காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று டிரம்ப் கூறினார். அவர் இதுகுறித்துப் பேசியது என்ன?
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், தான் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகுதான் எனக் கூறி, அதற்காக நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன், தான் ஆட்சியிலிருந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் எதிரிகள் மிகவும் வலுவாக வளர்வதற்கு அனுமதித்துவிட்டதாக விமர்சித்தார்.
"அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிணைப்பைத் தகர்க்க முடியாது" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை?
- உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்?
- அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன?
- கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?

மேலும் பேசிய டொனால்ட் டிரம்ப், எவ்வித மாற்று வழிகளும் இல்லை என்பதால்தான் பாலத்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு செல்வதாக, எவ்வித ஆதாரங்களுமின்றி கூறினார். மேலும், காஸா 'அழிவின் தலமாக' இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, காஸாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள், மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், காஸாவை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அமெரிக்காவால் மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
காஸா குறித்த டிரம்பின் பேச்சு

பட மூலாதாரம், Reuters
எதிர்காலத்தில் காஸா முனையை அமெரிக்கா "சொந்தமாக்குவது" குறித்து டிரம்ப் கூறியது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
"இறையாண்மை கொண்ட ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது குறித்தா நீங்கள் பேசுகிறீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார்.
அதற்கு ஆம் என பதிலளித்த டிரம்ப், "எதிர்காலத்தில் (காஸா முனையைக் கைப்பற்றி) அமெரிக்கா நீண்ட காலத்துக்கு வழிநடத்துவது குறித்து தான் கற்பனை செய்து பார்ப்பதாக" குறிப்பிட்டார்.
"அந்த நிலத்தைச் சொந்தமாக்கி, மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது மிகவும் அற்புதமானதாக இருக்கும்."
"எல்லோரும் அந்த யோசனையை விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.
நெதன்யாகு கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters
இதன் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் இந்த யோசனை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவரது யோசனை 'கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.
அந்தப் பிராந்தியம் (காஸா) தங்கள் நாட்டுக்கு இனியும் ஆபத்தாக இருக்காது என்பதை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"காஸாவுக்கு டிரம்ப் வித்தியாசமான எதிர்காலத்தை வழங்கும் யோசனையைக் கொண்டிருப்பதாக" கூறிய அவர், "அது வரலாற்றை மாற்றும் ஒன்றாக இருக்கும் எனத் தான் நினைப்பதாகவும்" குறிப்பிட்டார்.
நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனுடனான உறவு அடிக்கடி பதற்றமானதாகவே இருந்தது. இந்நிலையில், டிரம்ப் அதிபரானது குறித்த தனது மகிழ்ச்சியை நெதன்யாகு வெளிப்படையாகக் காட்டினார்.
"வெள்ளை மாளிகையில் உள்ள இஸ்ரேலின் மிகச் சிறந்த நண்பர்" என்று நெதன்யாகு டிரம்பை குறிப்பிட்டார். இந்தப் பயணத்தின்போது முன்னதாக அமெரிக்காவுக்கான மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃபிடம் நெதன்யாகு பேசினார்.
பிபிசியின் சர்வதேச உறவுகள் செய்தியாளர் பால் ஆடம்ஸின் பகுப்பாய்வு

பட மூலாதாரம், EPA
காஸாவுக்கான முன்மொழிவுகள் தொடர்பாகப் பேசியுள்ள டிரம்ப், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
"காஸா முனையைக் கைப்பற்றி", அங்கு இடிபாடுகளை அகற்றுதல், வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், மற்றும் "கணக்கிலடங்கா வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்", "அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்துதல்" ஆகியவற்றை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் யார் குறித்துப் பேசுகிறார் என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை.
காஸா முனையில் வாழும் ஒட்டுமொத்த பாலத்தீன மக்களும் அதாவது 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர வேண்டும் என முன்பு டிரம்ப் கூறிய நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"மத்திய கிழக்கின் சொர்க்கபுரியாக காஸாவை மாற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவில், "பாலத்தீனர்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வாழ்வார்கள்," என்ற விநோதமான கருத்தையும் அவர் தெரிவித்தார்.
அவருடைய இந்தக் கூற்று தலைசுற்ற வைப்பதாக உள்ளது. மேலும், எந்த சர்வதேச அதிகாரத்தின் கீழ் அமெரிக்கா செயல்படும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலத்தீனர்கள், தங்களைப் பற்றி டிரம்ப் என்ன யோசனை வைத்துள்ளார் என்பது குறித்த ஆச்சரியத்தில் உள்ளனர்.
மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்து தான் இன்னும் யோசிக்கவில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், "இன்னும் நான்கு வாரங்களில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதாக" கூறினார்.
தன்னுடைய யோசனை, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையிலான 'இரு நாடு' தீர்வுடன் தொடர்புடையது அல்ல என்றும், ஆனால் பாலத்தீனர்களால் அப்படித்தான் பார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












