ஐபிஎல் வீரர் ஹாட்ரிக் எடுக்க உதவிய 12 வயது சிறுவனின் `டிப்ஸ்’

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஹாட்ரிக் உள்பட ஐந்து விக்கெட்டுக்களை எடுத்தார்.

இந்த போட்டியில் ஜெயதேவ் உனட்கட்டின் சிறப்பான பந்துவீச்சால் புனே அணி 12 ரன்களில் வென்றது. தனது சிறப்பான பந்துவீச்சுக்கும், தான் ஹாட்ரிக் எடுத்ததற்கும் காரணமான ரகசியம் மற்றும் சூட்சுமத்தை உனட்கட் பகிர்ந்துள்ளார்.

புனே நகரில் உள்ள ஏபிஎஸ்எஸ் பள்ளியை சேர்ந்த 12 வயது மாணவனை தான் சந்தித்ததையும், அச்சிறுவனின் ஆலோசனை தனது பந்துவீச்சு மெருகேறுவதற்கு உதவியதையும் உனட்கட் எடுத்துரைத்தார்.

கடந்த எப்ரல் 28-ஆம் தேதியன்று, உனட்கட், புனே அணியின் கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் மற்றும் பிளஸிஸ் ஆகியோருடன் இணைந்து மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட ஓம்கார் பவார் என்ற மாணவன் சற்றும் தயக்கமில்லாமல் எவ்வாறு ஹாட்ரிக் எடுப்பது என்று ஆலோசனை வழங்கியுள்ளான்.

கிராஸ்-ஸீம் எனப்படும் குறுக்கு வெட்டாக போடப்படும் வேகப்பந்துவீச்சில் சில நுணுக்கங்களை ஆலோசனையாக ஓம்கார் வழங்கியுள்ளான்.

இடதுகை பந்துவீச்சாளரான உனட்கட், ஓம்கார் தந்த ஆலோசனையால் மிகவும் ஈர்க்கப்பட்டு, மற்ற மாணவர்கள் முன்னிலையில் இந்த நுணுக்கத்தை பலமுறைகள் இருவரும் பயிற்சி பெற்றனர்.

சிறுவனின் ஆலோசனையால் தனது அணிக்காக போட்டியை வெல்ல உதவிய உனட்கட், இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் இது தொடர்பாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

மேலும், '' இது தான் ஓம்கார் அளித்த பந்துவீச்சு மந்திரம். இதனால்தான் நான் ஹாட்ரிக் எடுத்தேன். குட்டிப் பையனுக்கு எனது நன்றி'' என்று உனட்கட் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்