You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரைப்பட விமர்சனம்: எய்தவன்
- எழுதியவர், கே. முரளிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
திரைப்படம்: எய்தவன்
நடிகர்கள்: கலையரசன், சாட்னா டைடஸ், நரேன், கிருஷ்ணா, வேல ராமமூர்த்தி, கௌதம்
இசை: பார்த்தவ் பார்கோ
இயக்கம்: சக்தி ராஜசேகரன்.
மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நேரத்தில், மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டு வந்திருப்பதால் கவனத்தைப் பெற்றிருக்கும் படம்.
தாய், தந்தை, தங்கை என அழகான, எளிய குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணாவின் (கலையரசன்) தங்கை மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். அரசுக் கல்லூரியில் கிடைக்காமல் போக, தனியார் கல்லூரியில் 50 லட்சம் நன்கொடையாகக் கொடுத்து தங்கையைச் சேர்க்கிறார் கிருஷ்ணா. ஆனால், சில நாட்களில் அந்த மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லையெனத் தெரியவர, பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் கல்லூரியின் உரிமையாளர், ஆட்களைச் சேர்த்துவிடும் புரோக்கர் ஆகியோருடன் மோத நேர்கிறது. தங்கையும் கொல்லப்படுகிறார். கொதித்தெழும் நாயகன் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
படம் துவங்கும்போது, ஒருவனைக் கொலைசெய்வதற்காகப் பின்தொடர்கிறார் நாயகன். ஆனால், அந்த நபர் வேறு இருவரைக் கொல்வதற்காக செல்கிறார். அந்த வேறு இருவர் அவனைக் கொன்றுவிடுகிறார்கள். பிறகு பார்த்தால், தன் தங்கையைக் கொன்றவர்களில் அந்த இருவரும் அடக்கம் எனத் தெரியவருகிறது - இப்படியாக ஒரு சிறந்த த்ரில்லருக்கான காட்சிகளுடன் துவங்குகிறது படம்.
படத்தின் முதல் பாதியில் துண்டுதுண்டாக வரும் காட்சிகள், சம்பவங்கள் எல்லாம் இடைவேளைக்கு முன்பாகவே விளக்கப்பட்டு படம் உச்சகட்டத்தை எட்டிவிடுவதும் அட்டகாசம்.
ஆனால், இவையெல்லாம் இடைவேளை வரைதான். அதற்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியின் முதலாளியைக் கொல்ல வேண்டுமா, அம்பலப்படுத்தினால் போதுமா என நாயகன் தடுமாறுவதைப் போல, இயக்குனரும் தடுமாறியிருக்கிறார்.
படத்தில் வில்லன்களில் ஒருவராக வரும் தர்மா, ஒரு கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை ஒன்றைச் செய்கிறார். அதனை காவல்துறை ஆய்வாளரான நாயகி துப்பறிய ஆரம்பிக்கிறார். இந்த பகுதி முழுவதும் சுவாரஸ்யமாக இருந்தாலும், படத்தில் எந்தப் பங்கையும் ஆற்றாமல் தனியாக நிற்கிறது.
50 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்தாகிவிட்டது; தங்கையும் கொல்லப்பட்டுவிட்டாள். இந்த நிலையில் நாயகனின் நோக்கம் பணத்தை மீட்டு, தவறு செய்தவர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவோ அல்லது தானே பழிவாங்குவதாகவோ இருக்க வேண்டும். அப்படியில்லாமல் நாயகன் பல்வேறு திட்டங்களைத் தீட்டுகிறார். ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், எதுவும் நடக்காமல் படம் முடிந்துவிடுகிறது.
இதையெல்லாம் மீறி படத்தில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன. கலையரசன், தர்மாவாக வரும் கிருஷ்ணா, வில்லன் கௌரவாக வரும் கௌதம், ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்பு படத்தின் மிகப் பெரிய பலம்.
அதேபோல, படத்தொகுப்பு. ஒரு நான் - லீனியனர் (இந்தப் படம் அப்படி ஒரு படமாக இல்லாவிட்டாலும்) படத்திற்கே உரிய சிறப்பான படத்தொகுப்பு.
ஆனால், இடைவேளைக்குப் பிறகு படம் எதை நோக்கிச் செல்கிறது என்பது புரியாததால் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. கதாநாயகன் தங்கையின் மரணத்திற்கு பழிவாங்க விரும்புகிறாரா, வில்லனை சட்டத்தின் முன் நிறுத்த விரும்புகிறாரா, போராடும் மருத்துவ மாணவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தர போகிறாரா என்பதே புரியவில்லை. முடிவில், எதுவும் நடக்காமல் வில்லனை அடித்துத் துவைத்துவிட்டுச் செல்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக வரும் சாட்னா டைட்டசிற்கு பெரிய வேலையேதும் இல்லை.
மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் பின்னாலிருக்கும் கொடூரமான நடைமுறைகளை இந்தப் படம் ஒரளவுக்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது என்றாலும், ஒரு முழுமையான அனுபவத்தைத் தரவில்லை. நீட் தேர்வு குறித்த சர்ச்சை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், தனது நோக்கம் குறித்து தெளிவாக இருந்திருந்தால், முக்கியமான படமாக இருந்திருக்கும்.
காணொளி: கட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? பாகுபலி இயக்குநர் ராஜமௌலி பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்