பந்துவீச்சில் அச்சுறுத்திய பாகிஸ்தான் கோட்டைவிட்டது எங்கே?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை உச்சி முகர்ந்தது இங்கிலாந்து. டி20 வரலாற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் குறைவாகவே ரன் எடுத்தது. ஆனாலும் இரண்டாவது பேட் செய்த இங்கிலாந்துக்கு இது மிக இலகுவான வெற்றியாக இல்லாத வகையில், அல்லது பாகிஸ்தானுக்கு படு தோல்வியாக இல்லாத வகையில் ஆட்டம் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை நீடித்தது.
இதற்கு பாகிஸ்தானின் அச்சுறுத்தும் பந்துவீச்சே காரணமாக இருந்தது. முதலில் பாகிஸ்தான் கோட்டை விட்டது எங்கே?
பவர் பிளேவில் தடுமாறிய பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். டாஸ் தமக்கு கைக்கூடவில்லை என பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தாம் முதலில் பந்துவீசவே விரும்பியதாகவும் பேசினார். உலக கோப்பைக்காக இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஆகியோர் இங்கிலாந்தின் வேகத்தை நிதானமாக எதிர்கொள்ள தொடங்கினர்.
சாம் கரணின் துல்லியமான பந்துவீச்சால் முகமது ரிஸ்வான் 15 ரன்களில் வெளியேறினார். 29 ரன்களில் பாகிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தை போலவே இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து சரியான திட்டமிடலுடன் பந்துவீசியது. பவர் பிளேயில் பாகிஸ்தானை அதிரடியாக ஆட விடாமல் சிறப்பான பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியது.
சரிவில் இருந்து மீளாத பாகிஸ்தான்
பாபர் ஆஸம் 32, ஷான் மசூத் 38, சதாப் கான் 20 ரன்களில் விடைபெற்றனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட் இழந்ததால் பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியாவுக்கு ஹர்திக் பாண்டியா ஆடியதை போல பாகிஸ்தானை எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரிவில் இருந்து மீட்க முடியவில்லை.
சாம் கரண் மிகத் துல்லியமாக பந்துவீசினார். 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த சாம் கரண், 15 பந்துகள் டாட் பாலாக மாற்றியதோடு முக்கியமான தருணங்களில் 3 விக்கெட்களையும் சாய்த்தார். இதேபோல ஆதில் ரஷீத் தனது சுழற்பந்துவீச்சால் 4 ஓவர்கள் வீசி 1 மெய்டனும் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார். இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு சேசிங்கின்போது பேட்ஸ்மேன்களுக்கு பெரியளவிலான நெருக்கடியை தவிர்த்தது என்றே சொல்லலாம்
பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான்
138 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து. ஆட்டம் ஒன் சைடட் கேமாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு பாகிஸ்தான் துளியும் இடம் தரவில்லை. இறுதிவரை தமது பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலை தந்தது. ஷஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்க, ஃபில் சால்ட் 10 ரன்களில் விடைபெற்றார். அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ஜாஸ் பட்லரை ஹாரிஸ் ரவுஃப் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ஹேரி ப்ரூக் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
பாதியில் வெளியேறிய ஷஹீன் அஃப்ரிடி
சதாப் கான் வீசிய பந்தில் ஹேரி ப்ரூக் ஷஹீன் அஃப்ரிடிக்கு கேட்ச் கொடுத்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ப்ரூக் ஆட்டமிழந்தது பாகிஸ்தானுக்கு பெரிய ஆறுதலை தந்தாலும் கூடவே கவலையையும் அளித்தது. கேட்ச் பிடிக்க முயன்றபோது பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடிக்கு காயம் ஏற்பட்டது. சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் 16வது ஓவரை வீச வந்தார். ஆனால் அவரால் முடியவில்லை. ஒரு பந்து மட்டுமே வீசிவிட்டு மீண்டும் கவலையோடு பெவிலியன் திரும்பினார் அஃப்ரிடி. அவருக்கு பதிலாக இஃப்திகார் அஹ்மத் மீதமுள்ள 5 பந்துகளை வீசினார்.
அந்த 5 பந்துகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. அதுவரை பவுண்டரி விளாச தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அந்த ஓவரின் கடைசி 2 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மொயின் அலி 12 பந்துகளில் 19 ரன்கள் விளாசி மிரட்டினார். அத்துடன் பாகிஸ்தானின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. சாம் கரண் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
கை நழுவியது எப்படி?
பாகிஸ்தானின் பலம் பந்துவீச்சு. குறைந்த ரன்களை சேர்த்திருந்தாலும் இங்கிலாந்துக்கு தமது பந்துவீச்சால் முடிந்தளவு நெருக்கடி அளித்தது. அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது ரவுஃப் உள்ளிட்டோர் சிறப்பாகவே பந்துவீசினர். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் சற்று கூடுதலான ரன்களை சேர்க்கத் தவறியது தோல்விக்கு பிரதான காரணம்.
பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. டெத் ஓவர்களில் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் அதிரடியாக ஆடி ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் போனது. அதிரடியாக ஆட்டக்கூடிய முகமது நவாஸை முன்கூட்டியே களமிறக்கியிருக்கலாம்.
மொயின் அலி போன்ற சுழற்பந்துவீச்சாளர்களை அவர் அதிரடியாக எதிர்கொண்டிருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும் என்று கருதப்படுகிறது. இறுதிவரை இங்கிலாந்தின் பந்துவீச்சை பாகிஸ்தானால் முறியடிக்க முடியாமல் போனது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












