நடிகர் மம்மூட்டி குறித்து பேசியதால் நடிகை மீது ஆபாச 'ஆன்லைன் தாக்குதல்கள்'

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னணி மலையாள நடிகரான மம்மூட்டி மற்றும் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் ஆகிய இருவரில் 'யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?" என தொலைக்காட்சி பேட்டியில் தன்னிடம் கேட்டதற்கு நடிகை அன்னா ராஜன் அளித்த பதில், சமூகவலைத்தளத்தில் மம்மூட்டி ரசிகர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

அன்னா ரேஷ்மா ராஜன்

பட மூலாதாரம், ANNA RESHMA RAJAN

படக்குறிப்பு, அன்னா ரேஷ்மா ராஜன்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இளம் நடிகையான அன்னா ரேஷ்மா ராஜனிடம், "நீங்கள் மம்மூட்டி அல்லது துல்கர் - யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அன்னா, "நான் துல்கருக்கு ஜோடியாக நடிப்பேன், மம்மூட்டி அவருக்கு அப்பாவாக நடிப்பார்" என பதில் கூறினார். மேலும் வேறொரு திரைப்படத்தில் நான் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிப்பேன் என்று தெரிவித்தார்.

இதனால், அன்னா மீது சமூக வலைத்தளங்களில் மம்மூட்டி ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகை அன்னா வெளியிட்ட ஃபேஸ்புக் நேரலையில் 'நான் இருவருடனும் நடிக்கவேண்டும் என்பதற்காக அப்படி ஒரு பதிலை சொன்னேன். மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கவும் தயார்" என கூறியுள்ளார். மேலும், இந்த நேரலையில் அவர் கண்ணீர் மல்க உணர்ச்சிகரமாக பேசினார்.

'நான் அப்படி கூறவில்லை'

நான் சொன்னது என்ன? அன்னா விளக்கம்

பட மூலாதாரம், ANNA RESHMA RAJAN

படக்குறிப்பு, நான் சொன்னது என்ன? அன்னா விளக்கம்

தனது தொலைக்காட்சி பேட்டி குறித்து பிபிசி தமிழிடம் நினைவுகூர்ந்த நடிகை அன்னா ராஜன் கூறுகையில், ''நான் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆன்லைன் ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டன. அதனால் மம்மூட்டியின் ரசிகர்கள் கோபமடைந்து என் மீது சமூக வலைத்தளங்களில் தாக்குதல் நடத்தினர்'' என்று கூறினார்.

''நான் துல்கருக்கு ஜோடியாக நடிப்பேன், மம்மூட்டி அவருக்கு தந்தையாக நடிப்பார். மற்றொரு திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் என்று கூறினேன். இது தவறாக சித்தரிக்கப்பட்டது'' என்று அன்னா ராஜன் குறிப்பிட்டார்.

ரசிகர்களுக்கு புரியவைக்க தான் ஃபேஸ்புக் நேரலையில் விளக்கமளித்ததாக தெரிவித்த நடிகை அன்னா, ''நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசிய மம்மூட்டி இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இருவரும் சேர்ந்து எதிர்காலத்தில் பணியாற்றலாம் என்று கூறினார்'' என மேலும் தெரிவித்தார் அன்னா.

பொதுவெளியில் இது குறித்து மம்மூட்டி கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறித்து தான் கவலைப்படவில்லை என்று கூறிய அன்னா, ரசிகர்கள் நடத்திய தனி மனித தாக்குதல்கள் குறித்துதான் ஆரம்பத்தில் காயமடைந்ததாகவும், பின்னர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான்

நடிகை அன்னா மீது மம்மூட்டி ரசிகர்கள் தொடுத்த ஆன்லைன் தாக்குதல்கள் மற்றும் இது குறித்து மம்மூட்டி பொதுவெளியில் கருத்து கூறாதது பற்றி அறிய அவரை தொடர்பு கொண்ட போது, அவரது தனி செயலர் ஜார்ஜ் இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

ரசிகர்களின் ஆவேச மனநிலை ஏன்?

தங்களின் அபிமான நடிகர்கள் குறித்து கருத்து தெரிவித்தாலோ அல்லது அவர்களின் திரைப்படங்களை விமர்சனம் செய்தாலோ, சமூகவலைத்தளத்தில் நடக்கும் தனி நபர் தாக்குதல்கள் மற்றும் நடிகர்கள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் 'ஹீரோ ஒர்க்ஷிப்' எனப்படும் தனி நபர் துதி குறித்து பெண் பத்திரிகையாளரான கே.கே. ஷாஹீனா, பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''மோகன் லால், மம்மூட்டி போன்ற பல மலையாள நடிகர்களுக்கு கேரளாவில் ரசிகர் மன்றங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலும் ஆண் நடிகர்களுக்கு மட்டும்தான் ரசிகர் மன்றம் உள்ளது. இதே போல்தான் தென் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் நடிகர்கள் ஊக்குவிப்புடன் நல சேவைகள் ஆகிய பணிகள் செய்வதோடு இந்த மன்றங்கள் தீவிரமாக உள்ளன'' என்று ஷாஹீனா தெரிவித்தார்.

ஷாஹீனா

பட மூலாதாரம், Shaheena

படக்குறிப்பு, ஷாஹீனா

''இந்த சம்பவத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயல்பாக பதிலளித்த நடிகை அன்னா ராஜனை மம்மூட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளில் அதிகப்படியான தனி மனித தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர்'' என்று ஷாஹீனா மேலும் கூறினார்.

'ஒரு பெண் படிக்க முடியாத அளவு வசவு வார்த்தைகள்'

அன்னாவுக்கு ஆதரவளித்த நடிகை ரீமாவும் தாக்குதலுக்கு உள்ளானார் என்று தெரிவித்த ஷாஹீனா, ''ரீமா மற்றும் அன்னா மீது சமூகவலைத்தளத்தில் ரசிகர்களால் நடத்தப்பட்ட மிக மோசமான வார்த்தை பிரயோகம் மற்றும் ஆபாச அர்ச்சனை ஆகியவற்றை ஒரு பெண்ணாக என்னால் படிக்க முடியவில்லை'' என்று ஷாஹீனா குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் மோகன் லாலின் திரைப்படம் குறித்து ஒரு பெண் தெரிவித்த கருத்து அவருக்கு கடுமையான வசவுகளை பெற்று தந்தது என்று கூறிய ஷாஹீனா, ''மூத்த நடிகர்கள் தவறாக நடந்து கொள்ளும் தங்கள் ரசிகர்கள் மீது எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை. ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு அவர்களின் அபிமான நடிகர்களே தூண்டுதலாக உள்ளனர்'' என்று குற்றம்சாட்டினார்.

தன் ரசிகர்கள் சார்பாக நடிகை அன்னாவிடம் மம்மூட்டி வருத்தம் மற்றும் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஷாஹீனா விருப்பம் தெரிவித்தார்.

நடிகர் விஜய் திரைப்படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளர் மீது நடந்த தாக்குதல்

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்' பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் சிலர் ரசிகர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

தன்யா ராஜேந்திரன்

பட மூலாதாரம், DHANYA RAJENDRAN

படக்குறிப்பு, தன்யா ராஜேந்திரன்

அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

'விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாத ரசிகர்களின் மனநிலை'

இந்நிலையில், விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாத ரசிகர்களின் மனபோக்கு மற்றும் அதீத தனி மனித துதிபாடல்கள் சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளனவா என்று கேட்டதற்கு எழுத்தாளரும், விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி '' நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் அபிமானிகள் போன்றோர் தங்களின் அபிமானத்துக்குரியவர் மீது ஏதாவது கருத்து வந்தால் உடனடியாக சமூகவலைத்தளத்தில் தனிநபர் தாக்குதலை தொடங்கிவிடுகின்றனர்'' என்று கூறினார்.

''இவ்வகை தாக்குதல்களில் நடிகர்களின் பங்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நடிகர்கள் இதனை ஊக்குவிப்பதாக தெரியவில்லை. ரசிகர்கள் இங்கிதம் மற்றும் பண்பாடு தெரியாதவர்களாக இருந்தால், அதற்கு நடிகர்கள் பொறுப்பாக மாட்டார்கள்'' என்று பத்ரி சேஷாத்ரி கூறினார்.

யார் காரணம்? நடிகர்களா? ரசிகர்களா?

''தங்கள் மீது விமர்சனம் செய்தவரை திட்டினால், அவ்வாறு திட்டியவருக்கு அஜீத், மோகன் லால், விஜய் என்று எந்த நடிகராவது பணம் கொடுப்பார்களா? இல்லை; ரசிகர்களாக ஏதாவது நினைத்துக் கொண்டால் அதற்கு நடிகர்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும்? என்று பத்ரி கேள்வி எழுப்பினார்.

பத்ரி சேஷாத்ரி

பட மூலாதாரம், BADRI SESHADRI

படக்குறிப்பு, பத்ரி சேஷாத்ரி

இது போன்ற வசவுகளை, தாக்குதல்களை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய பத்ரி, ''ஆனால், பெண்கள் மீது கடுமையான தாக்குதல் நடப்பதால் அவர்கள் குறிப்பிட்ட சமூக வலைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும். அடுத்தபடியாக காவல்துறையை நாடுவதே சிறந்த வழி'' என்று மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :