ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் - நேரலை

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இடைத்தேர்தல் களத்தில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.

முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பெண் புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 எண் வாக்குச்சாவடியில் ஃபரிதா பேகம் என்பவர் கணவருடன் வாக்கு செலுத்த வந்தார்.

இந்நிலையில், அப்பெயரில் ஏற்கெனவே ஒருவர் வாக்கு செலுத்தியதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளார், இதையடுத்து, தன் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக, அப்பெண் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டார்.

தான் மீண்டும் வாக்களிக்க வழிசெய்யும் வகையில், சட்டப்பிரிவு 49பி-ஐ (49P) பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரினார் அப்பெண். இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு சம்பத் நகரில் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.

தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலின் முடிவுகளைவிட, இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியின் வாக்கு வங்கி கூடுகிறது, குறைகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வாக்குப்பதிவு காரணமாக அங்குள்ள வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்

4 ஆண்டுகளில் மூன்றாவது தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4 அன்று , அவர் மாரடைப்பால் இறந்தார்.

அதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்

கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி மீண்டும் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்குள் இந்தத் தொகுதியில் மூன்றாம் முறையாக தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
படக்குறிப்பு, இடைத்தேர்தலில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த இத்தொகுதியில் இப்போது சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 வாக்குச்சாவடி மையங்கள், பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்தலையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியது என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன், கொசுவண்ண வீதியிலுள்ள பிவிபி குழந்தைகள் பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளுடன், அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலைச் சந்தித்துள்ளேன். இந்த இடைத்தேர்தலைப் பொருத்தவரை திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்," என்று தெரிவித்தார்.

மேலும், "அந்த மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களாகவே இருக்கும்," என்றும் குறிப்பிட்டார்.

'வாக்குச் சாவடியில் பாரபட்சம்' - நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் - நேரலை

இந்தத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கோபிச்செட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இங்கு வாக்கு இல்லை. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை சீதாலட்சுமி ஆய்வு செய்தார்.

''முதல் 2 மணிநேரத்தில் வாக்குப்பதிவு வேகமாக நடந்துள்ளது. நான் 30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தேன். என்னைப் பார்த்த வாக்காளர்கள் பலர், யார் பணம் கொடுத்தாலும் இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். இனிமேல் இவர்களை நம்பி வாக்களித்துப் பயனில்லை என்றும் கூறினர்'' என்றார்.

சீதாலட்சுமி
படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆய்வு செய்தபோது

மேலும் அவர் கூறுகையில், ''நான் எனது கட்சித் துண்டைப் போட்டுக் கொண்டு வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்றபோது, அதை அகற்றுமாறு கூறினர். இந்தத் துண்டில் சின்னம் எதுவுமில்லை. இதைப் பார்த்து, மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் நான் பிரச்னை வேண்டாமென்று அதை அகற்றிவிட்டேன். ஆனால், திமுக வேட்பாளர் அவருடைய கட்சிக் கொடி நிறத்திலான துண்டை அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர். இப்படி அதிகாரிகள் அப்பட்டமாகப் பாரபட்சம் காட்டுகின்றனர்'' என்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறை அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய சீதாலட்சுமி, இங்குள்ள மக்கள் பலர், அருகிலுள்ள வேறு தொகுதிகளுக்கும் பணிக்குச் செல்கின்றனர். ஏராளமான கூலித்தொழிலாளர்கள், இன்று பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)