You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அந்தமானில் மர்மமாக வாழும் சென்டினல் பழங்குடிகளை பார்க்க முயன்ற அமெரிக்கர் என்ன ஆனார்?
- எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ
இந்தியப் பெருங்கடலின் நடுவே அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவில் வசிப்பவர்களைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து 1,200 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடத்தில் எத்தனை பழங்குடியினர் தனித்து வாழ்கிறார்கள் என்பதோ அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பதோ தெரியவில்லை.
இந்த சிறிய பழங்குடியினரைச் சுற்றியுள்ள மர்மம், பல ஆர்வமுள்ள நபர்கள் இவர்களை அணுக முயல வழிவகுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அங்கு வசிப்பவர்களுக்கு 'ஒரு புதிய, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்' என்று விவரிக்கின்றன பழங்குடி மக்களின் உரிமை அமைப்புகள்.
மார்ச் 31ஆம் தேதியன்று, இந்தத் தீவுகளில் 24 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணியான மைக்கேலோ விக்டோரோவிச் பாலியகோவ் அனுமதியின்றி நுழைந்தார்.
சென்டினல் தீவில் வசிக்கும் பழங்குடி மக்களைத் தொடர்புகொள்ள முயன்ற பாலியகோவ், தனது பயணத்தைப் பதிவு செய்தது மட்டுமல்ல அங்குள்ள கடற்கரையில் ஒரு சோடா கேனையும், தேங்காயையும் விட்டு வந்திருக்கிறார். சட்டப்படி இங்கே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சுற்றுலாப் பயணியை காவல்துறை கைது செய்துள்ளது.
''தனித்திருக்கும் இந்தப் பழங்குடியினருக்கு இப்போது வளர்ந்து வரும் அச்சுறுத்தல் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள்தான்'' என்கிறார் பிபிசி மராத்தி செய்தியாளர் ஜான்வி மூலே.
கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து இந்தப் பழங்குடியினரைத் தொடர்பு கொள்ள பல தனி நபர்கள் முயற்சி செய்வது குறித்து மானுடவியலாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.
வெளிநபர்களுடன் தொடர்பு கொள்வதில் விருப்பமில்லை என்று இந்தப் பழங்குடியினர் பலமுறை வெளிக்காட்டியுள்ளனர் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர்களது விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த அமெரிக்கரின் வருகை அவருடைய மற்றும் அந்தப் பழங்குடியினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்று கூறுகிறது பழங்குடியினர் உரிமைகள் அமைப்பான சர்வைவல் இண்டர்நேஷனல்.
தங்கள் பங்குக்கு, அமெரிக்க அதிகாரிகள் இந்த வழக்கைப் பற்றி அறிந்திருப்பதாகவும், 'நிலைமையை உற்றுக் கண்காணிப்பதாகவும்' தெரிவித்தனர்.
ஆனால் யார் இந்த சென்டினல் பழங்குடியினர் மற்றும் இவர்களைச் சந்திப்பதில் இருக்கும் ஆபத்து என்ன?
இந்தியாவில் இருந்து தனித்திருக்கிறது
இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து 1,200 கி.மீ தள்ளி இருக்கும், அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் உள்ள ஒரு சிறு தீவான வட சென்டினல் தீவில் இந்தப் பழங்குடியினர் வசிக்கிறார்கள்.
ஜாரவா, வட சென்டினல் மக்கள் உள்ளிட்ட "குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்" என்று கருதக்கூடிய ஐந்து பழங்குடிக் குழுக்கள், இங்கு உலகின் பிற பகுதிகளில் இருந்து பெரும்பாலும் தனிமைப்பட்டு வாழ்கிறார்கள்.
சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், 50இல் இருந்து 200 வரையிலான எண்ணிக்கையில் இந்தப் பழங்குடியினர் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். அவர்களது மொழி உள்ளிட்ட அவர்களது கலாசாரம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தங்களுக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் பேசும் மொழியைப் பேசுகிறார்களா அல்லது வேறு ஏதேனும் மொழியைப் பேசுகிறார்களா என்பதே தெளிவாகத் தெரியவில்லை.
தாங்கள் வேட்டைக்குப் பயன்படுத்தும் கருவிகளான வில் மற்றும் அம்புகள் பயன்பாட்டால் தனித்துவம் பெறும் இவர்கள், வெளி மனிதர்களுக்கு ஆபத்தானவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
"எந்த வெளிநபருடனும் சென்டினல் மக்கள் விரோதப் போக்கையே கொண்டிருப்பார்கள். பொதுவாகத் தொடர்பு கொள்ளும் முயற்சிகளை அவர்கள் தவிர்க்கிறார்கள். சில நேரம் ஆயுதங்களைப் பயன்படுத்தி எதிர்வினையாற்றியுள்ளனர்," என்று மூலே கூறுகிறார்.
கடந்த 1974இல் நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலுக்காக ஆவணப்படம் எடுக்க ஒரு இயக்குநர் சென்றபோது, அவரது காலில் அம்பு எய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தத் தீவுக்குச் சென்ற 27 வயது அமெரிக்கரான ஜான் ஆலன் சாவ், இந்தப் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார்.
அவர் வில் அம்பால் தாக்கப்பட்டார். இந்தத் தீவுக்குச் செல்ல மீனவர்களுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கிய தீவுகள்
இந்திய ஆராய்ச்சியாளர்கள் இவர்களைப் பற்றிச் சில ஆய்வுகளைச் செய்துள்ளதோடு, இந்தப் பழங்குடியினருடன் தொடர்பு கொள்ளவும் முயன்றுள்ளனர்.
கடந்த 1991இல் தேங்காய்கள் போன்ற சில பொருட்களை பரிசாகக் கொடுத்து சைகை மொழியில் பேச முயன்றுள்ளனர். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்தக் காரணத்தால் இதன் பிறகு இந்திய அரசாங்கம் இந்தப் பயண முயற்சிகளைக் கைவிட்டு வெளிநபர்கள் இந்தத் தீவுக்குச் செல்வதையும் தடை செய்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு, இந்தப் பழங்குடியினர் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்க இந்திய அரசு முனைந்தது. ஆனால் இந்தத் தீவுகளின் மீது பறந்த ஹெலிகாப்டர்கள் மீது அங்கு இருப்பவர்கள் அம்புகளை எய்தனர்.
இந்திய - பசிஃபிக்கின் முக்கிய கடல் போக்குவரத்து வழிகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் இருக்கும் சென்டினல் உள்ளிட்ட இந்தத் தீவுக் கூட்டம் இந்தியாவுக்கு முக்கியமான ஒன்று.
சென்டினல் பழங்குடியினரைச் சந்திப்பதில் உள்ள ஆபத்துகள்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பழங்குடியினர் கிட்டத்தட்ட முழுமையாகத் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படியெனில், சளி, காய்ச்சல், அம்மை போன்ற சாதாரண நோய்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நோய் எதிர்ப்புத் திறன் அவர்களுக்கு இருக்காது.
இந்தக் காரணத்தால், அவர்கள் வாழும் பகுதிக்கு வெளியில் இருக்கும் நோய்களால் இந்தப் பழங்குடியினர் எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகையால், 1956ஆம் ஆண்டு இங்கு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இதனால், இந்தப் பகுதிக்குள் மற்றவர்கள் நுழைவதைத் தடுக்க இந்திய கடற்படையினர் இந்தத் தீவைச் சுற்றிக் கண்காணித்து வருகிறார்கள்.
''இவர்களை நெருங்குவது உயிருக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் அவர்கள் வெளிநபர்களை வரவேற்பதில்லை. மேலும், கடந்த காலத்தில் அப்படிச் செய்ய முயன்றவர்களிடம் விரோதப் போக்கையே காட்டியுள்ளனர்" என்கிறார் மூலே.
இந்தப் பழங்குடியினர் வெளிப்படுவது அதிகரித்து வருவது பழங்குடியினர் பாதுகாப்புக் குழுக்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு