பாலியல் மற்றும் அரபு உலகம்: 'நறுமணம் வீசும் பூந்தோட்டம்' - பழங்கால அரபு மொழியின் காமசூத்திரம்
பதினைந்தாம் நூற்றாண்டில், அரபு மொழியில் எழுதப்பட்ட, பாலுணர்வைத் தூண்டும் கதைகளின் தொகுப்பான 'நறுமணம் வீசும் பூந்தோட்டம்' என்னும் நூல், பாலியல் மற்றும் அரபு உலகைப் பற்றிய பார்வைகளுக்கு சவால் விட்டது என்று, ஜுபின் பெக்ராட் எழுதுகிறார்.

பட மூலாதாரம், Wikimedia Commons
மேற்கு உலகின் பல பாலியல் இலக்கியங்களுக்கும் முன்னால், வாத்சாயனா எழுதியாதாகக் கூறப்படும் பழங்கால சமஸ்கிருத இலக்கியமான காமசூத்ரா இருந்தது. பாலியல் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் மிகவும் சிறப்பானதாக அதுவே கருதப்பட்டது.
பழங்கால ரோமானியர்களின் காலத்தில் எழுதப்பட்ட, ஆண்-பெண் உறவைப்பற்றிய லத்தீன் மொழி இலக்கியமான அர்ஸ் அமடோரியாவைப் பின்பற்றும் போலி நாணம் கொள்வோர்க்கும், பாலியல் பற்றிய அறிவு அதிகம் இல்லாதோர்க்கும் வாத்சாயனா இயற்றிய காமசூத்ரா நன்கு அறியப்பட்டதாக இருந்தது. அதன் பழம்பெருமையையும் கடந்து பலரும் அதைப் பற்றி எள்ளலுடன்தான் இருந்தனர்.
காமசூத்ராவைப் போல் கற்பிக்கும் தன்மை உடைய நூலாக அல்லாமல், நறுமணம் வீசும் பூந்தோட்டம் நூலை, ஆண் உறுப்பைப் பெரிதாக்குவது உள்ளிட்ட பல விடயங்களில், அறிவையும் போதிக்கும் நூலாகப் பலரும் பார்த்தனர். பாலியலுக்கு ஆதரவான எல்லாவற்றையும் பற்றிப் பேசும் அந்நூல், பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தது.

பட மூலாதாரம், Alamy
இன்னொரு அரேபிய நூலான ஆயிரத்தி ஒரு இரவுகள் (One Thousand and One Nights) போல மிகவும் இயல்பான நடையைக் கொண்ட இந்நூலில் பாலியல் புணர்ச்சியைப் பற்றிய விவரனைகள் வாத்சாயனாவையே வெட்கப்பட வைக்கும் வகையில் உள்ளன.
பர்ட்டன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பயன்படுத்திய பிரெஞ்சு நூலின் 21-ஆவது அத்தியாயத்தில் ஓரினச்சேர்க்கை மற்றும், இயற்கைக்கு மாறான பாலுறவு பற்றி இருந்தது. ஆனால் அந்த அத்தியாயம் மொழிபெயர்ப்பில் இல்லை. பர்ட்டன் அதன் மறுபதிப்பில் சேர்க்க விரும்பியதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் அந்தக் கலப்படம் இல்லாத பதிப்பை வெளியிடும் முன்னரே அவர் இறந்துவிட்டார். அந்த மொழிபெயர்ப்புக்கான அவரின் குறிப்புகள் உள்பட அவரின் மற்ற எழுத்துகளும் அவர் மனைவி இஸபெல்லுடன் சேர்த்து எரிக்கப்பட்டுவிட்டன.
'தவறான புரிதல்களின் தொகுப்பு'
பாலியல் தன்மை இல்லாத சமூகமாகவும், பாலியல் என்பது விலக்கப்பட்டதாகவும் கருதப்படும் அரேபிய சமூகத்தில், நறுமணம் வீசும் பூந்தோட்டம் என்னும் பாலியல் பற்றிய வெளிப்படையான விவரனைகளைக் கொண்டுள்ள இந்த நூல், இறையருள் பெற்றதாகக் கருதப்பட்டது என்று ஆய்வாளர் சாரா இர்விங் கூறுகிறார்.
"இந்த பாலுறவைத் தூண்டும் நூல்கள் மத ஒப்புதலைப் பெற்றிருந்தன. அவற்றில் உள்ள ஆலோசனைகள், இறைவன் கொடுத்த வரமாகக் கருதப்பட்டன," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Alamy
இந்த நூல் அரபு மொழியின் ஆகச்சிறந்த இலக்கியங்களுள் ஒன்றாக வைக்கப்பட்டது. தி அரேபியன் நைட்ஸ் என்று பர்ட்டனால் தலைப்பிடப்பட்ட இந்த நூல், பாலியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அந்நூலில் உள்ள ஒரு புகழ்பெற்ற கதையில், தன் மனைவி தனக்கு துரோகம் செய்ததை அறிந்த பெர்சிய இளவரசன் ஷாஹ்ரியார் , அவளைக் கொலை செய்கிறான். பெண்களை வெறுக்கத் தொடங்கும் அவன், தினம் தினம் இரவில் ஒரு புது மணப்பெண்னைப் புணரவும், அவர்கள் அவனுக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருக்க அவர்களை மறுநாள் காலையில் கொல்லவும் சபதம் ஏற்கிறான்.
அமைச்சரின் மகள் ஷார்ஷாதை அவன் ஒரு நாள் மணம் முடிக்கிறான். படுக்கையில் அவன் மிகவும் மகிழ்ச்சியடையும் வகையில் அவள் நிறையக் கதைகள் சொல்கிறாள். அதில் மயங்கிய ஷாஹ்ரியார் அவளை ஒவ்வொரு இரவும் கதைகள் சொல்லச் சொல்கிறான். ஒரு காலகட்டத்தில், அவள் அவன் மனதைக் கவர்கிறாள். பின்னர் அவளைக் கொல்லாமல், தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறான்.

பட மூலாதாரம், Alamy
அத்தொகுப்பில் இடம்பெற்ற நன்கு அறியப்பட்ட சில கதைகள் பிற்காலத்தில் குழந்தைகளுக்கான படமாகவும், கேலிச் சித்திரங்களாகவும் மாற்றப்பட்டன. ஆனால் அந்தப் படைப்புகளின் உண்மைக் கதைகள் அப்பாவித்தனமானவை அல்ல.
ஒன் தவுசண்ட் அண்ட் ஒன் நைட்ஸ் நூலுக்கு இணையான வலிமையான, பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்ட நூல் அரேபிய இலக்கியத்தில் இல்லை என்று 2010-இல் ராபர்ட் இர்வின் எழுதினார். ஆனால் உண்மையில், பூந்தோட்டம் மற்றும் ஷார்ஷாதின் இரவுகள் ஆகிய நூல்களைத் தவிர அல்-ஜாஹிஸ் இளம் ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி எழுதியவை, 10-ஆம் நூற்றாண்டில் அல்-காதிப் எழுதிய என்சைக்லோபீடியா ஆஃப் ப்ளெஷர் (Encyclopaedia of Pleasure) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல், ஓரினச்சேர்க்கை பற்றிய குறிப்புகளை உடைய அல்-ஹரிரியின் அவைகள் உள்ளிட்ட நூல்கள் அந்த வரிசையில் உள்ளன.

பட மூலாதாரம், Alamy
நவீன காதல்
பாலுணர்வைத் தூண்டும் அரேபிய நூல்கள் மத்திய காலத்திற்கு உரியவை மட்டுமல்ல. புதிய தலைமுறை அரபு எழுத்தாளர்களும் அவற்றை உயிர்ப்புடன் வைத்துள்ளனர். லைலா மராவேன் எழுதிய The Sexual Life of an Islamist in Paris (2010) என்னும் நூல் ஒரு அல்ஜீரிய, கன்னித்தன்மை உடைய ஆணின் அனுபவங்களை நகைச்சுவையாக விவரிக்கிறது.
அம்மர் அப்துல் ஹமீதின் மென்சுரேஷன் (Menstruation) என்னும் நூல் ஒரு இமாமின் மகன் ஒரு மணமான பெண்ணுடன் கொண்டுள்ள உறவைப் பற்றியது.
இப்படியான நூல்கள் மத்திய வரலாற்றுக் காலத்திலும், தற்காலத்திலும் இருப்பது குறித்து அரபு மொழி அல்லாத வாசகர்கள் வியப்படைய வேண்டுமா எனும் கேள்விக்கு, சிரியாவைச் சேர்ந்த அறிஞர் சல்வா அல் நெய்மி, மறுப்பு சொல்வதுடன், "அரபு மொழி ஒரு பாலியல் மொழி," என்கிறார்.

பட மூலாதாரம், World History Archive/Alamy
பாலியல் என்பது இஸ்லாம் மற்றும் அரபு தேசங்களில் விலக்கப்பட்ட ஒன்று என்னும் எண்ணத்திற்கு மாறாக, பாலியல் அங்கு கொண்டாடப்படுகிறது என்கிறார்.
சமூகமும், மதமும் எதைக் கட்டளையிட்டாலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஆண்கள் ஆண்களாகவும், பெண்கள் பெண்களாகவும் இருப்பார்கள்.
அதற்காக சில ஐரோப்பிய எழுத்தாளர்களும், ஓவியர்களும் கூறியதைப்போல அது ரகசியமான காமவெறி நிறைந்த கொண்டாட்டங்கள் நிகழும் இடமும் அல்ல. ஆனால், இன்று பலரும் நம்பும் அளவுக்கு அது உணர்ச்சிகளின் படுகுழியும் அல்ல. காமசூத்ரா அதிகப் புகழ் பெற்றதாக இருந்தாலும், நறுமணம் வீசும் பூந்தோட்டம் மற்றும் ஆயிரத்தி ஒரு இரவுகள் ஆகியன வாத்சாயனாவின் சீடர்களைச் சிவக்க வைக்கப் போதுமானவையாக உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












