினைவுபடுத்துகிறது.

சாதாரணமாக இருக்கும் சிலரது வாழ்வில் கொடூரமானவர்கள் புகும் நிலையில், அதனை அவர்கள் எதிர்கொள்ளப் போராடுவதையும் மருத்துவக் கல்விக்குப் பின்னால் இருக்கும் வணிகத்தையும் ஒரே கதையில் சொல்கிறார் சுசீந்திரன்.

தவறான சிகிச்சையால் நாயகனின் தந்தை மரணமடைவதிலிருந்து படம் துவங்குவதால், அதுதான் படத்தின் மையப்புள்ளியோ என்று தோன்றுகிறது. பிறகு, ஒரு கந்து வட்டிக்காரனிடம் கடுமையாக நாயகனும் அவரது நண்பரும் மோதுகிறார்கள்.

ஆகவே அந்த கந்துவட்டிக் கும்பல் ஏதாவது செய்யப்போகிறதோ என்று யோசிக்கிவைக்கிறார். பிறகு பார்த்தால், மருத்துவக் கல்லூரிக்கு இடம் கிடைப்பதில் வந்து நிற்கிறது படம்.

கதையின் மையப்புள்ளியை கண்டுபிடிப்பதில் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் சிறு குழப்பம் ஒருபுறமிருக்க,படமாக்கப்பட்ட விதத்திலும் அலட்சியம் தென்படுகிறது. பல காட்சிகள் தொலைக்காட்சித் தொடரின் காட்சிகளைப் போல மிகச் சாதாரணமாக கடந்து செல்கின்றன.

குமாருக்கு உதவிசெய்வதாக வரும் காவல்துறை அதிகாரி, படத்தின் முக்கியமான முடிச்சுகளை அவிழ்ப்பதில் பெரிதாக எந்தப் பங்கும் ஆற்றுவதில்லை. அதனால், படம் நெடுக வரும் அந்தப் பாத்திரம் அனாவசியமாகப்படுகிறது.

தவிர, தன் மகளுக்கு கல்லூரியில் இடம் கிடைப்பதற்காக ஏதாவது செய்யச்சொல்லும் ஆடிட்டர், கடைசியில் காவல்துறையில் உண்மையைச் சொன்ன பிறகும், கூலிப்படையைச் சேர்ந்த வில்லன் கொலை செய்வதில் உறுதியாக இருப்பது ஏன்?

படத்தின் ஒளிப்பதிவும் அவ்வளவு சிறப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. படத்தில் பல்வேறுவிதமான வண்ணங்கள் வந்துசெல்கின்றன.

படத்தின் நாயகர்களாக வரும் சந்தீப்பிற்கும் விக்ராந்திற்கும் வில்லன் துரைப்பாண்டியாக வரும் ஹரீஷ் உத்தமனுக்கும் இது ஒரு நல்ல முயற்சி.

மெஹ்ரீன்தான் படத்தின் நாயகி என்றாலும் அனுராதாவாக வரும் சாதிகாவே படத்தின் நாயகியைப் போல தென்படுகிறார். படம் பார்த்து முடித்த பிறகு, அதில் சூரி நடித்திருப்பதே மறந்துவிடுகிறது.

சுசீந்திரனின் முந்தைய படங்களை மனதில் வைத்துப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமளிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :