சினிமா விமர்சனம்: அறம்

நயன்தாரா

தமிழில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்கள் பொதுவாக வெற்றிபெறுவதில்லை. நயன்தாரா நடித்த மாயா, அனுஷ்கா நடித்த அருந்ததி, ரித்திகா சிங் நடித்த இறுதிச் சுற்று, ஜோதிகா நடித்த மொழி ஆகிய படங்கள் விதிவிலக்குகள். கோபி நயினார் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்த விதிவிலக்குகளின் வரிசையில் சேரக்கூடும்.

குடிநீர் பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவெடுக்கும் நேரத்தில் அதன் தொடர்ச்சியாக உருவாகக்கூடிய வெவ்வேறு பிரச்சனைகளும் முக்கியமானவை. அதில் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து, ஒரு விறுவிறு த்ரில்லராக சொல்லியிருக்கிறார் கோபி நயினார்.

ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அருகில் உள்ள ஒரு எல்லைப்புற கிராமம். குடிநீரே கிடைக்காத அந்தக் கிராமத்தில் அன்றாட வாழ்க்கைக்கே போராடி வருகிறது சுமதியின் (சுனு லட்சுமி) குடும்பம். காட்டு வேலைக்குச் செல்லும்போது தன் நான்கு வயது மகள் தன்ஷிகாவையும் உடனழைத்துச் செல்கிறாள் சுமதி. எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை, அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்துவிடுகிறது.

இந்தக் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட நேரடியாக களத்திற்கு வருகிறார் மாவட்ட ஆட்சியர் மதிவதனி (நயன்தாரா). அதிகாரவர்க்கம், பொதுமக்கள், அரசியல்வாதிகளிடமிருந்து வரும் அழுத்தங்களை மீறி அந்தக் குழந்தையை மாவட்ட ஆட்சியரால் மீட்க முடிகிறதா என்பதே மீதிக் கதை.

அரசியல்வாதிகள் சொல்வதைக்கேட்காமல், தன்னிச்சையாக குழந்தையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டதால் மதிவதனி இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணையை எதிர்கொள்வதாகத் தொடங்கும் படம், அந்த விசாரணையின் வழியாக பின்னோக்கி பயணம் செய்கிறது.

நயன்தாரா

எல்லையோர கிராமங்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சனையையும் ஏழ்மையையும் பின்னணியாக வைத்து மெல்ல மெல்ல தீவிரமடையும் படம், குழந்தை ஆழ்துளைக் குழிக்குள் விழும்போது ஒரு த்ரில்லராக உருவெடுக்கிறது. அந்த நொடியிலிருந்து படம் முடிவடையும்வரை, சீட் நுனியில் உட்காரவைக்கிறது திரைக்கதை.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்தால் என்னவெல்லாம் நடக்கும், மீட்பதில் இருக்கும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றையும் துல்லியமாக கண் முன் கொண்டுவருகிறார் இயக்குனர்.

காணொளிக் குறிப்பு, கடலுக்குள் ஒரு கல்லறை! (காணொளி)

திரைக்கதை படத்தின் முக்கியமான பலம் என்றால், நயன்தாரா இன்னொரு பலம். தமிழில் தற்போது நடித்துவரும் வேறு யாரையும் இந்தப் பாத்திரத்தில் பொருத்திப்பார்க்க முடியாது. ஒட்டுமொத்தப் படத்திலும் அவருக்கு இரண்டே ஆடைகள்தான். அவருடைய முகபாவங்கள் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுகின்றன.

அடுத்ததாக இந்தப் படத்தில் ஆச்சரியப்படுத்துபவர்கள், சுமதியாக நடித்திருக்கும் சுனு லட்சுமியும் தன்ஷிகாவாக நடித்திருக்கும் குழந்தையும். சுனு லட்சுமி தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு பெரும் கவனத்தைப் பெற்றுத்தரக்கூடும்.

இந்தப் படத்தில் தீயணைப்புத் துறை அதிகாரியாக வருபவர்கள், அரசு அதிகாரிகளாக வருபவர்கள் ஏற்கனவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டியவர்கள்தான். ஆனால், அவர்கள் இனி இந்தப் படத்தின் பாத்திரங்களாகவே நினைவுக்கு வருவார்கள்.

அறம்

இம்மாதிரி ஒரு மீட்பு நடவடிக்கையை ஒளிப்பதிவுசெய்வது அவ்வளவு சாதாரணமானதில்லை. பெரும்கூட்டம், பெரிய பள்ளங்களைத் தோண்டுவது என நிஜமாகவே ஒரு மீட்பு நடவடிக்கையை கண்முன் நிறுத்துகிறது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு. ஜிப்ரானின் இசை படத்தின் பதற்றத்தைக் கூட்டுகிறது.

ஆனால், படத்தில் சில பலவீனமான அம்சங்களும் இருக்கின்றன. இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தையும் தண்ணீர் பிரச்சனையையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி படம் முழுக்க கேள்வியெழுப்பப்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப முடியும் இந்தியாவால் ஏன், தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியவில்லை, குழிக்குள் விழுந்த குழந்தையை ஏன் தீர்க்க முடியவில்லை என்ற கேள்விகளை படத்தில் வரும் பாத்திரங்களும் தொலைக்காட்சி விவாதங்களும் எழுப்புகின்றன.

இது குடிநீர் பிரச்சனைக்கு உண்மையிலேயே செய்யப்பட வேண்டிய தீர்விலிருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடும்.

காணொளிக் குறிப்பு, லண்டனில் செயல்படும் உலகின் முதல் நிலத்தடி விவசாயப் பண்ணை

குழிக்குள் விழும் குழந்தை - அதை மீட்கும் ஆட்சித் தலைவர் என்று படம் இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அதற்குப் பின்னணியில் அரசியலை வைக்கும்போது, தீர்வையும் தெளிவாக இயக்குனர் முன்வைத்திருக்க வேண்டும். இதில் வரும் தீர்வுகள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில தீர்வுகளை ஞாபகப்படுத்துகின்றன.

படத்தின் வரும் தொலைக்காட்சி விவாதக் காட்சிகள் படத்தின் வேகத்தை, திடீர் திடீரென மட்டுப்படுத்தி படம் ஏற்படுத்தும் தாக்கத்தை குலைக்கின்றன. அந்தக் காட்சிகள் இல்லாமலிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும்.

இதையெல்லாம் மீறி, ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :