You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்குடியின நடனமும், இரு மொழி அறிவும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறதா?
நியூசிலாந்தில், மௌரிஸ் பழங்குடியின முதியோரிடம் டிமென்ஷியா என்கிற நினைவாற்றல் இழப்பு ஏற்படுவதை தடுக்கின்ற காரணிகளில் ஒன்றாக காபா ஹாகா என்ற குழு நடனம் அமைகிறதா என்று ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
பிற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது, மெளரிஸ் பழங்குடி மக்களுக்கு அதிக சதவீத நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது என்று நியூசிலாந்து சுகாதாரத்துறை ஆய்வு தெரிவிக்கிறது.
சுகாதாரப் பராமரிப்பு குறைவாக வழங்கப்படுவது, தாழ்வான சமூக பொருளாதார தகுதிநிலை, இதய நோய்கள் மற்றும் புகைப்பிடித்தல் அதிகமாக காணப்படுவது போன்ற ஆபத்துக்கள் நிறைந்துள்ள காரணத்தால் மௌரிஸ் இன மக்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதாக 'நியூசிலாந்து ஹெரால்டு' தகவல் வெளிட்டுள்ளது.
ஆனால், 80 முதல் 90 வயது வரை இருக்கும் பழங்குடியின முதியோரிடம் பெரிய அளவில் வேறுபாடுகள் எதையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.
தங்களின் தாய்மொழி 'டெ ரியோ' மற்றும் 'ஆங்கிலம்' என இருமொழி பேசுபவர்களாக இருப்பதாலும், கலாசார நிகழ்வுகளில் அவர்களின் ஈடுபாடு அதிகமாக இருப்பதும் இதற்கு காணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அனுமானம் செய்துள்ளனர்
"மேம்பட்டப் புலனுணர்வு செயல்பாடுகள் உள்ளடங்குகிற நிகழ்வுகளில் கணிசமான பங்காற்றுதலிலும், காபா ஹாகா என்கிற பாரம்பரிய நடனத்தோடு அதிக கலாசார செயல்பாடுகளிலும் சிறந்த ஈடுபாடு காட்டுவதால் அதிக புலனுணர்வு தூண்டுதல் இவர்களுக்கு கிடைக்கலாம். இவ்வாறு இந்த புலனுணர்வு பாதுகாக்கப்படுகிறது" என்று இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
பலராலும் இணைந்து பாடப்படும் பாடல் மற்றும் நடனங்கள் இணைந்த அரங்கேற்றமே காபா ஹாகா. இவற்றில் பல நடனங்கள் மிகவும் சிக்கலான அசைவுகளை கொண்டவை. நன்றாக ஒருங்கிணைந்து அரங்கேற்ற வேண்டியதும் அவசியம்.
இவை வழக்கமாக குடும்பம் அல்லது பழங்குடியின பந்தங்களை கொண்டுள்ள குழுக்களால் நடத்தப்படுபவை அல்லது பள்ளிகளோடும் தொடர்புடையவை.
இதற்கு வயதுவந்தோர் பங்கேற்கின்ற தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெறுகின்றன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்