பாகிஸ்தான் வெற்றிக்கு மேத்யூ ஹேடன் செய்தது என்ன?

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் திடீரென் வீறு கொண்ட பாகிஸ்தான் அணி மிக எளிதாக வென்றது. இதில் பாபர் ஆஸமும் ரிஸ்வானும் மிகச் சிறப்பாக ஆடினார்கள். சாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோர் பந்தவீச்சால் திணறடித்தார்கள். இவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்கள்.

இவர்களுக்கு இடையே மற்றொருவரும் பாகிஸ்தானின் வெற்றிக்காக முன்னிறுத்தப்படுகிறார். அவர் மேத்யூ ஹேடன். பாகிஸ்தான் அணியின் ஆலோசகர்.

“மேத்யூ ஹேடனின் கீழ் பாகிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல” என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ.

என்ன செய்தார் மேத்யூ ஹேடன்?

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் பாபர் ஆஸம் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் மேத்யூ ஹேடனை கட்டித் தழுவிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. உணர்ச்சிப்பூர்வமான தருணமாக அது இருந்தது.

அந்த உணர்ச்சிப் பெருக்குக்கு காரணம் உண்டு. தொடர் முழுவதுமே சரியாக ஆடாமல் இருந்த பாபர் ஆஸமை நியூஸிலாந்து போட்டிக்கு முன்னதாக உற்சாகப் படுத்தும் வகையில் பேசியிருந்தார் மேத்யூ ஹேடன்.

“பாபர் போன்ற சிறப்பான ஆட்டக்காரர்கள் நீண்ட காலம் மோசான நிலையில் இருக்க மாட்டார்கள்” என்று அப்போது அவர் கூறியிருந்தார். ரிஸ்வானும் பாபரும்தான் உலகின் நம்பர் 1 தொடக்க ஆட்டக்காரர்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுடன் பாபர் ஆஸமை ஒப்பிட்ட மேத்யூ ஹேடன், 2007-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கில்கிறிஸ்ட் ஆடியதைப் போல வரும் போட்டிகளில் பாபர் சிறப்பாகச் செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அதுதான் நடந்தது. ரிஸ்வானும் பாபரும் அரைச் சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். 12.4 ஓவர்களில் அவர்கள் 105 ரன்களை எடுத்தனர். அதன் பிறகுதான் தங்கள் மீது நம்பிக்கை வைத்த மேத்யூ ஹேடனை அவர்கள் ஆரத் தழுவினர்.

“மேத்யூ ஹேடன் எப்போதுமே ஒரு தலைவர். இதயத்தில் இருந்து பேசக்கூடியவர். ஏதாவது தவறாகப் பட்டால் உடனடியாக அதைச் சுட்டிக்காட்டக் கூடியவர்” என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ.

“அவருடைய வேட்கையும் அர்ப்பணிப்பும் தெளிவாகத் தெரியக்கூடியது” என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் மேத்யூ ஹேடனின் மற்றொரு சகாவான ஆடம் கில் கிறிஸ்ட்.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

மேத்யூ ஹேடனுக்கு இப்போது 51 வயது. 1993-ஆம் ஆண்டில் இருந்து 2007-ஆம் ஆண்டு வரை அவர் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உலகக் கோப்பை டி20 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி தடுமாறியது. இந்தியாவுடனும் ஜிம்பாப்வே அணியுடனும் தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. 

ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியுடன் தோற்றுப் போனதால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது.

ஆயினும் தொடக்கப் போட்டிகளில் தடுமாறிய அணி பலமான நியூஸிலாந்து அணியை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தபோது, மிக எளிதாக அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. 1992-ஆம் ஆண்டு எங்கோ காணாமல் இருந்த அணி கடைசியில் கோப்பையை வென்றது போல இன்னொரு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள்.

“போராட்டத்தை விரும்புவேன்”

பாகிஸ்தான் அணிக்கு நேரடியான பயிற்சியாளராக மேத்யூ ஹேடன் நியமிக்கப்படவில்லை. அவர் அணியின் ஆலோசகர் மாத்திரமே. ஆனால் அவரை அணியை வழிநடத்தக்கூடியவராகச் செயல்படுவதை மைதானத்தில் காண முடிகிறது. 

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

“நான் உண்மையிலேயே போராட்டத்தை விரும்புவேன். போராட்டம்தான் வளர்வதற்கான வாய்ப்பை வழங்கும். ஒரு அணியாக உருவெடுக்க வைக்கும்” என்று கூறுகிறார் மேத்யூ ஹேடன்.

பாகிஸ்தான் ஆடும் போட்டிகளில் இடைவேளைகளின்போது அவரை மைதானத்துக்குள் காண முடியும். மற்ற தருணங்களில் அவர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் காணலாம். ஆலோசகராக இருக்கும் அவரை பயிற்சியாளராக மாற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கோரிக்கை விடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டி எப்படி?

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

அரையிறுதிப் போட்டியில் எளிதாக வென்ற உற்சாகத்தில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தயாராக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்றிருக்கிறது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் பாபர் ஆஸம், ரிஸ்வான் இணையைப் போல, இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் இணை சிறப்பான துவக்கத்தை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாஹீன் ஷா அப்ரிடி என்றால் இங்கிலாந்துக்கு சாம் கரன். இரு தரப்புமே இப்போதைக்கு சமமான பலத்தைக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நம்பலாம். எனினும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், மலான் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.

மெல்போர்ன் மைதானம் எப்படி?

மெல்போர்னில் நாளை காலநிலை மோசமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முடிவு கிடைக்கும் வகையில் போட்டியை ஆடுவதற்கு நேரம் கிடைக்கலாம். இந்த மைதானத்தில் ஏற்கெனவே ஆடப்பட்ட போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது 160 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் இரண்டாவது ஆடும் அணிக்கு அது சவாலானதாக இருக்கும்.

காணொளிக் குறிப்பு, ரிஷி சூனக்கின் காதல் மனைவி அக்ஷதா பற்றி வெளி உலகம் அதிகம் அறியாத பின்னணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: