You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சச்சின் சாதனையை தகர்த்தவர்: இந்திய அணிக்குள் கடைசியாக நுழைந்து முத்திரை பதித்த 'ஷெஃபாலி வர்மா'
- எழுதியவர், நிதின் சுல்தான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் மைதானத்தில் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, இந்தியா முழுவதும் மீண்டும் ஒருமுறை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை உலக கோப்பை அனுபவத்தை இந்திய மகளிர் அணியினர் வழங்கினர்.
இந்த போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி, ஜெமிமா, ரேணுகா, பிரதிகா, கிராந்தி, தீப்தி மற்றும் ஸ்ரீசரணி ஆகியோர் தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தினர்.
எல்லோரும் தங்களின் பங்களிப்பை வழங்கினாலும் இன்று அனைவரின் உதடுகளும் உச்சரிக்கும் ஒரு பெயர், ஷெஃபாலி வர்மா.
கடைசி இரண்டு போட்டிகளில் அணிக்குள் நுழைந்த ஷெஃபாலி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தால் தடம் பதித்தார். இறுதிப்போட்டியில் 'ஆட்ட நாயகி' விருதையும் வென்றார்.
சிறுமியாக தலைமுடியை வெட்டிக்கொண்டு, ஆண்கள் பிரிவில் கிரிக்கெட் விளையாடி, இப்போது உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக மாறியுள்ள ஷெஃபாலியின் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது.
ஆனால், இந்த பயணத்திற்கு முன்பு ஷெஃபாலி திடீரென அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து பார்க்கலாம்.
உலகக் கோப்பையும் அதிர்ஷ்டமும்
இந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஷெஃபாலி வர்மாவின் பெயர் இடம் பெறாதது பலரது புருவங்களை உயர்த்தியது.
அவருக்கு பதிலாக தேர்வுக்குழு பிரதிகா ராவலை தேர்வு செய்தது. தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நியாயம் சேர்க்கும் வகையில் பிரதிகா ராவலும் சிறப்பாக விளையாடினார்.
2024-ஆம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஷெஃபாலி விளையாடாததால் அவரை உலகக்கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுப்பது சிக்கலானது. ஷெஃபாலியை மாற்று துவக்க ஆட்டக்காரராக கூட தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கவில்லை.
ஆனால், பிரதிகா ராவல் காயமடைந்த போது, அரையிறுதியில் ஷெஃபாலியை துவக்க ஆட்டக்காரராக தேர்வுக்குழு முடிவு செய்தது.
அரையிறுதி போட்டி அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால், இறுதிப்போட்டியில், "சிறப்பான ஒன்றை செய்வதற்காக கடவுள் என்னை அனுப்பியுள்ளார்," என அவர் கூறியது முற்றிலும் உண்மை என்பதை நிரூபித்தார்.
தற்செயலாக கிடைத்த இந்த வாய்ப்பு 21 வயதான ஷெஃபாலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
சிறுமியாக போட்டிகளில் கலந்துகொண்ட ஷெஃபாலி வர்மா
ஷெஃபாலியின் தந்தை சஞ்சீவ், ரோஹ்தக்கில் நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் ஆவார். ஷெஃபாலி சிறுவயதிலேயே கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அவரது தந்தை உறுதுணையாக இருந்தார்.
அந்த சமயத்தில், உள்ளூர் கிளப்புகள் பெண்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க மறுத்தன. எனவே ஆறு வயதான போது ஷெஃபாலியின் தந்தை அவருடைய தலைமுடியை ஆண் போன்று கத்தரித்துவிடுவார்.
அதன்பின், குழந்தைகளுக்கான போட்டிகளில் அவர் பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர் சிறுமி என்பதை யாரும் கவனிக்கவில்லை.
ஷெஃபாலியின் சகோதரரும் கிரிக்கெட் விளையாடுவார். உள்ளூர் கிரிக்கெட் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஒருமுறை, போட்டியின்போது அவரின் சகோதரரின் உடல்நிலை சரியில்லாமல் போகவே, ஷெஃபாலி அவருக்கு பதிலாக விளையாடினார்.
ரோஹ்தக்கில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கடைசி ராஞ்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, போட்டியை காண ஷெஃபாலியை அழைத்துச் சென்றார் தந்தை சஞ்சய்.
சச்சின் விளையாடியதை பார்த்த அவர், தானும் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என மனதில் நினைத்தார். அதன்பின், அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.
பின்னர், ஷெஃபாலி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சச்சினின் சாதனையை முறியடித்தார். அந்த போட்டியில் 49 பந்துகளுக்கு 73 ரன்கள் குவித்தார். அந்த சமயத்தில் ஷெஃபாலியின் வயது 15 ஆண்டுகள் மற்றும் 285 நாட்கள்.
இதன்மூலம், இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த மிக இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பாக 1989-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் 59 ரன்களை குவித்ததுதான் சாதனையாக இருந்தது.
அதிரடி வீராங்கனை என்று பெயர் பெற்றவர்
ஆரம்பத்திலிருந்தே அதிரடியான பேட்டிங்குக்கு பெயர் பெற்றவர் ஷெஃபாலி. அதனால் தான் அவரின் ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் அணியின் ஷேவாக் என்று அவரை அழைக்கின்றனர்.
முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடும் சில பேட்டர்களில் இவரும் ஒருவர்.
மேலும், ஃபோர் மற்றும் சிக்ஸர் என்று வரும்போது மற்றவர்களைவிட இவர் முன்னிலையிலேயே உள்ளார்.
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அலெக்ஸ் ஹார்ட்லே பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசுகையில், "நாங்கள் மந்தனாவை முதன்முறையாக பார்த்தபோது அவரைப் போன்று யாராலும் பேட்டிங் செய்ய முடியாது என நினைத்தோம். ஆனால், ஷெஃபாலியின் பேட்டிங்கை பார்த்த பிறகு மந்தனாவைவிட ஒப்பீட்டளவில் அவர் முன்னணியில் உள்ளார். ஷெஃபாலியின் பேட்டிங் நம்ப முடியாததாக உள்ளது," என்றார்.
ஷெஃபாலியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள ரகசியம்
சமரசம் இல்லாத பேட்டிங் பாணி தான் அவருடைய வெற்றிக்கு காரணம் என, அவருடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி கூறுகின்றனர்.
ஷெஃபாலியுடன் இணைந்து விளையாடிய ஷிகா பாண்டே கூறுகையில், "உள்நாட்டு போட்டிகளில் தான் நாங்கள் முதன்முறையாக ஷெஃபாலியை பார்த்தோம். அப்போதிலிருந்து, அதிரடியாக விளையாடி வருகிறார். பின்னர், அவர் தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்." என்றார்.
"என்னுடைய 16 வயதில் நான் கிரிக்கெட் பயிற்சியை கூட ஆரம்பித்திருக்கவில்லை. நான் தெருக்களில் தான் விளையாடிக் கொண்டிருந்தேன். எனவே, 16 வயதான ஷெஃபாலி இந்தியாவுக்காக விளையாடுவதை பார்ப்பது சிறப்பானதாக உள்ளது." என்றார்.
ஷெஃபாலியின் கிரிக்கெட் பயணம்
ஷெஃபாலி 5 டெஸ்ட் போட்டிகளில் 567 ரன்கள் குவித்துள்ளார், இதில் ஒரு சதமும் மூன்று அரை சதங்களும் அடக்கம். டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை அவர் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 31 போட்டிகளில் 741 ரன்களை எடுத்துள்ளார், இதில் அவர் சதம் எடுக்கவில்லை.
டி20 போட்டிகளில் அவருடைய பேட்டிங் எப்போதும் சிறப்பானதாக இருந்திருக்கிறது. 90 டி20 போட்டிகளில் 11 அரை சதங்கள் உட்பட 2221 ரன்களை அவர் குவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் டி20 பேட்டர் தரவரிசையில் முதலிடத்தையும் அவர் எட்டினார்.
மகளிர் பிரீமியர் லீக்கிலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். டெல்லி அணிக்காக விளையாடிய போது அவர் 865 ரன்கள் எடுத்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு