You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உங்கள் ஆரோக்கியத்தைக் காட்டும் இடுப்புச் சுற்றளவு - எப்படி அறியலாம்?
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
உடல் பருமன், அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் ஆகியவை பெரும் பிரச்னையாகவே இருந்து வருகின்றன.
பொதுவாக, உடல் பருமனைக் குறித்துப் பேசும்போது, உடல் நிறை குறியீட்டெண் (BMI - Body Mass Index) குறித்துதான் பேசுவோம்.
ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை இந்த அளவீடு சரியானதாக இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தியர்களின் உடலமைப்பு, இந்தியர்களின் வாழ்க்கை முறை, இந்தியர்களின் உடலில் கொழுப்பு சேரும் தன்மை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இடை-இடுப்புச் சுற்றளவு விகிதம் (waist-to-hip ratio) தான் உடல் பருமனைக் குறிக்கச் சரியான அளவீடாக இருக்கும் என்கின்றனர்.
இந்த இடை-இடுப்புச் சுற்றளவு விகிதம் என்றால் என்ன? இது எவ்வளவு இருக்க வேண்டும்? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நிபுணரான மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இடை-இடுப்புச் சுற்றளவு விகிதம் என்றால் என்ன?
ஒருவரது இடையின் சுற்றளவினை (அதாவது நாபி இருக்கும் புள்ளியிலிருந்து இடையின் சுற்றளவு), ஒருவரது இடுப்பின் சுற்றளவால் (ஒருவர் உள்ளாடை அணியும் இடத்தின் சுற்றளவு) வகுத்தால் கிடைப்பது தான் இந்த எண்.
- இடை-இடுப்புச் சுற்றளவு விகிதம் எவ்வளவு இருக்க வேண்டும்?
ஆண்களுக்கு இந்த விகிதம் 0.9 ஆகவும், பெண்களுக்கு இது 0.85 ஆகவும் இருக்க வேண்டும்.
இடைச் சுற்றளவு பொதுவாக ஆண்களுக்கு 40”-க்கும் பெண்களுக்கு 35”-க்கும் அதிகமாக இருந்தால் அது அதிக உடல் பருமன் நிலையைக் குறிக்கும்.
- BMI-யில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது?
உடல் நிறை குறியீட்டெண் ஒருவரது உடலில் கொழுப்பு எப்படிப் பரவியிருக்கிறது என்பதைச் சொல்லாது.
ஒருவரது உடல் நிறை குறியீட்டெண் 22-இல் இருந்து 24 வரை இருந்தால் அது ஆரோக்கியமானது. 26-க்கு மேல் சென்றால் அது உடல் பருமன் நிலையைக் குறிக்கும் என்கிறார் மருத்துவர் அஷ்வின்.
இடை-இடுப்புச் சுற்றளவு விகிதம் ஏன் தேவைப்படுகிறது?
இதுகுறித்து விளக்கிய மருத்துவர் அஷ்வின், பொதுவாக இந்தியர்களுக்கு கொழுப்பு உடல் முழுவதும் பரவியிருப்பதில்லை, இடை மற்றும் வயிற்றுப்பகுதியில் தான் அதிகம் கொழுப்பு படிகிறது, என்கிறார்.
“பொதுவாக இந்தியர்களைப் பார்த்தால், அவர்களது கை-கால்கள் சிறிதாக இருக்கும். ஆனால் அவர்களது வயிறு மற்றும் இடைப்பகுதியில் கொழுப்பு சேர்ந்திருக்கும். இதைத்தான் தொப்பை என்கிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கொழுப்பு உடலில் சம அளவில் பரவியிருக்கும்,” என்கிறார் அவர்.
இது ‘Thin fat Indian’ என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் மருத்துவர் அஷ்வின்.
இந்த நிலை வயிற்றுப் பருமன் (abdominal obesity) எனப்படுகிறது, என்கிறார் அவர். மேலும் இது பெண்களில் அதிகமாகக் காணப்படுகிறது, என்கிறார்.
“இந்த நிலையின் தீவிரத்தைக் கண்டறிய வேண்டுமென்றால், அதனை BMI-யை மட்டும் வைத்துக் கண்டறிய முடியாது. இதற்கு waist-to-hip ratio தேவைப்படுகிறது,” என்கிறார் அவர்.
இதனை மேலும் விளக்கிய மருத்துவர் அஷ்வின், “ஆரோக்கியமான BMI உள்ளவர்கள் கூட அதிக உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கக்கூடும். உதாரணமாக, அவர்களது கைகள், இடுப்பு, பின்புறம் ஆகியவற்றில் கொழுப்பு சேர்ந்திருக்கும். இதனை waist-to-hip ratio-வை வைத்துதான் கண்டறிய முடியும்,” என்கிறார் அவர்.
வயிற்றுப் பருமன் ஏன் ஏற்படுகிறது?
பொதுவாக நாம் உடலின் தோற்றத்தை வைத்து மட்டுமே ஒருவர் அதிக உடல் பருமன் உள்ளவரா என்று நாம் கணிக்கிறோம். ஆனால் உள்ளுறுப்புகளில் படியும் கொழுப்பு ‘visceral fat’ எனப்படுகிறது. இது நமது குடல்களுக்கு இடையிலும், கல்லீரலிலும் படிகிறது, என்கிறார் மருத்துவர் அஷ்வின்.
இந்த நிலை ஏற்பட முக்கியமான காரணங்களாக கீழ்வருபவற்றைக் கூறுகிறார் அவர்:
1) உணவுமுறை: இந்தியர்கள் அதிகமாக அரிசி போன்ற அதிக மாவுச்சத்து உள்ள பொருட்களையே உட்கொள்கின்றனர். புரதங்களை மிகக் குறைவாகவே உட்கொள்கின்றனர். மேலும் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் ஃபுட்’ உண்பது.
2) மதுப்பழக்கம்: மதுவில் ஊட்டச்சத்துகள் இல்லை. ஆனால், மிக அதிகமான அளவில் கலோரிகள் உள்ளன. இது வெற்றுக் கலொரிகள் (empty calories) எனப்படும். இது நேரடியாகக் கல்லீரலில் சென்று கொழுப்பாகப் படிகிறது.
3) உடற்பயிற்சி செய்யாமை: இன்று பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்த நிலையிலேயே வேலை செய்வது.
வயிற்றுப் பருமன் எவ்வளவு ஆபத்தானது?
வயிற்றுப் பருமன் எனப்படும் abdominal obesity, பல முக்கிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் மருத்துவர் அஷ்வின்.
1) நீரிழிவு நோய்: மதுப்பழக்கம் போன்றவற்றால் கல்லீரலில் கொழுப்பு படிகிறது. இதிலிருந்து 1 கிராம் அளவுகூட கணையத்தில் படிந்தால் அது நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும்.
2) மாரடைப்பு: உள்ளுறுப்புக் கொழுப்பு இதயத்தின் ரத்த நாளங்களில் படிவதால் (atherosclerosis) மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
3) பக்கவாதம்: உள்ளுறுப்புக் கொழுப்பு மூளையின் ரத்த நாளங்களில் படிவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
4) உயர் ரத்த அழுத்தம்: ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால், ரத்தம் பாய அதிக அழுத்தம் தேவைப்படும். இதனால் ரத்த அழுத்தமும் உயரும்.
5) புற்றுநோய்: அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் நிகழாததால், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
6) தூக்கத்தில் மூச்சுத்திணறல் (obstructive sleep apnea): உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு உறக்கத்தில் குறட்டை அதிகம் வரும். இது பிரச்னையாக மாறலாம்.
வயிற்றுப் பருமனை எப்படி சரிசெய்வது?
முதலில் உணவுமுறையை மாற்ற வேண்டும், என்கிறார் மருத்துவர் அஷ்வின்.
இந்தியர்களின் உணவுமுறை பொதுவாக 70% மாவுச்சத்து, 20% புரதச்சத்து, 10% கொழுப்புச்சத்து என்றிருக்கிறது. இது உடல் பருமனை அதிகரிக்கிறது என்கிறார் அவர்.
“ஆரோக்கியமான உணவுமுறைக்கு, 50%-55% மட்டும் மாவுச்சத்து, 30%-35% புரதச்சத்து, 10%-15% கொழுப்புச்சத்து இருக்கவேண்டும்,” என்கிறார் அவர்.
அதேபோல், மது அருந்துவதைக் குறைப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.
“தொப்பை இருப்பது நார்மல் ஆன விஷயம் அல்ல. அது ஒரு நோய்க்குறி. அதன்மீது கவனம் செலுத்தி உணவுமுறை, வாழ்க்கைமுறை ஆகியவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)