You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக்கூடாது: எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ்
இளையராஜாவின் இசைமைப்பில் உருவான பாடல்களை முன்னனுமதி பெறாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என, தனக்கு அவர் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று வெளியிட்டுள்ள தனது சமூக வலைதள பதிவில், தனக்கும், தான் பாடும் இசை கச்சேரியின் ஒருங்கிணைப்பாளருக்கும், இளையராஜாவின் தரப்பு வழக்கறிஞர் இரண்டு தினங்களுக்கு முன்னதாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் இளையராஜாவின் முன்னனுமதி இல்லாமல் அவர் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடுவது என்பது பதிப்புரிமை சட்டத்தை மீறும் செயல் என்றும், அதற்காக பெருமளவில் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தனக்கு இந்த சட்டம் பற்றி தெரியவில்லை என்று கூறிய எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் கலந்துகொள்ளும் இந்த உலக இசைக் கச்சேரி சுற்றுலா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டொரோண்டோ நகரில் தொடங்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றும் ரஷ்யா என பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில், இந்த உலக இசைக் கச்சேரி சுற்றுலா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள போதும், தற்போது அமெரிக்காவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது மட்டும் நோட்டீஸ் அனுப்ப என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இருந்தபோதும் தனக்கு இந்த சட்டம் பற்றிய அறியாமை காரணமாக அந்த நிகழ்ச்சிகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடியதாகவும், இனி சட்டத்தை மதித்து, அதை ஏற்க போவதாகவும் அந்த பதிவில் எஸ்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவின் இறுதியில், இந்த விவகாரம் தொடர்பான கடுமையான கருத்துக்கள் மற்றும் விவாதங்களை எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவோ, இளையராஜாவின் அலுவலகமோ, இது வரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்