தமிழருக்கு சௌதி அரேபியாவில் மரண தண்டனை - காப்பாற்ற முடியுமா? முழு பின்னணி

பட மூலாதாரம், KUMANAN
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியகோட்டுமுளை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த பரதன் பாண்டுரங்கன் 27 வயதாக இருந்த போது 2000ஆம் ஆண்டில் சௌதி அரேபியா சென்றார் .
சௌதி அரேபியாவில் உள்ள அல்ஜூபைல் ஜெனரல் மருத்துவமனையில் இஇஜி (Electroencephaloram) டெக்னீஷியனாக அவர் பணி செய்தார். பரதனின் அறையில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த ஃபைசல் என்பவர் 2008 ஆம் ஆண்டு ஜூன் 31-ஆம் தேதி கொல்லப்பட்டார். அடுத்த இரண்டு வாரங்களில் பரதன் கைது செய்யப்பட்டார்.
"பணம் தொடர்பான தகராறில் ஃபைசலை சித்ரவதை செய்து பரதன் கொன்றுவிட்டார்" என்பது சௌதி காவல்துறையின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் பரதனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக சௌதியில் உள்ள ஜூபைல் சிறையில் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் பரதன்.
'எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம்' என்ற சூழலில், அதில் இருநது தப்புவதற்கு பரதன் முன் தற்போது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று, அவரை மன்னிப்பதாக, ஃபைசல் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கடிதம் பெறுவது அல்லது இந்திய அரசின் மீட்பு முயற்சி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கேரள பயணத்தில் என்ன நடந்தது?
ஃபைசல் குடும்பத்தினரிடம் Blood money (நஷ்ட ஈடு கொடுத்து மன்னிப்புக் கடிதம் பெறுவது) பேச்சுவார்த்தையில் பரதன் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக முயன்றுள்ளனர்.
"கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள ஃபைசலின் குடும்பத்தினரிடம் உள்ளூர் வழக்கறிஞர் மூலம் நேரில் சென்று பேசினோம். ஆனால், எங்களின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை" என்கிறார் பரதனின் அண்ணன் குமணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஃபைசல் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது அவரது தாய்மாமா முகமது எங்களிடம் பேசினார். எங்களிடம் அவர், 'ஃபைசல் சாகும் போது அவனது குழந்தைகளுக்குச் சிறு வயது. இப்போது வரை சௌகத் அலியை (ஃபைசலின் சகோதரர்) தனது தந்தையாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் நான் பேசிப் பார்க்கிறேன்' என்றார்.
ஒரு கட்டத்தில், 'மன்னிப்புக் கடிதம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறி தங்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார் குமணன்.
மீண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் உதவியுடன் முகமதுவிடம் பேச சென்றுள்ளனர். இந்த முறை கசப்பான அனுபவங்களை பரதன் குடும்பத்தினர் எதிர்கொண்டுள்ளனர். மன்னிப்புக் கடிதம் பெறும் முயற்சி தோல்வியடைந்ததால், இந்திய அரசின் உதவியுடன் பரதனை மீட்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
வெளியுறவுத்துறை சொன்னது என்ன?

பட மூலாதாரம், KUMANAN
இந்நிலையில், இந்திய அரசுக்கும் சௌதி அரேபிய அரசுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்த உடன்படிக்கை அமலில் இருப்பதால், அதன் அடிப்படையில் பரதனை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரதனின் தாய் சரோஜா வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதன்கிழமையன்று (செப்டம்பர் 4) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்திய வெளியுறவுத் துறையின் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சுதா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தொடக்கத்தில் பரதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தண்டனையில் மாற்றம் செய்யப்பட்டு மரண தண்டனையாக மாற்றப்பட்டது. பரதனுக்கு தூதரக ரீதியிலான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அவரின் விடுதலை தொடர்பாக, உயிரிழந்த ஃபைசலின் குடும்பத்தினருடைய வழக்கறிஞர்களை அணுகலாம்' எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகளும், "கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இருந்தாலும் அதைச் செயல்படுத்துமாறு நாங்கள் உத்தரவிட முடியாது. வெளியுறவுத் துறையை அணுகி நிவாரணம் பெறுங்கள்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
பரதனை மீட்டு வருவது சாத்தியமா?

பட மூலாதாரம், KUMANAN
"கைதிகள் பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில், சௌதியில் 2006 முதல் 2012 வரையில் 75 இந்திய கைதிகளை விடுதலை செய்து அழைத்து வந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு விதமான குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள். இதை நீதிமன்றத்தில் தெரிவித்தோம். வழக்கு முடித்து வைக்கப்பட்டதால், உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறோம்" என்கிறார் பரதனின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.
இதே கூற்றை வலியுறுத்தி பிபிசி தமிழிடம் பேசிய மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி, "கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில், இந்திய அரசு முடிவெடுத்தால் பரதனை மீட்டுக் கொண்டு வருவது எளிதான ஒன்று" என்கிறார்.
அதற்கு உதாரணமாக, கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை இந்திய அரசு மீட்ட வழக்கை அவர் மேற்கோள் காட்டினார்.
பணமும் தங்கமும் எங்கே?
"கேரளாவில் உள்ள மாட்டுல் என்ற ஊர்தான் ஃபைசலின் சொந்த ஊர். அவர் சௌதியில் பிசியோதெரபி டெக்னீஷியனாக இருந்தார். என் அண்ணனும் அவரும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளனர். ஃபைசல் குடும்பத்துடன் எனது அண்ணன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவரின் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள் கொடுப்பது, பிரியாணி சமைப்பது என அவர்களின் நட்பில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார் குமணன்.
"என் அண்ணனுக்கும் அவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. வழக்கில் கேரள இளைஞர் ஒருவர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், வழக்கு முடியும்போது பரதனை முதல் குற்றவாளியாக அறிவித்தனர்,” என்கிறார் குமணன்.
தாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொலைபேசியில் பரதனிடம் பேசுவதாக குமணன் தெரிவித்தார். எட்டு ஆண்டுகளாக பரதன் சேர்த்து வைத்த பணமும் தங்கமும் எங்கே எனத் தெரியவில்லை என்கிறார் குமணன்.
பரதனின் விடுதலைக்காக தொடக்கத்தில் இருந்தே சௌதியில் உள்ள தமிழ்ச் சங்கம் ஒன்றின் பொதுச்செயலராக இருந்த வாசு விஸ்வராஜ் என்பவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
சௌதியில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், KUMANAN
"ஜூபைல் சிறையில் பரதனை நான்கு முறை சந்தித்துப் பேசினேன். கொலை குறித்து அவரிடம் கேட்டபோது, 'ஃபைசலுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. அவரிடம் இருந்து பணத்தை வாங்குவதற்காக அறையில் பூட்டி வைத்திருந்தேன். ஒருநாள் தப்பித்துச் செல்லும் போது கீழே விழுந்து இறந்துவிட்டார்' என்றார். இந்த விவகாரத்தை கேரள ஊடகங்கள் பெரிதாக வெளியிட்டன" என்கிறார் வாசு விஸ்வராஜ்.
"குறிப்பாக, 'ஃபைசலை ஒரு வாரம் கட்டிப் போட்டு பரதன் சித்ரவதை செய்தார். ஃபைசல் குடிப்பதற்குச் சிறுநீர் கொடுத்தார்' என்றெல்லாம் செய்தி வெளியானது. ஃபைசலின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கடிதம் பெறுவதற்காக நானும் உடன் சென்றேன். ஃபைசலின் உடன் பிறந்த சகோதரரையே ஃபைசலின் மனைவி திருமணம் செய்து கத்தாரில் வசித்து வருவது தெரிய வந்தது. அவர்கள் நல்ல நிலையில் இருப்பதால் பணம் தேவைப்படவில்லை.
இதையடுத்து, சௌதி நீதிமன்றத்தில் மனு ஒன்றைக் கொடுத்தேன். அதில், 'பரதன் நிரபராதி. ஃபைசலின் மனைவி வேறு திருமணம் செய்துவிட்டார். அவரது மகள் மேஜராகும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஃபைசலின் மகள் மேஜராகி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் பரதனுக்கு சிக்கல் ஏற்படலாம்" என்கிறார் வாசு விஸ்வராஜ்.
கொலை வழக்கில் மீண்ட குமரி மீனவர்கள்
இதேபோன்ற கொலை வழக்கு ஒன்றில் கன்னியாகுமரி மீனவர்கள் இருவரை Blood money எனப்படும் நஷ்ட ஈடு வழங்கி மீட்டதாகக் குறிப்பிட்டார் வாசு விஸ்வராஜ்.
"கன்னியாகுமரியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை வழக்கு ஒன்றில் சௌதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். சௌதியில் மது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்பதால் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல தயக்கம் காட்டியுள்ளனர். இதனால் ரத்தம் கொட்டி அந்த நபர் இறந்துவிட்டார். இறந்தவரின் குடும்பத்துக்குப் பணம் கொடுத்து மன்னிப்புக் கடிதம் வாங்கினோம். அந்த மீனவர்கள் இருவரும் சொந்த ஊர் திரும்பிவிட்டனர்" என்கிறார்.
அதேநேரம், நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டதால், மிகுந்த கவலையில் இருக்கிறார், பரதனின் தாயார் சரோஜா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என் மகனைப் பார்த்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருமுறை வந்து என் முகத்தைப் பார்த்தால் போதும். மகன் நினைப்பாகவே இருப்பதால் சாப்பிடக்கூட முடிவதில்லை " என்கிறார் கண்ணீருடன்.
ஃபைசல் குடும்பத்தினர் சொல்வது என்ன?
பரதன் குடும்பத்தினரின் கோரிக்கை தொடர்பாக, கேரளாவில் உள்ள ஃபைசலின் தாயாருடைய சகோதரர் முகமதுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
"பரதன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து எனக்குத் தகவல் எதுவும் வரவில்லை. அவர்கள் தொடர்ந்த வழக்கு குறித்து நான் பேசவும் விரும்பவில்லை. அதைப் பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை. மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து ஃபைசலின் சகோதரர்களே முடிவெடுப்பார்கள்" என்று மட்டும் பதில் அளித்தார். தொடர்ந்து, மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
"ஃபைசலை பரதன் கொலை செய்தாரா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும் சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. 33 வயதில் அவர் சிறைக்குப் போனார். இப்போது 49 வயதாகிவிட்டது. அவரது இளமைக் காலமே தொலைந்துவிட்டது. அதை மனதில் வைத்தாவது இந்திய அரசு அவரை மீட்க வேண்டும்" என்கிறார் குமணன்.

பட மூலாதாரம், KUMANAN
வழக்கு விவரம்
சௌதியில் 2000 ஆம் ஆண்டில் மருத்துவமனை ஒன்றில் இஇஜி டெக்னீஷியனாக பரதன் பணியில் சேர்ந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு அதே மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக ஃபைசல் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவர்களுடன் எல்தோஸ் வர்கீஸ் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். மூவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஃபைசல் கொல்லப்பட்டார்.
ஜூலை 13ஆம் தேதி பரதன் கைது செய்யப்பட்டார். தன்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தருமாறு ஃபைசலிடம் பரதன் கேட்டதாகவும் அவர் மறுக்கவே கையைக் கட்டிப் போட்டு சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட மோதலில் ஃபைசல் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து சமையல் கூடத்துக்கு ஃபைசலின் உடல் கொண்டு செல்லப்பட்டதை சாட்சி ஒருவர் பார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது. வழக்கின் தடயங்களை அழிப்பதற்கு குற்றவாளி முயற்சி செய்ததாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பரதன் குற்றம் செய்ததாகக் கூறி ஆயுள் தண்டனையுடன் 1,000 கசையடி வழங்குமாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கசையடியை தவணை முறையில் நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில், ஃபைசல் குடும்பத்தினரின் மேல்முறையீட்டில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்திய அரசால் காப்பாற்ற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
1. இந்திய கடற்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள் கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அங்குள்ள நீர்மூழ்கிக் கப்பலில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தூதரகம் வழியாக சட்டரீதியான உதவிகளை மேற்கொண்டு அவர்களை இந்திய அரசு மீட்டது. இதுதொடர்பாக, துபாயில் நடைபெற்ற காப் உச்சி மாநாட்டில் கத்தார் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியிடம் பிரதமர் மோதி கோரிக்கை வைத்ததாகக் கூறப்பட்டது.
2. கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம், சௌதியில் 2006 ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றார். அங்கு கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளரின் மகனான சிறுவன் மாற்றுத் திறனாளியாக இருந்தார். ஒருநாள் கார் பயணத்தின் போது சிறுவனின் கழுத்தில் இருந்த செயற்கை சுவாசக் குழாய் மீது ரஹீமின் கைபட்டதால் மயக்கமான சிறுவன் மரணமடைந்துவிட்டார்.
இந்த வழக்கில் ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவனின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாயை அவர்கள் கேட்டனர். நிதியைத் திரட்ட வாட்ஸ்ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டன. 34 கோடி ரூபாயும் திரட்டப்பட்டதால் மரண தண்டனையில் இருந்து ரஹீம் தப்பித்தார்.
3. கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, வேலைக்காக ஏமன் நாட்டுக்குச் சென்றார். அவர் பணி செய்த இடத்தின் உரிமையாளர் அப்தே மஹ்தி என்பவருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவரின் பாஸ்போர்ட்டை உரிமையாளர் எடுத்துக் கொண்டதால் அதை மீட்கும் முயற்சியில் மயக்க ஊசி போடும் போது டோஸ் அதிகமாகி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு கைதான நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நிமிஷாவின் விடுதலைக்காக 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' அமைப்பு, இந்திய அரசு தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இன்றளவும் ஏமனில் உள்ள சிறையில் மரண தண்டனைக் கைதியாக இருக்கிறார் நிமிஷா பிரியா.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












