'பெண்கள் படுக்கையில் பயன்படுகிறார்கள்': தெலுங்கு நடிகரின் கருத்தால் வலுக்கும் எதிர்ப்பு
"பெண்கள் படுக்கையில் பயன்படுகிறார்கள்" என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய தெலுங்கு திரைப்படத்துறையின் பிரபல நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகர் சலபதி ராவ் மன்னிப்பு கோரிய பிறகும், அவருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் தொடர்கின்றன.

பட மூலாதாரம், FACEBOOK
"பெண்கள் மன அமைதியை சீரழிக்கிறார்கள்" என்கிற கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அவர்கள் மன அமைதியை சீரழிக்கவில்லை என மறுப்பு கூறியே தன் கருத்தை வெளியிட்டதாக சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.
தனது பதில் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறி விளக்கம் அளித்துள்ள சலபதி ராவ், ஒருவேளை தனது கருத்து, பெண்களின் மனதை காயப்படுத்தியிருந்தால் அவர்களிடம் தான் மன்னிப்பு கோரிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு எதிர்ப்பு காட்டும் பெண்களும், பொது மக்களும் ஏன், "பெண்கள் மன அமைதியை சீரழிக்கிறார்கள்" என்கிற கருத்தை கூறும் திரைப்படத்தின் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சலபதி ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரைத்துறையில் நடித்து வரும் சலபதி ராவ், இதுவரை சர்ச்சைகளில் சிக்காதவராகவே இருந்து வந்துள்ளார்.

பட மூலாதாரம், facebook
ஆனால், அவர் கலந்துகொண்ட "ராரேண்டோய் வேடுக்க சோளத்தம்" என்கிற திரைப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் பெண்கள் குறித்தான சர்ச்சைக்குரிய கருத்தை கூறி கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
பிரபல நடிகர் நாகார்ஜுனா தயாரிப்பில், அவரது மகன் நாகசைத்தன்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் "ராரேண்டோய் வேடுக்க சோளத்தம்".
காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் விளம்பர முன்னோட்ட காட்சியின் இறுதியில் "பெண்கள் மன அமைதியை சீரழிக்கிறார்கள்" என்கிற வாக்கியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும், இந்த வாக்கியம் குறித்தான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான நாகார்ஜுனா கூட "பெண்கள் மன அமைதியை சீரழிக்கிறார்கள்" என்கிற கருத்தை நான் ஏற்க மாட்டேன் என்றார்.

பட மூலாதாரம், TWITTER
இந்நிலையில்தான், நடிகர் சலபதி ராவ் அது தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்கலாம் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












