திரைப்பட விமர்சனம்: இட் (IT)

பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய IT என்ற திகில் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. 1986ல் வெளிவந்த இந்த நாவல், 1990லேயே தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட நிலையில், இப்போது சினிமாவாக வெளியாகியிருக்கிறது.

திரைப்பட விமர்சனம்: IT

பட மூலாதாரம், ITTHEMOVIE

அமெரிக்காவின் மெய்னில் உள்ள சிறிய நகரம் டெர்ரி. ஒரு மழை நாளில் தன் தம்பி ஜார்ஜிக்கு ஒரு காகிதக் கப்பலைச் செய்து தருகிறான் பில். ஜார்ஜி அதை வைத்து மழையில் விளையாடும்போது, கப்பல் ஒரு வடிகாலுக்குள் விழுந்துவிடுகிறது. அதற்குள் எட்டிப்பார்க்கும் ஜார்ஜியை, கோமாளி வடிவிலிருக்கும் 'அது' கடித்துவிடுகிறது. பிறகு கொன்றும் விடுகிறது.

தம்பியின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் பில். அவனைப் போல வெவ்வேறு பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் ஏழு சிறுவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவர்களில், தந்தையால் பலாத்காரத்திற்குட்படும் சிறுமியும் ஒருத்தி.

இவர்கள் ஏழு பேரும் சேர்ந்து, பள்ளிக்கூடத்தில் தங்களைத் துன்புறுத்தும் ஹென்றியின் குழுவை எதிர்கொள்வதோடு, டெர்ரி நகரை ஆட்டிப்படைக்கும் "அதை" எதிர்கொள்ளவும் முடிவுசெய்கிறார்கள்.

ஸ்டீஃபன் கிங்கின் நாவல்கள் பெரும்பாலும் அச்சத்தை சம்பவங்களின் மூலமாகவோ, காட்சிகளின் மூலமாகவோ ஏற்படுத்தாமல், நம் ஆழ்மன அச்சங்களின் மூலம் உருவாக்குபவை. அதை சினிமாவில் செய்வது மிகக் கடினமான காரியம். Mama என்ற திகில் படத்தை உருவாக்கிய ஆண்டி, அந்த அச்சத்தை படம் பார்ப்பவர்களிடம் எழுப்ப கடும் முயற்சி செய்தாலும் முழு வெற்றிகிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்டீஃபன் கிங்கின் IT நாவலில், அந்த "அது" எப்படி டெர்ரி நகருக்கு வந்தது, அதன் பின்னணி என்ன, அதை எதிர்கொள்வது எப்படி, அந்தச் சிறுவர்களுக்குள் உருவாகும் உறவு எத்தகையது என்பதெல்லாம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும்.

ஆனால், இந்த படத்தில் மேலே சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லை என்பதால், நாவலைப் பற்றி அறியாமல் படம் பார்ப்பவர்களுக்கு, "அது" என்பது பேயா, சாத்தானா, எங்கிருந்து அந்த நகரத்திற்கு வந்தது, ஏன் வந்தது என்ற கேள்விகள் எழக்கூடும். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் படத்தை முடிந்த அளவு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல முயற்சிக்கிறார் ஆண்டி.

படத்தில் வரும் ஏழு சிறுவர்களும் ஏழுவிதமான குணாதிசயங்களையும் பிரச்சனைகளையும் கொண்டவர்கள், வெவ்வேறுவிதமானவர்கள். அதனை மனதில் பதியவைப்பதில் வெற்றிபெற்றுவிடுகிறார் இயக்குனர். படத்தின் இசை, ஒளிப்பதிவு ஆகிய அம்சங்களில் குறைசொல்ல முடியாது. காட்சிகளில் இல்லாத அச்சத்தை இசையும் ஒளிப்பதிவும்தான் தொடர்ந்து தக்கவைக்கின்றன.

திரைப்பட விமர்சனம்: IT

பட மூலாதாரம், ITTHEMOVIE

இந்த சிறுவர்கள் அனைவருக்கும் வெவ்வேறுவிதமான பயம் இருக்கிறது. அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்களோ அந்த உருவத்தை எடுத்துதான் "அது" அவர்களை அச்சுறுத்துகிறது. இதைப் படத்தில் புரிந்துகொள்வதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.

இந்தப் படத்தில் ஜார்ஜி, முதன்முதலாக "அதைச்" சந்திக்கும்போது முதுகுத்தண்டு சில்லிடுகிறது. ஆனால், அந்த அச்ச உணர்வை படம் முழுக்க இயக்குனரால் தக்கவைக்க முடியவில்லை.

திகில் படம் என்ற வகையிலிருந்து 'ஃபேண்டஸி' வகை படமாக மாறிவிடுகிறது IT. தி கான்ஜூரிங், ஆனபெல் ஆகிய படங்களின் பெயரை இந்தப் படத்தின் போஸ்டர்களில் பயன்படுத்தியிருப்பதால், அதுபோன்ற ஒரு திகில் படத்தை எதிர்பார்த்துவந்தவர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :