You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேடைப்பேச்சு சர்ச்சையால் கட்சிப் பதவியை இழந்த பொன்முடி - என்ன பேசினார்? முழு பின்னணி
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் க.பொன்முடி விடுவிக்கப்படுவதாக, வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாலியல் தொழிலாளர் குறித்த பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், 'இப்படிப்பட்ட பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது ஏன்? சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசியது என்ன?
திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழா, கடந்த 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது.
தி.மு.க இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடந்த இந்த விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
பொன்முடி பேசியது என்ன?
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, தான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் நாட்களில் 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றத்தை (18 வயதுக்கு மேற்பட்டோர்) திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பட்டிமன்றத்தில் நானும் சபாபதி மோகனும் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) கலந்துகொள்வோம். கோவையில் இந்தப் பட்டிமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்தினர். இதற்காக டிக்கெட் வாங்கிக் கொண்டு திரளாகக் கலந்து கொள்வார்கள்" எனக் கூறினார்.
"பட்டிமன்ற தலைப்பு என்ன தெரியுமா?" எனச் சிரித்தபடியே கேள்வி எழுப்பிய பொன்முடி, மேடையில் இருந்தவர்களைப் பார்த்து, "அதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இதையெல்லாம் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது" எனக் கூறினார்.
"கடவுள் கொள்கைளில் காமச் சுமையை அதிகம் பரப்புவது சைவமா வைணவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும்" என்று குறிப்பிட்டார். மேலும், அந்தப் பட்டிமன்றத்தில் "ஓர் இடத்தில் சொல்வோம். மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" எனக் கூறிவிட்டு, பாலியல் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக் குறிப்பிட்டு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
"மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" என மீண்டும் கூறிவிட்டு இதற்கான விளக்கத்தையும் பொன்முடி அளித்தார். பிறகு தொடர்ந்து பேசிய அவர், "இவையெல்லாம் திராவிடத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, கருணாநிதியின் 'பராசக்தி' படம், திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் வெளியான 'ரத்தக் கண்ணீர்' படம் ஆகியவை குறித்துப் பேசினார்.
கனிமொழி கண்டனம், கட்சிப் பதவி பறிப்பு
பொன்முடியின் இந்தப் பேச்சு குறித்த காணொளி, கடந்த வியாழக்கிழமை இரவில் இணையதளத்தில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து, தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ' இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சைவ, வைணவ மதங்களை ஓர் அமைச்சரே இவ்வாறு அவதூறாகப் பேச முடியுமா? தி.மு.க கூட்டத்துக்கு பெண்களும் குழந்தைகளும் வர முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
பொன்முடியின் பேச்சுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, ' அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை' எனப் பதிவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி விலக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அந்தப் பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம், அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திராவிடர் கழக மேடைகளில் பேசியவற்றைத்தான் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டிருந்தார். அதற்காக அவரது கட்சிப் பதவியைப் பறித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "1985ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகக் கூட்டங்களில் இதுபோன்று பேசப்பட்டு வந்தது. அதையே திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழா மேடையில் பொன்முடி பேசினார். அது ஏதோ புதிதாகப் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல" எனக் குறிப்பிட்டார்.
"கம்ப ரசம் என்ற பெயரில் இதுபோன்ற பேச்சுகளை அண்ணாவும் பேசியிருக்கிறார். அதையே பொன்முடியும் பேசினார். அதற்காக இப்படியொரு நடவடிக்கை தேவையில்லை" எனவும் கோவை கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.
பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுகள்
தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்போது இருந்தே சர்ச்சைப் பேச்சுகளில் அதிகம் அடிபடும் நபராக அமைச்சர் க.பொன்முடி இருந்து வருகிறார்.
தி.மு.க அரசின் திட்டங்களில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தைக் குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தத் திட்டத்தால் மாதந்தோறும் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையை மகளிர் சேமிப்பதாகவும் மேடைகளில் அவர் குறிப்பிடுகிறார்.
இந்தத் திட்டம் தொடர்பாக விழுப்புரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாகக் குறிப்பிட்டார். 'எல்லாம் ஓசி' எனவும் சிரித்தபடியே அவர் பேசினார்.
இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி, "ஓசி பயணம் என விளையாட்டாகக் கூறியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு மொழியில் கலோக்கியலாக பேசியதைத் தவறாகத் புரிந்து கொண்டனர்" எனக் கூறினார்.
முன்னதாக, விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் தொகுதியில் உள்ள குறைகளைக் கூறிய பெண்களிடம், "ஆமாம்... நீங்க எல்லாம் அப்படியே எனக்கு ஓட்டுப் போட்டு கிழிச்சிட்டீங்க...' எனக் குறைபட்டுக் கொண்டார். இந்தப் பேச்சு இணையத்தில் அதிகமாகப் பரவியது.
அடுத்து, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள மணம்பூண்டியில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான பொன்முடி பங்கேற்றார்.
அப்போது முகையூர் ஒன்றிய குழு தலைவரைச் சுட்டிக்காட்டிய பொன்முடி, "அவரே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்" எனக் கூறிவிட்டு அவரிடம் சாதியை உறுதி செய்துகொள்ளும் வகையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதே வரிசையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், கே.என்.நேரு உள்பட சில அமைச்சர்களும் சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கினர். இதுதொடர்பாக, 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
அப்போது பேசிய அவர், "என்னைத் துன்புறுத்துவது போல மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக் கூடாது. யாரும் புதுப் பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்" எனக் கூறினார்.
அனைத்து இடங்களிலும் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் பொதுவெளியில் அமைச்சர்களும் கட்சியினரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆனால், அதன் பிறகும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்ந்தன. கடந்த 2023 மார்ச் மாதம் திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, ஆட்சிக்கு வந்து 22 மாதங்களில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர், நிறைய குறைகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதை ஏற்காத பொன்முடி, அவரை ஒருமையில் பேசி அதட்டியதோடு, அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட செய்தியை கேலி செய்வது போலப் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தற்போது பாலியல் தொழிலாளர் குறித்த சர்ச்சைப் பேச்சில் தனது கட்சிப் பதவியை இழந்திருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு