You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேப்டன்சி மாற்றம் முதல் வீரர் தேர்வு வரை - சிஎஸ்கே கோட்டை விட்டது எங்கே? தோனி இல்லாத அணி சாத்தியமா?
- எழுதியவர், போத்திராஜ். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதிய கேப்டன், ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்கள், முதல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வரை ஏற்றம் என உற்சாகமாக ஐபிஎல் 2024 சீசனைத் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
வழக்கம்போல் இந்த முறையும் சிஎஸ்கே தான் சாம்பியன், ப்ளே ஆஃப் சுற்றில் வெல்லப்போகிறது, தோனியின் வழிகாட்டலில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றெல்லாம் ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்து புலங்காகிதம் அடைந்தனர்.
ஆனால், ஐபிஎல் தொடரில் உயிர்ப்பித்து நின்றிருக்க வேண்டிய முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனமும் அம்பலமானது. முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து ஐபிஎல் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறியது 5 முறை சாம்பியன் வென்ற சிஎஸ்கே அணி.
2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்வி என 14 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட் 0.392 என 5-வது இடத்தைப் பிடித்து, ப்ளே ஆஃப் செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது.
ஆனால், தொடக்கத்தில் முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றி, அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளைக் குவித்து ஆர்சிபி அணி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சிஎஸ்கே-வைச் சாய்த்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது.
ஐபிஎல் தொடரின் முதல் பாதி சுற்று முடியும் போது ஆர்சிபி-யின் நிலையைப் பார்த்து, ஆர்சிபி வெளியேறிவிடும் என்று அந்த அணியின் ரசிகர்களே பேசத் தொடங்கி, கருத்துக்களைப் பதிவிட்டனர். ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் ஆர்சிபி அணி பொய்யாக்கி, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது.
சிஎஸ்கே-வின் ஆட்டம் எப்படி?
ஐபிஎல் வரலாற்றில் 2024 சீசன்தான் சிஎஸ்கே அணியின் 3வது மோசமான ஆட்டம் என்பது தெரியவந்துள்ளது. 2008-ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வெற்றி சதவீதம் குறைந்தபட்சம் 55 சதவீதத்துக்கு மேல் இருந்து, அதிகபட்சம் 68 சதவீதம் இருந்துள்ளது.
எந்தெந்த சீசனில் வெற்றி சதவீதம் குறைந்ததோ அந்த சீசனில் சிஎஸ்கே மோசமாக அடிவாங்கியது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டு சிஎஸ்கே வெற்றி சதவீதம் 42.86 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் வெறும் 28.57 சதவீதமாகவும் இருந்தது. அதற்கு அடுத்தார்போல் 2024 சீசனில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் 50 சதவீதம் இருந்துள்ளது.
ஆக, ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடாக 2024 ஐபிஎல் சீசன் அமைந்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம்.
இதில் 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியதற்கு முதல் காரணம், சிஎஸ்கே-வின் கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்புதான். சிஎஸ்கே கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு மீண்டும் தோனி நியமிக்கப்பட்ட குழப்பம் தோல்விக்கு இட்டுச் சென்றது.
அதேபோன்ற குழப்பம் 2024 சீசன் தொடக்கத்திலும் ஏற்பட்டது. ஐபிஎல் சீசன் தொடங்கும்வரை தோனிதான் கேப்டன் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது, அதிர்ச்சியையும், அவர் எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் 2024 ஐபிஎல் சீசன் போட்டியின் இடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பும் சிஎஸ்கே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காகக் கடந்த சில சீசன்களாகச் சிறப்பாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை ஆனால், ஷிவம் துபே ,ஜெய்ஸ்வால் இடம் பெற்றது குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால், கெய்க்வாட் கடந்த சில சீசன்களாக சிறப்பாகச் செயல்பட்டநிலையில் அவருக்கான இடம் இந்திய அணியில் இல்லை.
ஆனால், இந்த ஆதங்கத்தை கெய்க்வாட் எந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தவில்லை, அவரது பேட்டிங் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும், மனதளவில் அவருக்கு இது தாகத்தை ஏற்படுத்தி இருக்கும், அவரின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
வீரர்கள் தேர்வில் என்ன சிக்கல்?
2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் தேர்வே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சிஎஸ்கே அணியில் இதற்கு முன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல ஜாம்பவான்கள் இருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றபின் அந்த இடத்தை நிரப்பச் சரியான வீரர்கள் கொண்டுவரப்பட்டார்களா என்ற கேள்விக்கு பதில் இல்லை.
உதாரணமாக, டூவைன் பிராவோ சிஎஸ்கே அணியின் பெரிய சொத்து. ஆட்டத்தை எந்தநேரத்திலும் மாற்றக்கூடிய திறன் கொண்டவர், தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வேரியேஷன்களை வெளிப்படுத்தி எதிரணியை திக்குமுக்காடச் செய்பவர். பிராவோ இருக்கும்வரை சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் யானை பலம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், பிராவோ ஓய்வு பெற்றுச் சென்றபின் அவரது இடத்தை நிரப்பச் சரியான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனரா, என்றால், பிராவோவுக்கு இணையாக இல்லாவிட்டாலும், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் யாரும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
சிஎஸ்கே அணிக்கு நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் பிளெம்பிங் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதால், நியூசிலாந்து வீரர்களுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. டேவான் கான்வே, மிட்ஷெல் சான்ட்னர், டேரல் மிட்ஷெல், ரச்சின் ரவீந்திரா என நியூசிலாந்து வீரர்கள் அதிகம் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் டேவன் கான்வே காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவானது. இருப்பினும் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல், ரூ.1.80 கோடிக்கு வாங்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, ரூ.1.80 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்ஷெல் சான்ட்னர் எந்த அளவுக்கு இந்த சீசனில் திறமையை வெளிப்படுத்தினர் என்பது ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று.
குறிப்பாக 'ஆல்ரவுண்டர்' அந்தஸ்துக்காக வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் 13 போட்டிகளில் 318 ரன்கள் சேர்த்து, சராசரியாக 24 என வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் 142 என, மிரட்டும் அளவுக்கு இல்லை.
அதேபோல 10 போட்டிகளில் மட்டும் ஆடிய ரச்சின் ரவீந்திரா 222 ரன்கள் சேர்த்து 22 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார். மிட்ஷெல் சான்ட்னருக்கு பந்துவீச்சில் வாய்ப்பே வழங்கப்படவில்லை, மூன்று போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆக, சிறப்பாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து வீரர்கள் தேர்வும் சிஎஸ்கே-வுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.
இதுதவிர, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், சமீர் ரிஸ்வி 8 போட்டிகளில் பங்கேற்று வெறும் 51 ரன்கள் மட்டுமே சேர்த்து வெறும் 7.5 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார். சர்வதேச அளவில் அனுபவம் இல்லாத, டி20 போட்டிகளில் பெரிதாக சாதிக்காத வீரர்களை ஏலத்தில் எடுத்து சிஎஸ்கே கையைச் சுட்டுக்கொண்டது.
ஷிவம் துபே-வை ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கொண்டாடும் சிஎஸ்கே அணி, அவருக்கு இந்த சீசனில் அதிகபட்சம் 10 ஓவர்கள்கூட வழங்கவில்லை. ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய ஷிவம் துபே, பிற்பகுதியில் படுமோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் ஆடிய துபே 396 ரன்கள் குவித்து 28 ரன்கள் சராசரி வைத்து 162 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களுக்கும் சர்வதேச அனுபவம் பெரிதாக இல்லை. தரமான பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து ஆடி சன்சேர்ப்பது என்பதிலும் அனுபவம் இல்லை. வீரர்கள் தேர்விலேயே சிஎஸ்கே அணி கோட்டை விட்டது.
ரஹானே, மொயின் அலி மீது விமர்சனம்
ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் குறித்துக் கேள்வி எழுந்து விமர்சிக்கப்பட்ட பின்புதான் அவரை இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டினர். ஆனால், ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவே சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து வாழ்வு கொடுத்தது. கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக சொதப்பினார். தொடக்க வரிசை, நடுவரிசை, ஒன்டவுன் என பலவரிசையில் மாற்றி ரஹானேவே களமிறக்கியும் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
13 போட்டிகளில் 12 இன்னிங்ஸ் ஆடிய ரஹானே 242 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் சராசரி வைத்து 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். கடந்த சீசனில் ரஹானே 14 போட்டிகளில் 326 ரன்கள் குவித்தார். இந்த சீசனில் ஏறக்குறைய 100 ரன்கள் குறைவாகச் சேர்த்து ஏமாற்றம் அளித்தார்.
அதேபோல சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மொயின் அலி, 2021-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வந்தவுடன் அருமையான பங்களிப்புச் செய்தார். அதன்பின் ஒவ்வொரு சீசனிலும் அவரது பந்துவீச்சு, பேட்டிங் திறமை மங்கிக்கொண்டே சென்றது.
2021 சீசனில் 15 போட்டிகளில் 357 ரன்கள் குவித்த மொயின் அலி, 2022 சீசனில் 10 போட்டிகளில் 244 ரன்கள் சேர்த்தார், 2023 சீசனில் 15 போட்டிகளில் 124 ரன்களாக மொயின் அலி பங்களிப்பு என படிப்படியாக மொயின் அலியின் பங்களிப்பும் குறைந்தது. 2024 சீசனில் 8 போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 128 ரன்கள் சேர்த்து 25 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இதுபோன்று ஒவ்வொரு சீசனிலும் ஆட்டத்தின் திறன் குறையும் வீரர்கள் ஏலத்தில் மாற்றப்படாமல் தொடர்ந்து வைத்திருப்பது பெரிய விமர்சனமாக வைக்கப்படுகிறது.
மொயின் அலி, ரஹானே இருவரும் அனுபவம் நிறைந்த பேட்டர்களாக இருந்தபோதிலும், இந்த சீசனின் முக்கியமான எந்த ஆட்டத்திலும் அவர்களால் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடிக்கொடுக்க முடியவில்லை.
கெய்க்வாடுக்கு கேப்டன் பதவி 'சுமை' ஆனதா?
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே எனும் அணி 5 முறை சாம்பியன்ஷிப் பெற்ற வலிமையான அணி. அந்த அணிக்குக் கேப்டனாக வளரும் இளம் வீரரை உருவாக்குகிறோம் என்ற பெயரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்ட்டது. இது விளம்பர உத்தியா அல்லது உண்மையில் அதற்கான தகுதிகள் அவருக்கு இருப்பதைக் கண்டறிந்து வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் சிஎஸ்கே அணி வெளியேற்றத்துக்குப்பின் எழும்பியிருக்கின்றன.
ஏனென்றால், அணியில் இருக்கும் பல வீரர்கள் சீனியர் வீரர்கள். ரஹானே, தோனி, மொயின் அலி, ஜடேஜா ஆகியோரை கையாள்வதும், பீல்டிங் அமைப்பதும் ஈகோவாக ஏற்காதவரை பணியின் சுமை தெரியாது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் என்ற இடைவெளி சிஎஸ்கே ஓய்வறையில் இருந்ததாகப் பல்வேறு செய்தியறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஓய்வறையில் கேப்டன்சி குறித்து தன்னிடம் ஆலோசனை கேட்கக்கூடாது என்று தோனி கெய்க்வாட்டிடம் கூறியதாகத் தகவல்களும் வெளிவந்தன.
உதாரணமாக, ஆர்சிபியுடன் கடைசி லீக்கில் கடைசி ஓவரை வீசுவதற்கு முன் யாஷ் தயாலிடம் கோலி, டூப்பிளசிஸ், தினேஷ் கார்த்திக் என கேப்டன் அனுபவம் கொண்ட வீரர்கள் எந்த ஈகோவும் இன்றி ஆலோசனை நடத்தினர். ஆனால், இதே போன்ற சூழல் சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் இருந்ததா என்பது சந்தேகம்தான். கெய்க்கவாட்டுக்கு ஆலோசனை கூறுகிறேன் என்று தோனியே பீல்டிங் செய்வது, ஆலோசனைகள் கூறுவது என 'பேக் சீட் டிரைவராகப்' பல போட்டிகளில் செயல்பட்டார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபின்புதான், தோனி கேப்டன்சி பதவியை மறைமுகமாகச் செய்வதில் இருந்து விலகினார்.
சிஎஸ்கே என்ற பிரமாண்டமான அணி ரசிகர்கள் மனதில் பெரிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியைக் கையாள்வதும், நிர்வகிப்பதும் ஒரு யானையை அடக்குவது போலாகும். இந்தக் கேப்டன்சி பதவியை ருதுராஜ் சிறப்புடன் கையாண்டாரா அல்லது விருப்பத்துடன் ஏற்றுச் செயல்பட்டாரா என்பது குறித்து வரும் காலங்களில்தான் விளக்கம் கிடைக்கும். ஆனால், இளம் வீரர்களான கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ரிஷப் பந்த் ஆகியோர் தனித்துச் செயல்பட்ட அளவுக்கு ருதுராஜால் கேப்டன்சியில் தனித்தன்மையிடன் வெளிப்பட முடியவில்லை, தோனியின் சாயலே பெரும்பகுதி இருந்தது.
அது மட்டுமல்லாம் கேப்டனாக பொறுப்பேற்றாலும் அந்தச் சுமை தெரியாமல் கெய்க்வாட் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 14 இன்னிங்ஸ்களிலும் 583 ரன்கள் சேர்த்து 42 ரன்கள் சராசரி வைத்துள்ளார். நிச்சயமாக கேப்டன் பொறுப்பும் ஏற்று, இதுபோன்று பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிப்பு செய்வது கடினமான பணிதான். ஆனால் அதை கெய்க்வாட் கடைசிவரை சிறப்பாகவே செய்தார்.
சிஎஸ்கே-வின் 'டீம் ஸ்பிரிட்' என்னவானது?
தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் அனைத்து வீரர்களிடமும் கூட்டுழைப்பு, அர்ப்பணிப்பு, உற்சாகம் ஆகியவை இயல்பாகவே இருந்தன என்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு ஓவரையும் பந்துவீச்சாளர்களும் சரி, பேட்டர்களும் சரி ரசித்துச் செய்தனர். ஆனால், தோனி இல்லாத சிஎஸ்கே அணியில் இந்த 'டீம் ஸ்பிரிட்', வீரர்ளுக்கான ஆர்வம் இருந்தது என்றாலும், தோனி கேப்டன்சியில் இருந்த அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.
எந்த இடத்திலும் சிஎஸ்கே சறுக்கினாலும், அதைத் தூக்கி நிறுத்த ஏதாவது ஒரு வீரர் விஸ்வரூமெடுத்து ஆடும் சூழல் தோனி கேப்டன்சியில் இருந்தது. ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே வெற்றி பெற்ற 7 போட்டிகளிலும் கெய்க்வாட்டின் பேட்டிங் பங்களிப்பு மட்டுமே பிரதானமாக இருந்தது.
எப்போதாவது ஒருமுறைதான், ரச்சின் ரவீந்திரா, மிட்ஷெல், ஜடேஜாவின் பங்களிப்பு இருந்தது. ஆனால், அணிக்கான கூட்டுழைப்பு, வீரர்களுக்கான ஸ்பிரிட் இந்த சீசனில் இல்லை. ஆர்சிபி அணியை கடைசி லீக்கில் 218 ரன்கள் வரை அடிக்கவிடும் வகையில் பந்துவீச்சு இருந்தபோதே சிஎஸ்கே டீம் ஸ்பிரிட் குறித்து தெரிந்திருக்கும்.
தோனி இல்லாத சிஎஸ்கே சாத்தியமா?
தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்கள் இன்னும் தயாராகவில்லை. அவர்களுக்கு அந்தத் துணிச்சலும் இல்லை. தோனி, கேப்டன் பொறுப்பேற்காமல் ப்ளேயிங் லெவனில் இருந்தபோதே சிஎஸ்கே அணி லீக் சுற்றோடு வெளியேறுகிறது. அப்படியிருக்கும்போது தோனி ஓய்வு பெற்று சிஎஸ்கே அணியிலிருந்து சென்றால், சிஎஸ்கே என்ற அணியின் நிலையை கற்பனை செய்வது கடினமாக இருக்கிறது.
“தோனிதான் சிஎஸ்கே. தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் ஆதரவு குறையும், சிஎஸ்கே அணியை ரசிகர்கள் இப்போதுள்ள அளவு கொண்டாடமாட்டார்கள்,” என்று முன்னாள் வீரர் சேவாக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தோனியால் மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு சாம்பியன்ஷிப்பை பெற்றுத்தர முடியும் என்ற பிம்பம் ரசிகர்கள் மனதில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பிம்பத்தை ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா கொண்டு நிறுத்தினாலும், அதை உடைக்க முடியாது. அந்தப் பிம்பத்தை உடைக்க தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அதற்கு, புதிய கேப்டனை ரசிகர்கள் ஏற்க வேண்டும்.
போட்டியின் தொடக்கத்தில், இடையே கேப்டன்சி பதவியை உதறும் தோனியின் போக்கு இந்த சீசனிலும் இருந்தது. ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணிக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலியா பயணம் செய்தார். அங்கு ஆஸ்திரேலிய அணியிடம் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தவுடன், 2-வது டெஸ்ட் தொடங்கும் முன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி திடீரென அறிவித்தது இந்திய அணியின் தன்னம்பிக்கையை, மனோபலத்தை குலைத்தது. அதேபோன்ற போக்கை இந்த சீசனில் ஐபிஎல் தொடர் தொடங்கும் சில நாட்களுக்கு முன் சிஎஸ்கேவிலும் புகுத்தினார்.
சிஎஸ்கே-வின் கேப்டன் தோனி என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியது, தோனி தலைமையில் விளையாடப் போகிறோம் என்ற வீரர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கும் முடிவாக அமைந்தது.
கேப்டனாக இருக்கும்போது தோனி பேட்டிங்கில் கடந்த சீசன்களில் சிறப்பாக ஆடியுள்ளார். ஆனால், இந்த சீசனில் தோனிக்குக் கேப்டன் என்ற சுமை இல்லை. அப்படி இருக்கும்போது, தோனி தானாக முன்வந்து நடுவரிசை, முன்வரிசையில் களமிறங்கி கேமியோ ஆடியிருக்கலாம். ஆனால், கடைசி லீக்ஆட்டம் வரை தோனி கடைசி வரிசையில்தான் களமிறங்கினார். 14 போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே தோனி சேர்த்து, 11 ரன்கள் சராசரி வைத்துள்ளார். தோனி நடுவரிசையில், முதல்வரிசையில் களமிறங்கினால் நிச்சயம் சிஎஸ்கே ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை தோனி கடைசி வரை பயன்படுத்தவே இல்லை.
தோனி மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதில் ரசிகர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபிப்பதற்காகவே, தோனி கடைசி வரிசையிலும், அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போதுதான் களமிறங்குவேன் எனச் செயல்பட்டது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.
தான் இருக்கும்போதே, தன்னுடைய இருப்பு இல்லாத சிஎஸ்கேவை தோனி உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான அணியாக வலம் வர முடியும், என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பலவீனமான பந்துவீச்சு
சிஎஸ்கே அணியில் இருக்கும் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், பதீராணா, தேஷ்பாண்டே ஆகியோருக்குச் சர்வதேச அனுபவங்கள் பெரிதாக இல்லை. இவர்கள் சர்வதேச தளத்துக்குச் செல்லும்போது அவர்களது பலவீனம் வெளிப்பட்டுவிடும் என்பது கடந்த காலங்களில் தெரியவந்துள்ளது. அந்த உண்மை தெரிந்தும், இன்னும் இவர்களை சிஎஸ்கே நிர்வாகம் தாங்கி நிற்பது வியப்பாக இருக்கிறது.
குறிப்பாகப் பதீரணாவின் பந்துவீச்சு கடந்த சீசனில் பெரிதாக சிஎஸ்கே அணியால் பேசப்பட்டது. ஆனால் உலகக் கோப்பைத் தொடரில் பதீரணா பந்துவீச்சால்தான் இலங்கை பெரிய தோல்விகளைச் சந்தித்தது என்ற விமர்சனங்களும் எழுந்தன. அப்படியிருக்கும் போது பந்துவீச்சாளர்களை ஏலத்தில் ஏன் சிஎஸ்கே நிர்வாகம் மாற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தொடர்ந்து ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் அணியில் நீடிக்கும்போது, எதிரணியின் பேட்டர்களுக்கு வியூகங்களை வகுப்பது எளிதாகிவிடும், சிஎஸ்கே அணியின் தோல்வியும் எளிதாக அமைந்துவிடும். இது தெரிந்தே 4 பந்துவீச்சாளர்களையும் தொடர்ந்து தக்கவைத்துள்ளனர். இதில் பதீராணா 13 விக்கெட்டுகள், தேஷ் பாண்டே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷர்துல், தீபக் சஹர் இருவரும் 9 போட்டிகளில் பங்கேற்றும் 5 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளனர்.
சிஎஸ்கே அணியில் அனுபவம் நிறைந்த பந்துவீச்சாளராக இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டும்தான். சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த சிறந்த முடிவு முஸ்தபிசுர் ரஹ்மானை வாங்கியது மட்டும்தான். அவரும் தன்னுடைய அணிக்கான பணிக்கு செல்லும்வரை சிறப்பான பங்களிப்பை சிஎஸ்கே அளித்து 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதீராணா, முஸ்தபிசுர் இருவரும் சிஎஸ்கே அணியிலிருந்து பாதியில் சென்றபோதே, சிஎஸ்கே பந்துவீச்சு பலம் பாதியாகக் குறைந்தது.
சுழற்பந்துவீச்சுக்கு சான்ட்னர், ஜடேஜா, தீக்சனா, மொயின் அலி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இருந்தனர். ஆனால், இந்த சீசன் முழுவதும் சுழற்பந்துவீச்சாளர்களை கெய்க்வாட் பயன்படுத்திய வீதம் வேகப்பந்துவீச்சோடு ஒப்பிடுகையில் குறைவுதான். தோனி கேப்டன்சியில் சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தத் தனி உத்தியே வைத்திருப்பார். ஜடேஜா, தீக்சனா, சான்ட்னர், மொயின் அலி ஆகியோரை தோனி சிறப்பாகக் கையாண்டு, தேவைப்படும் நேர்த்தில் விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வீணடிக்கப்பட்டுவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஒட்டுமொத்தத்தில், சிஎஸ்கே ப்ளே ஆஃப் லீக்கோடு வெளியேறியிருக்கும் இந்நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்களும், வீரர்களும் மனதளவில் இன்னும் தயாராகவில்லை எனும் உணர்வே மேலெழுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)