You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியிருக்கும் பாகுபலி - 2ஆம் பாகம், உண்மையில் முதல் பாகத்திற்கு முந்தைய கதையைச் சொல்கிறது. ஒரு வகையில் பார்த்தால் Prequel என்று சொல்லலாம்.
முதலாவது பாகத்தில், மகிழ்மதி தேசத்தின் அரசனாக வேண்டிய அமரேந்திர பாகுபலியை, அவனுக்கு விசுவாசமாக இருந்த கட்டப்பா கொல்கிறான். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான் என்ற கேள்விக்குப் பதிலாக விரியும் படம் அமரேந்திர பாகுபலியின் கதையைச் சொல்கிறது. சிவகாமியால் வளர்க்கப்படும் அமரேந்திரன், தாயின் சொல்லை மீறி தேவசேனாவை திருமணம் செய்வதால், பல்லாள தேவன் மகிழ்மதியின் அரசனாக முடிசூடப்படுகிறான். இருந்தும் மக்கள் ஆதரவு அமரேந்திரனுக்கே இருக்கிறது. எதிர்காலத்தில் தன் சிம்மாசனத்திற்கு ஆபத்து வராமல் இருக்க, ஒரு திட்டம் தீட்டுகிறான் பல்லாள தேவன். அதன்படியே அமரேந்திரன் கொல்லப்படுகிறான். முடிவில், பல்லாள தேவனை வென்று, தாயை மீட்பதோடு, மகிழ்மதியின் அரசனாகிறான் மகேரந்திர பாகுபலி.
பாகுபலியின் முதலாவது பாகத்தைப் பார்க்காவிட்டால்கூட, புரிந்துகொண்டு ரசிக்கும் வகையில் இந்த இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மகிழ்மதி நகரம், குந்தள தேசம் ஆகியவற்றின் நகர அமைப்பு, யுத்தக் காட்சிகள், எருமைகள் இழுத்துச் செல்லும் ரதம், உடைந்து சிதறும் பொற்சிலை, வில் சண்டை என முதல் பாகத்தைப் போலவே, இந்த பாகமும் சினிமா ரசிகர்களின் கண்களுக்கு விருந்துதான்.
முதல் பாகத்தில் வயதான பெண்ணாக அனுஷ்காவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்களுக்கு, இந்த பாகம் ஆறுதலாக இருக்கும். தேவசேனா - அமரேந்திர பாகுபலி இடையிலான முற்பகுதி காட்சிகள், சினிமா ரசிகர்களின் நெஞ்சில் இருந்து நீண்ட நாட்களுக்கு அழியாது. தேவசேனையின் பாத்திரத்தை அனுஷ்காவைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும் என்று எண்ண வைக்கின்றன இந்தக் காட்சிகள். பல இடங்களில் இவரது கம்பீரமான ஓவியங்கள் வந்துபோவது, ஒரு காப்பியத் தன்மையை இவரது பாத்திரத்திற்கு கொடுக்கிறது.
தந்தை - மகன் என இரு பாத்திரங்களில் நடித்திருக்கும் பிரபாஸ், பல்லாள தேவனாக வரும் ராணா, அவரது தந்தையாகவரும் நாசர் ஆகியோர் முந்தைய பாகங்களிலும் வந்தவர்கள் என்பதால், புதிதாக ஆச்சரியப்படுத்தவில்லை.
முதல் பாகத்தையும் இரண்டாவது பாகத்தையும் இணைக்கும் புள்ளியான கட்டப்பாவாக வரும் சத்யராஜ், படம் நெடுக ஒரு நன்மையின் அடையாளமாக வந்துகொண்டேயிருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு.
படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் காட்சியும் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் பிரம்மாண்டமும் நுணுக்கமும் வண்ணக்கலவையும் பார்ப்பவர்களை அசரவைக்கிறது. எந்த இடத்திலும் தவறே இல்லாத ராஜமவுலியின் திரைக்கதை, படத்தின் மற்றுமொரு தூண். ஆனால், முதல் பாகத்தில் இருந்த ரசிக்க வைத்த பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை.
சிறந்த நடிகர்கள், திகைக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், துல்லியமான திரைக்கதை என பல ஆண்டுகளுக்கு நினைவுகூரத்தக்க படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் சற்றே நெருடலான அம்சம் அரண்மனையில் நடக்கும் சதிகள்தான். சிறுபிள்ளைத்தனமான திட்டங்களை பல்லாள தேவன் தீட்டுவதும், அதற்கு சிவகாமி, அமரேந்திரன் உள்ளிட்டவர்கள் பலியாவதும் படத்தின் பலவீனமான பகுதி. படத்தின் பிற்பகுதியில், பல்லாள தேவனும் மகேந்திரனும் மோதும் காட்சிகள் பிரம்மாண்டமானவை என்றாலும் சுமார் அரை மணி நேரம் அவை நீள்வது சற்றே அலுப்பைத் தருகின்றன.
ஆனால், இதையெல்லாம் மீறி இந்தப் படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படம். இதிகாச பாணியிலான திரைப்படங்களை இந்தியாவிலும் உருவாக்கி, உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது இந்தப் படம். மேலும் பாகுபலியை திரையரங்கில் பார்ப்பதென்பது, ஒரு திரைப்படத்தை பார்ப்பதாக இல்லை, அனுபவிப்பது என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்.
தொடர்படைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்