உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

(இக்கட்டுரையில் தற்கொலை பற்றிய விவரணைகள் உள்ளன.)

"உடல் பருமனாக இருக்கும் எல்லோருக்கும் நம்பிக்கையே உடைந்து போய்விடும். சாதாரணமாக மற்றவர்கள் செய்யும் செயல்கள், எங்களுக்குக் கடினமாக இருக்கும். எல்லாவற்றிலும் எங்களை கேலி, கிண்டல் செய்துகொண்டே இருப்பார்கள்" என்கிறார் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த 27 வயதான அபிமன்யு.

குடும்ப-நண்பர்கள் வட்டாரத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகள் என்றால், அங்கு என்ன நாற்காலி போடப்பட்டிருக்கும் என்றுதான் முதலில் யோசிப்பேன் எனக் கூறும் அபிமன்யு, அந்த நாற்காலி உடைந்து போய்விடுமோ என பயந்துகொண்டே நிகழ்ச்சிக்குs செல்வேன் என்றும் கூறுகிறார். இதனால், பல நிகழ்வுகளைt தவிர்த்து விடுவதாகவும் அப்படியே சென்றாலும் கேலிகளுக்கு பயந்து சாப்பிடாமலேயே எழுந்து வந்துவிடுவேன் என்றும் கூறுகிறார்.

"ஒரு நிகழ்வுக்குச் சென்றால் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களோ, அதை நிறுத்திவிட்டு என்னையே பார்ப்பார்கள். பேருந்தில்கூட பயணிக்க மாட்டேன்" என்கிறார் அவர்.

பொறியியல் பட்டதாரியான அபிமன்யு, வேலைக்கான நேர்காணல்களிலும் தன் உடல் எடையால் புறக்கணிப்புகளைச் சந்தித்ததாகக் கூறுகிறார்.

"ஒரு வேலைக்காக நேர்காணலுக்குச் சென்றால்கூட என் திறமையைப் பார்க்க மாட்டார்கள், உன்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் இருசக்கர வாகனத்தில் பயணிக்க முடியாது எனக் கூறி எனக்கு வேலை தராமல் இருந்துள்ளனர்" எனக் கூறுகின்றனர்.

'ஆதரவாக இருங்கள்'

உடல் பருமனால் தனக்கு ஏற்படும் வேதனைகளை, மன அழுத்தத்தை யாரிடமும் அபிமன்யு பகிர்ந்து கொள்வதில்லை. "உடல் பருமனாக இருப்பதால் நமக்கு ஏற்படும் வலிகளை வெளியே சொன்னால், நம்மை குறைவாக பார்ப்பார்கள் என்பதால் நான் பகிர்ந்துகொள்வதில்லை." என்கிறார் அவர்.

207 கிலோவிலிருந்து தற்போது 180 கிலோவில் உள்ளார். கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் அபிமன்யு.

"உடல் பருமனாக இருப்பவர்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். கொஞ்சம் ஆதரவாக நடந்துகொண்டாலே அவர்கள் உடல்நிலையை சரிசெய்து கொள்வார்கள்" எனக்கூறுகிறார் அபிமன்யு.

தன்னுடைய உடல் எடையால் மற்றவர்கள் செய்யும் கேலி, கிண்டல்களால் பலவித அழுத்தங்களுக்கு ஆட்பட்டாலும் மனநல ஆலோசகரை நாடவில்லை என்றும் நண்பர்களின் துணையால் அவற்றை கடந்து வந்திருப்பதாகவும் கூறுகிறார்.

ஆனால், அபிமன்யு போன்று உடல் பருமனால் பாதிக்கப்பட்ட பலரால் மன அழுத்தத்தை எளிதில் கையாள முடிவதற்கான சாத்தியக்கூறுகள் பெரும்பாலும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் பருமனால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதை சரிவர கவனிக்காமல் விட்டதால் நேர்ந்த விளைவுகள் எதிர்மறையானதாகவே உள்ளதை சமீபத்திய உதாரணம் ஒன்று காட்டுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தங்களின் அதீத உடல் எடையால், காஞ்சிபுரம் துரைப்பாக்கம் செகரட்டரியேட் காலனியைச் சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா(46) மற்றும் அவருடைய தங்கை சம்சத் பேகம் (33) இருவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் தங்கை இறந்துபோனார். ஆனால், இப்ராஹிம் பாதுஷா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் உடல் எடை அதிகரிப்பு காரணமாக இந்த முடிவை நோக்கிச் சென்றதாகவும் தற்போது 178 கிலோ இருப்பதாகவும் இப்ராஹிம் அச்சமயத்தில் பிபிசியிடம் கூறியிருந்தார்.

ஆட்கொள்ளும் மனநல பிரச்னைகள்

உடல் பருமன் - மன அழுத்தம் என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றே தோன்றுகிறது. மன சோர்வு, பதற்றம் என, மனநல ரீதியிலான பிரச்னைகள் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படுவதாக, பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலகளவில் 1990 முதல் 2022 வரையில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே (5-19) உடல் பருமன் 2 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, அதாவது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இதே விகிதம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரிடையே 7%ல் இருந்து 16% ஆக அதிகரித்துள்ளது. அதாவது இருமடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 5-ன் படி, (2019-21) 24% பெண்களும் 23% ஆண்களும் உடல் பருமனுடன் உள்ளனர். அவர்களுள் 15-49 வயதுக்குட்பட்டோரில் 6.4% பெண்களும் 4% ஆண்களும் உடல் பருமனுடன் உள்ளனர்.

மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் NFHS-4-ல் (2015-16) 2.1% ஆக இருந்தது, NFHS-5-ல் 3.4% ஆக அதிகரித்துள்ளது.

இப்படி உடல் பருமன் சமூக நோயாக வேகமாக பல்கிப்பெருகி வரும் நிலையில், அதனுடன் இணைப்பாக வரும் மனநல பிரச்னைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருப்பதாக மன நல ஆலோசகர்களும் மருத்துவ உலகமும் தொடர்ந்து கூறிவருகிறது.

தனியார் மருத்துவமனையில் உடல் எடையைக் குறைப்பதற்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார் பிரவீன் ராஜ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் உடல் பருமனை குறைக்க சிகிச்சைக்கு வந்த சுமார் 150 பேரிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டார் பிரவீன்.

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு என்னென்ன மனநல ரீதியிலான பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது குறித்து பிரவீன் ராஜ் மற்றும் அவருடைய குழு ஆய்வு செய்தது.

அதன் முடிவில், "72% நோயாளிகள் மன அழுத்தம், பதற்றம் என ஏதோவொரு மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த 72% நோயாளிகளில் சுமார் 80 சதவிகித பேருக்கு உடல் பருமனால் தான் மனநல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன." என்கிறார் பிரவீன் ராஜ்.

இவர்கள் அனைவரும் மருத்துவ ரீதியாக மன அழுத்தம் கொண்டவர்கள் இல்லை எனினும், அதை கவனிக்காமல் விட்டால் தீவிரமான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார். ஆய்வில் பங்கேற்றவர்களுள் யாருக்கெல்லாம் மன நல ஆலோசகரின் உதவி தேவைப்பட்டதோ அவர்களுக்கு அதை கிடைக்கச் செய்ததாக அவர் கூறுகிறார்.

மும்பையை சேர்ந்த தீபக்குக்கும் தன்னுடைய அதீத உடல் எடையால் இருந்த மிகப்பெரிய பிரச்னை, "நம்பிக்கை குறைந்து போவதுதான். எங்காவது வரிசையில் நிற்பது கூட சங்கடமாக இருக்கும், பொது போக்குவரத்தில் எங்களுடன் இருக்கையை பகிர்ந்துகொள்ள கூட தயங்குவார்கள்" என்கிறார். இவரும் மற்றவர்களால் ஏற்படும் சங்கடத்தால் வெளியில் செல்வதை தவிர்த்துவிடுகிறார்.

மும்பையில் ஐடி துறையில் பணிபுரியும் தீபக், 150 கிலோவுக்கும் அதிகமாக இருந்து தற்போது 112 கிலோ உள்ளார். பேரியாட்ரிக் சிகிச்சை மூலமாக எடையை குறைத்துள்ளார்.

"இதற்கு முன்பு அனைத்து விதமான டயட்டுகளும் நான் இருந்துள்ளேன். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வேன். ஆனாலும் உடல் எடை குறையாது அல்லது கொஞ்சம் குறைந்தாலும் மீண்டும் கூடிவிடும்" என்கிறார் தீபக்.

'சோம்பேறி, குற்றவாளி'

"உடல் பருமன் உள்ள நிறைய பேர், குறிப்பாக இளம் பெண்கள் (20-25 வயது) இயல்பாக, மகிழ்ச்சியுடன் இருப்பதாகத்தான் வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு தெரியும். ஆனால், உண்மையில் அப்படி மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.

யாரும் விரும்பி உடல் பருமனாக இருப்பதில்லை என மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பார்க்கிறவர்கள் எல்லாம், ஏதாவது அறிவுரை வழங்கிக்கொண்டே இருப்பார்கள். சமூகம் அவர்களை 'குற்றவாளி', 'சோம்பேறி' என முத்திரை குத்துவார்கள்." என கூறுகிறார் மருத்துவர் பிரவீன்.

மற்றவர்கள் தங்களை பார்க்கும் போதெல்லாம் உடலமைப்பு குறித்து பேசுகிறார்கள் என்பதால் உடல் பருமனாக உள்ளவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

"எனவே, அதை மறைக்க இயல்பாக, மகிழ்ச்சியுடன் இருப்பதாக போலியாக நடந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். ஆனால், என்னிடம் வரும் நோயாளிகள் நான் பேசப் பேச உடைந்து அழுவார்கள். உடல் பருமனால் அவர்களுக்கு இத்தகைய மன இறுக்கம் உள்ளது என அவர்களின் நெருங்கிய வட்டத்துக்கே அப்போதுதான் தெரியும். இது, நம்மிடம் உள்ள பலவீனத்தை, வேறொன்றால் மறைக்க முயல்வது." எனக்கூறுகிறார் பிரவீன் ராஜ்.

இதுதவிர, உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னைகள், உறவுச் சிக்கல்கள், வாக்குவாதங்களும் ஏற்படும்.

"இதுவொரு சங்கிலி மாதிரி தொடரும். சமூகம் உடல் பருமனாக உள்ளவர்களை குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் பிரச்னையாக உள்ளது. சமூகமோ, குடும்பமோ அவர்களை புரிந்து கொள்வதில்லை. நிறைய பேர் இதனால் தங்களைத் தாங்களே குறை கூறிக்கொள்வார்கள். சாப்பிடுவது மட்டும் இதற்குக் காரணமல்ல, ஒருவரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது என புரிந்துகொள்ள வேண்டும்." என்கிறார் பிரவீன்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்

"உடல் பருமனாக இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணை கூட அமையாது. ஒருகட்டத்தில் உங்களுடைய சொந்த குடும்பத்தினரே உங்களை புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள்." என்கிறார், தேனியை சேர்ந்த அபிமன்யு.

தன்னுடைய உடல் பருமனால் தனக்கு காதல் வாழ்க்கை அமையவில்லை என்று கூறுகிறார் அவர்.

தனக்கும் தற்கொலை எண்ணங்கள் தோன்றியிருப்பதாகக் கூறும் அபிமன்யு, ஆனால், தொழில்ரீதியான மனநல ஆலோசகர்களை அதற்காக நாடவில்லை என கூறுகிறார். நண்பர்கள் துணையாலேயே அந்த தருணங்களை மீண்டு வந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

உடல் பருமனுடன் இருப்பவர்கள் தங்கள் கஷ்டங்களை மறைக்க, தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள் என்றும் அவர்கள் செய்யும் கேலி, கிண்டல்களை ஏற்றுக்கொண்டும் இருப்பார்கள் என்றும் அபிமன்யு கூறுகிறார்.

உடல் பருமனால் ஏற்படும் மனநல பிரச்னைகளை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்கிறார், சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் மேரி.

"உடல் பருமனால் ஏற்படும் மனநல பிரச்னைகளை பெரும்பாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், மிகவும் அரிதாகத்தான் மன நல ஆலோசகர்களை நாடுவார்கள். பெரும்பாலும் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். அவர்களின் உணவுப்பழக்கம், தூக்கம், வாழ்வியல் எல்லாவற்றிலும் இதனால் மாற்றங்கள் ஏற்படும்" என்கிறார் அவர்.

இதை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே பேசுகிறார் மும்பையை சேர்ந்த தீபக். "மன நல ஆலோசகரிடம் செல்பவர்கள் குறித்து சமூகத்தில் பொதுபுத்தி உள்ளது. அவர்களை மனநல பிரச்னை கொண்டவர்கள் என சித்தரிப்பார்கள் என்பதால் நான் மனநல ஆலோசகரிடம் செல்லவில்லை" என்கிறார் அவர்.

உடல் பருமனுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் பொது புத்தியில் என்ன மாதிரியான உடலமைப்பு சிறந்தது என உருவாக்கி வைத்துள்ளனரோ, அதே மாதிரி தன்னை மாற்றிக்கொள்ள மிகவும் மெனக்கெடுவார்கள், அதற்கேற்ப உணவுப்பழக்கத்தை மாற்றுவார்கள் என்கிறார் மேரி.

"சிலருக்கு அதனாலேயே உண்ணும் பழக்கத்தில் ஒருங்கின்மை இருக்கும். சாப்பிட்டதும் அதை வாந்தியாக எடுத்துவிடுவார்கள் (அனரெக்சியா). சிலர் பசியுடனேயே இருப்பார்கள். சிலருக்கு body image disorder இருக்கும். அதாவது, நல்ல உடலமைப்புடன் இருந்தாலும் அதில் திருப்தியடைய மாட்டார்கள்." என கூறுகிறார்.

இதை ஆமோதிக்கும் வகையில் பேசுகிறார் மும்பையை சேர்ந்த தீபக். "இதனால் மன அழுத்தம் ஏற்படும்போது நான் அதிகமாக சாப்பிடுவேன். என்னுடைய உடல் எடையும் அதனால் ஏற்படும் மன அழுத்தமும் பின்னிப் பிணைந்ததாக இருந்தது. நான் உடல் பருமனாக இருக்கிறேன், அதனால் மன அழுத்தம் ஏற்படும், மன அழுத்தம் ஏற்பட்டால் அதிகமாக சாப்பிடுகிறேன், இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. ஒரு சுழற்சி போன்று இது இருக்கிறது. சாப்பிடுவதில் எனக்கு ஒருங்கின்மை இருந்தது" என்கிறார் தீபக்.

இன்னும் சிலர் தங்கள் உடலமைப்பை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, சீரான முயற்சியில் உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

"சிறுவயதிலிருந்தே உடல் பருமனாகத்தான் இருப்பேன். இதற்காக மன அழுத்தமோ, மன சோர்வோ ஏற்பட்டதில்லை. புடவை உள்ளிட்ட எனக்குப் பிடித்தமான உடைகளை அணியும்போது இன்னும் கொஞ்சம் நல்ல உடல்வாகுடன் இருந்திருக்கலாம் என்று மட்டும் தோன்றும். அதற்காக மனசோர்வு அடைந்து விடக்கூடாது.

அதையே நேர்மறையாக எடுத்துக்கொண்டு உடல் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவேன். ஒவ்வொரு வாரமும் சிறிதளவில் உடல் எடை குறைந்தாலும் அதை ஊக்கமாக எடுத்துக்கொண்டு முன்னேறி கொண்டிருக்கிறேன், நான் என்னவாக இருக்கிறேனோ அதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்கிறார் சென்னையை சேர்ந்த 32 வயதான ஐடி துறையை சேர்ந்த காவ்யா.

என்ன செய்ய வேண்டும்?

உடல் பருமனுடன் இருப்பவர்கள் மற்றவர்களின் கேலி, கிண்டல்களால் விரைவிலேயே உடல் எடையை குறைக்க வேண்டும் என, பலவித டயட்களை முறையான மருத்துவப் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

"ஒருவர் எதனால் உடல் பருமனுடன் இருக்கிறார், உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என்பதை முதலில் ஆராய வேண்டும். அவரவரின் உடல் எடைக்கு ஏற்ப வாழ்வியல் மாற்றங்கள், மாத்திரைகள், பேரியாட்ரிக் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்." என்கிறார் மருத்துவர் பிரவீன் ராஜ்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு