You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகுபலி திரைப்படத்தால் இந்து - முஸ்லிம் மோதல் ஏன்?
பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி பல பழைய சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்துவருகிறது.
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்திருக்கும் பாகுபலி இரண்டாம் பாகம், உலகம் முழுவதும் பலமொழிகளில் வெளியாகி, பலதரப்பட்ட மக்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
பாகுபலி திரைப்படத்தை பாராட்டுபவர்களிடையே எழுந்துள்ள புதிய சர்ச்சை மதம் சார்ந்தது.
பாகுபலி: இந்துக்களின் படம்?
இந்த திரைப்படத்தின் இயக்குனர், நடிக-நடிகையர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் இந்துக்கள். படத்தின் கதாநாயகனும் இந்துக் கடவுளை வழிபடுவதாக காட்டப்படுகிறது.
பாகுபலியின் வெற்றியுடன், மதத்திற்கு முடிச்சுப் போடுகின்றனர் சிலர். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல் இருந்தாலும், கருத்துக்களை வெளியிடுவது தனி மனித சுதந்திரம் தானே. எந்தவொரு சர்ச்சையையும் மோதல் இல்லாமலேயே தீர்த்துவிட முடியாது என்பதும் உண்மையே.
பாகுபலியின் வெற்றிக்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்? சமூக ஊடகங்களின் அனல் பறக்கும் விவாதங்களில் அவை எதிரொலிக்கின்றன. பாலிவுட்டின் முப்பெரும் 'கான்கள்', சைஃப் அலி கான் மற்றும் முஸ்லிம் கலைஞர்களே சர்ச்சைகளின் இலக்கு…
பாகுபலி இரண்டாம் பாகம் வெளியானதில் இருந்து, அதன் வெற்றியுடன் இந்து மதம் தொடர்புபடுத்தப்படுகிறது.
அதோடு நிற்கவிலை, பாலிவுட்டின் கான் நடிகர்கள், இந்து தெய்வங்களை அவமானப்படுத்துகிறார்கள் என்றும் ஒரேபோடாக போட்டு தாக்குகிறார்கள்.
அவர்களும் சும்மா இல்லை, எரியும் தீயில் எண்ணெய் வார்க்கும் விதமாக, இந்து தெய்வங்களை வியாபாரப்படுத்தி ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டதாக கூறுகின்றனர்.
1997 ஆம் ஆண்டில் தொலைகாட்சித் தொடராக வந்த அனுமான் தொடர் நாடகத்தை தயாரித்தது சஞ்சய் கான் என்னும் ஒரு கான் தான் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இந்தியாவின் பிரபலமான பல பக்திப்பாடல்களை எழுதியவர் பதாயூக்னி என்பதையும், மொகமத் ரஃபி பல இந்து மத பக்திப்பாடல்களை பாடியிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அதிலும், கடவுளைக் காண உள்ளம் விளைவதை எடுத்துச் சொல்லும் 'மன் தடப்தே ஹரி தர்ஷன்…' என்ற பாடல் அனைவரின் மனதிற்கும் நெருக்காமானது.
மத அடிப்படையில் விமர்சிக்கப்படும் பாகுபலி
டிவிட்டரில், @CHAVANDNYANES19 எழுதுகிறார், ''பணம் சம்பாதிப்பதற்காக இந்து விரோத திரைப்படங்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பாகுபலி, பாலிவுட்டுக்கு நிரூபித்து காட்டிவிட்டது.''
இது அங்கித் தமோலியின் கருத்து, ''இந்துக்களை அவமானப்படுத்தி 100 கோடியை சம்பாதிக்கலாம், ஆனால் இந்துத்வாவை சிறப்புப்படுத்தி, ஒரே நாளில் அந்த பணத்தை சம்பாதித்துவிடலாம்.''
ஓ ஆமிர்கான், பாகுபலியைப் பார்த்துக் கற்றுக்கொள், ஒரு நாளில் 18 கோடி சம்பாதிக்க, கடவுளை நையாண்டி செய்யவேண்டிய அவசியம் இல்லை.
சிவலிங்கத்தை தோளில் சுமந்தால் இரண்டே நாளில் நூறு கோடி ரூபாயை சம்பாதிக்கலாம்.
''பாகுபலி இந்து திரைப்படம். இப்போது திரைப்படங்களும், மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்படுகின்றன', என்கிறார் அஞ்சனா சிங்.
''கான் நடிகர்களின் ரசிகர்கள் ஏன் பாகுபலியின் இரண்டாம் பாகத்தைப் பார்த்து வயிறெரிகிறார்கள்? ஒரு இந்தியத் திரைப்படம் உலகம் முழுவதும் நன்றாக ஓடுகிறது, அனைவராலும் பாரட்டப்படுகிறது, இதுவரை எந்தத் திரைப்படமும் இந்த சாதனையை செய்ததில்லை'' என்கிறார் ஏஷ் தனது டிவிட்டர் செய்தியில்.
ஷாருக்கானை சீண்டும் அங்கித் என்பவர், ''பாகுபலி திரைப்படம் வெளியான திரையரங்குகளில் விற்றுத் தீர்ந்த பாப்கான்களின் விற்பனைத் தொகை, ஷாருக்கானின் கடைசி திரைப்படத்தின் விற்பனைத் தொகைக்கு சமமானதாக இருக்கும்'' என்று டிவிட்டரில் பட்டாசு கொளுத்திப் போடுகிறார்.
மாஹி மட்டும் சளைத்தவரா என்ன? ''டியர் கான் பிரதர்ஸ், ரங்கூன் மற்றும் பி.கே போன்ற திரைப்படங்கள் தேவையில்லை, எங்களுக்கு பாகுபலி போன்ற திரைப்படங்களே தேவை. பாகுபலி இரண்டாம் பாகத்தின் தாக்கம் உங்களையும் தாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன்'' என்கிறார் அவர்.
'கடவுள்களை கேலி செய்து கான்கள் சம்பாதிக்கும் தொகையை பாகுபலி இரண்டாம் பாகம் ஒரே படத்தில் சம்பாதித்துவிட்டது.' இப்படிச் சொல்வது மயங்க்.
சோமு தனது டிவிட்டரில் எழுதுகிறார், ''சல்மான், ஆமிர் மற்றும் ஷாரூக் என்ற முப்பெரும் கான்களின் திரைப்படங்கள் இணைந்தும் பாகுபலியின் முதல் நாள் சாதனையை உடைக்கமுடியாது'' என்கிறார்.
திரைப்படத்தை மட்டுமே பாருங்கள், மதத்தை அல்ல
ஆதில் என்பவர் எழுதுகிறார், 'இது மிகவும் சிக்கலான விவகாரம், பாகுபலியை பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடியாது, ஏனெனில் இந்து மதம் அச்சுறுத்தலில் இருக்கிறது.'
'பாகுபலி இப்போது தான் பிறந்திருக்கும் குழந்தை, அதில் ஒரு சூப்பர்ஸ்டார் இருக்கிறார். இதை ஒப்பிடுவது தவறு என்று நினைக்கிறேன், சல்மான் கானுடன் ஒப்பிடுவதற்கு பாகுபலி பல பிறவிகள் எடுக்கவேண்டும்' என்று @salmanrules டிவிட்டர் செய்தி கூறுகிறது.
தேவி பிரசாதின் கருத்து இது, ''பாகுபலி பல சாதனைகளை செய்திருந்தாலும், பொதுவாக புதிய சாதனை படைப்பது என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ஆமிர்கான் தான். சீனாவில் தங்கள் படம் செய்த வசூலை மறந்துவிட்டீர்களா?''
இருந்தாலும், சிலர் பாகுபலி படத்தின் வெற்றியை பற்றிக் குறிப்பிடும்போது, திரைப்பட விமர்சகர்களையும் விட்டு வைக்கவில்லை.
''மத சார்பற்ற செய்தியாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் பாகுபலிக்கு இரண்டு நட்சத்திர அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள், ஆனால், தேச எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு திரைப்படங்களுக்கு ஐந்து முதல் 50 நட்சத்திர அந்தஸ்து கொடுப்பார்கள்'' என்கிறார் ஜய்காந்த் ஷிர்க் நையாண்டியாக.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்