மீண்டும் அதிகமாகும் பழைய படத் தலைப்புகள்

ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பது தற்போது பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரும் சுமையாகவே இருக்கிறது. படத்தின் கதையை எழுதும் போதே பெரும்பாலான இயக்குனர்கள் அதற்குப் பொருத்தமான தலைப்பைத் தேர்வு செய்துவிடுவார்கள். ஒரு படத்தின் தலைப்பு என்பது அந்தப் படத்திற்கான முதல் அடையாளம், அதன் பின்தான் படத்தின் கலைஞர்கள் அனைவரும்.

ஒரு படம் வெளிவந்த பிறகே அந்தப் படத்தைப் பற்றிய நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் நினைவில் வைக்கப்படுவார்கள். படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே ஒரு படத்தைப் பற்றிப் பேசும்போது அந்தப் படத்தின் தலைப்பை மையப்படுத்தித்தான் பேச்சுகளும் இருக்கும்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு தமிழ்நாடு அரசு வரி விலக்கு அளிக்காது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது நின்று போனது. முதன் முதலில் 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' என்ற படத்தின் தலைப்பு 'உனக்கும் எனக்கும்' என்று மாற்றப்பட்டது.

அன்றிலிருந்து படங்களுக்கு தமிழில் தலைப்புகளை வைக்க சிலர் திண்டாட ஆரம்பித்தார்கள். தங்களது படங்களுக்கு பொருத்தமான தலைப்புகள் கிடைக்காமல் இப்படியெல்லாம் கூட படத்திற்குத் தலைப்பு வைக்க முடியுமா என்ற ரீதியில் கூட சில படங்களின் தலைப்புகள் இருந்தன.

பெரும்பாலும் பழைய அல்லது ஹிட்டான பாடல்களிலிருந்துதான் பலரும் தங்கள் படங்களுக்கான தலைப்புகளைத் தேர்வு செய்வது வழக்கமாக இருக்கிறது. அது இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

அதே சமயம் பாடல்களிலிருந்து படங்களுக்கான தலைப்புகளைத் தேர்வு செய்தது போக பழைய படங்களின் தலைப்புகளையும் அதற்கு முன்பிருந்தே வைக்க ஆரம்பித்தார்கள்.

1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த படத்திற்கு 'அபூர்வ சகோதரர்கள்' என தலைப்பு வைத்தார்கள். அந்தப் பெயரில் 1949 ஆம் ஆண்டே ஒரு தமிழ்ப் படம் வெளிவந்திருக்கிறது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'அபூர்வ சகோதரர்கள்' படம் வெளிவந்து வெற்றி பெற்றதும் பழைய படங்களின் தலைப்புகளைத் தொடர்ந்து பலரும் வைக்க ஆரம்பித்தார்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டில் கூட 'போக்கிரி ராஜா, தோழா, மனிதன், இது நம்ம ஆளு, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, மீண்டும் ஒரு காதல் கதை, தேவி," என பழைய படங்களின் பெயரை மீண்டும் வைத்த படங்கள் வெளிவந்தன.

இந்த 2017ஆம் ஆண்டிலும் பழைய படங்களின் தலைப்பிலேயே சில புதிய படங்கள் வர இருக்கின்றன. "மகளிர் மட்டும், சர்வர் சுந்தரம், சத்ரியன், சத்யா, வீரா, கர்ஜனை, தொண்டன், டிக் டிக் டிக்," என இந்த ஆண்டில் ஒரு பட்டியல் இருக்கிறது.

1967 ஆல் வெளிவந்த 'அதே கண்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் புதிய படம் ஒன்று வெளியானது.

அந்தப் பெயரை மீண்டும் வைத்ததற்கான காரணத்தைக் கூறுகிறார் படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.

"எங்களின் படத்தில் கண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக பல தலைப்புகளை யோசிச்சோம், ஆனால் முழு திருப்தி வரலை. எனக்கு 'அதே கண்கள்' என்கிற தலைப்பு படத்துக்கும், கதைக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும் என நினைத்தேன். அதன் பின்னர் ஏவிஎம் நிறுவனத்தை அணுகி தலைப்புக்கான அனுமதியைப் பெற்றோம். தலைப்பு என்பது படத்தின் அடையாளம். பழைய படத் தலைப்பை வைத்ததால் அது படத்துக்கு ஒரு சிறந்த முன்னோட்டத்தைக் கொடுத்தது," என்றார் ரோகின் வெங்கடேசன்.

'பழைய படத்தின் தலைப்பை வைக்கும்போது படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கும் ஒரு பொறுப்பு இருக்கும். பழைய படத்தோட பெருமையை நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் கெடுத்துவிடக் கூடாது. கதைக்குப் பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் பழைய படத்தின் தலைப்பை வைப்பது தவறில்லை," என்றார் அவர்.

தனது அறிமுகப் படமான 'குற்றம் கடிதல்' படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரம்மா தற்போது ஜோதிகா நடிக்கும் 'மகளிர் மட்டும்' படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாசர் நடித்த 'மகளிர் மட்டும்' என்ற படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது.

முதல் படத்தில் 'குற்றம் கடிதல்' என்ற வித்தியாசமான தலைப்பை வைத்தவர் இரண்டாவது படத்தில் பழைய படத் தலைப்பை வைத்தது ஏன் என்பதற்கான காரணத்தைக் கூறுகையில்,

"இந்தப் படத்துக்கு 'மகளிர் மட்டும்' தலைப்பைத் தவிர வேறு எந்தத் தலைப்பையும் வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பாக இருந்தது. மக்களுக்குப் பரிச்சயமான ஒரு தலைப்பைப் பயன்படுத்துவது தவறு இல்லை என்று சொல்வேன். பாடல்களில் ரீ-மிக்ஸ் வருகிறது, அதே போல தலைப்புகளில் இது ஒரு ரீ-மிக்ஸ் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு படத்தின் கதைக்கு என்ன தேவைப்படுகிறது என்றுதான் பார்க்க வேண்டும்," என்றார்.

"என்னுடைய முதல் படத்திற்கு 'குற்றம் கடிதல்' எனப் பெயர் வைத்தேன். பலர் அது என்ன தலைப்பு என்று கேள்வி கேட்டார்கள். பலருக்கு அதற்கான அர்த்தமே தெரியவில்லை.

படத்தோட கதை வடிவம் பெறும்போது திடீரென ஒரு விஷயம் தோணும். அப்படித்தான் 'மகளிர் மட்டும்' என்ற தலைப்வை வைக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு படத்தின் கதைதான் அந்தப் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். எங்கள் கதைக்கு 'மகளிர் மட்டும்' என்ற தலைப்பு அவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது," என்கிறார்.

சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தை இயக்கி வரும் ஆனந்த் பால்கி தலைப்பை முடிவு செய்த பின்தான் கதையை எழுத ஆரம்பித்தேன் என்கிறார்.

நாகேஷ் நாயகனாக நடித்த 'சர்வர் சுந்தரம்' படம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக அமைந்தது.

"நாகேஷ் சார் என்னுடைய குருநாதர் மாதிரி, எங்களது குடும்ப நண்பரும் கூட. அவருடைய தீவிர ரசிகன். நான் ஒரு ஹோட்டல் மானேஜ்மென்ட் மாணவன். இந்த 'சர்வர் சுந்தரம்' படம் உணவைப் பற்றியும், பரிமாறுவதைப் பற்றிய ஒரு படம். இதை விட வேறு ஒரு பொருத்தமான தலைப்பு இந்தப் படத்திற்கு வைக்க முடியாது. தலைப்பை 'சர்வர் சுந்தரம்' என எழுதிய பின்தான் கதையை எழுத ஆரம்பித்தேன்.

இந்தத் தலைப்பை ஏ.வி.எம் நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். படத்தின் ஒரு வரிக் கதையை அவர்களிடம் சமர்ப்பித்தோம். அதை அவர்கள் படித்த பிறகே எங்களுக்கு தலைப்பிற்கான அனுமதியைக் கொடுத்தார்கள். ஏனென்றால் 'சர்வர் சுந்தரம்' படம் ஒரு கிளாசிக்கான, பெரிய வெற்றிப் படம்.

இந்தத் தலைப்புத்தான் படத்திற்கு வைக்கிறோம் என்று சொன்னதுமே சந்தானம் மிகவும் தயங்கினார். நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறிய பிறகு அவருக்கு மிகவும் வெற்றிகரமாக அமைந்த படம் 'சர்வர் சுந்தரம்'. இப்போது சந்தானமும் நகைச்சுவை நடிகராக இருந்துதான் நாயகனாக மாறியுள்ளார். எனவே இவருக்கு மிகவும் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்று சொன்னேன். அதன் பிறகே இந்தத் தலைப்பில் நடிக்க சந்தானமும் சம்மதித்தார்.

பலரும் இந்தத் தலைப்பை நான் வைத்ததற்கு கொஞ்சம் எச்சரிக்கையும் விடுத்தனர். நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாதவன். முதல் படத்திலேயே ஓர் அற்புதமான பழைய படத்தின் தலைப்பை வைக்கிறீர்கள், சிறப்பான படத்தை எடுக்க முயற்சி செய்யுங்கள் என்றார்கள்.

என் கதை மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் அந்தப் படத்தின் பெயரைக் கெடுக்க மாட்டேன். நான் ஏன் அந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்பது படத்தைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புரியும்," என்கிறார் இயக்குனர் ஆனந்த் பால்கி.

விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கதை ஆசிரியரும், பத்திரிகையாளருமான அருள் செழியன் 'ஒரு படத்தின் கதை அருமையாக இருந்தால் தலைப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை' என்கிறார்.

"மலையாளத்தில் நாவல் தலைப்புகளைப் போல ஓர் அழகுணர்வுடன் பல தலைப்புகளை வைக்கிறார்கள். "முகுந்தேட்டா சுமித்திரா விழிக்குந்து, அச்சனுறங்காத வீடு, அரபிக்கத, ஆயாளு கத எழுதுகையாணு, மகேஷிண்ட பிரதிகாரம், கத பறயும் போள்" ஆகிய தலைப்புகளை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், அம்மாதிரியான தலைப்புகள் தமிழ்த் திரையுலகத்தில் அதிகம் வைப்பதில்லை. நான் கதை எழுதிய 'ஆண்டவன் கட்டளை' படத்திற்கு 'பாஸ்போர்ட்' என்றுதான் தலைப்பு வைத்து எழுதினேன். ஆனால், படத்தின் இயக்குனர் 'ஆண்டவன் கட்டளை' என்பது படத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்றார். ஒரு இயக்குனருக்கு படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதால் நான் அதில் தலையிடவில்லை. இப்போது ரசிகர்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பதற்காக சிலர் பழைய படங்களின் தலைப்புகளை வைக்கிறார்கள். அதைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும்," என்கிறார்.

ஒரு படத்தின் வெற்றிக்கு கதைதான் முக்கிய காரணமாக இருக்கும் என்பது திரையுலகத்தில் உள்ள பலர் ஆண்டாண்டு காலமாகவே சொல்லி வருகிறார்கள். அதே சமயம் அந்தக் கதையை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க தலைப்பும் அவசியம்.

பழைய தலைப்பை வைத்து வரும் படங்கள் அந்தப் பழைய படங்களின் பெருமையை சிதைக்காமல் இருந்தால் எந்த சர்ச்சையும் வர வாய்ப்பில்லை. அந்தப் படங்கள் வெற்றியும், வரவேற்பும் பெற்றுவிட்டால் தலைப்பு குறித்து பின்னர் யாரும் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.

காணொளி: பெண் என்பதால் சவால்கள் அதிகம்: நடிகை ராதிகா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்