You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகின் பெரு நகரங்களில் சுற்றித் திரியும் இந்தப் 'புதிய துப்புரவாளர்கள்' யார் தெரியுமா?
- எழுதியவர், ஃபிபிசி ப்யூச்சர் பிளானட் குழு
- பதவி, பிபிசி செய்திகள்
இயற்கை உலகில் வியக்கத்தக்க வகையில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் உயிரினங்களான அன்றில் பறவை முதல் கழுதைப்புலிகள் வரை நகர்ப்புற வாழ்க்கையை நோக்கி இழுக்கப்படுகின்றன. அந்த உயிரினங்கள் எப்படி உலகெங்கிலும் உள்ள நகரங்களில் செழித்து வாழ்கின்றன என்பதை இங்கு காண்போம்.
தென்னாப்பிரிக்க நகரமான கேப் டவுன் புறநகரில் அமைந்துள்ள கேப் பாயிண்ட் நேச்சர் ரிசர்வ் எனும் சரணாலயத்திற்கு செல்லும் சாலையில், ஒவ்வொரு நாளும் மக்கள் தங்கள் கார்களை தாக்கும் ஒரு கும்பலிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கடும் துர்நாற்றத்திற்கு பெயர்போன அவை, சில சமயங்களில் வாகனங்களை உடைப்பதற்காகவும் அறியப்படுகின்றன. அவை பபூன் குரங்கினத்தைச் சேர்ந்தவை. அவை வியக்கத்தக்க வைராக்கியத்துடன் மக்கள் மத்தியில் வாழத் தொடங்கியுள்ளன. இந்த விலங்குகள் உணவைத் தேடி நகரத்திற்குள் சென்று குப்பைத் தொட்டிகளையும் வீடுகளையும் ஆக்கிரமிக்கக் கற்றுக்கொண்டன. அவை நல்ல செழிப்பாக மாறிவிட்டன. இப்போது இந்த விலங்குகளால் நேரும் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க 24 மணிநேர உதவி எண்ணும் செயல்படுகிறது. மேலும், அவற்றின் நலன்கள் தொடர்பான கவலைகளையும் மக்கள் தெரிவிக்கலாம்.
மனிதர்களின் பரந்த வாழ்விடத்திற்கு ஈர்க்கப்பட்ட ஒரே விலங்கினம் பபூன்கள் மட்டுமல்ல. அப்படிப்பட்ட சில விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து இங்கே காண்போம்.
அரிவாள் மூக்கன் பறவைகள்
குண்டான வெள்ளை உடல்கள், நீண்ட குறுகிய கழுத்து, சன்னமான கால்கள் கொண்ட, ஆஸ்திரேலிய அரிவாள் மூக்கன் (வெள்ளை ஐபிஸ்) பறவைகள், சில சமயம், அழகானவை, நேர்த்தியானவை என்று விவரிக்கப்படுகின்றன. இந்த பறவைகள் இயற்கையான ஈரநில வாழ்விடத்தில் வசிக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் நகரங்களில், விஷயமே வேறு. 'பின் கோழி' (bin chicken) அல்லது `டிப் வான்கோழி` (tip turkey), என்று வெறுப்பாக அழைக்கப்படும் இந்தப் பறவை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சுற்றித் திரிவதையோ, குப்பைகளை நோண்டுவதையோ அடிக்கடி காணலாம்.
ஆனால் நகரங்களில் இந்தப் பறவைகள் தேசிய பொக்கிஷங்களாகப் பார்க்கப்படுவதைவிட ஊடுருவலாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், இவை மற்ற இடங்களில் உள்ள ஐபிஸ் பறவைகளின் எண்ணிக்கையைச் சீர் செய்ய உதவும் மரபணுக் கிடங்குகளாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நரிகள்
ஒவ்வொரு இரவும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள நகரங்களில் அந்தி சாயும் போது, சிவப்பு நரிகள் தங்களுடைய மறைவிடங்களில் இருந்து வெளிப்பட்டு தெருக்களில் பதுங்கியிருக்கத் தொடங்குகின்றன. சில நேரங்களில் அவை நம்பிக்கையுடன் மனிதர்களுடன் தடையின்றி கலக்கின்றன. எப்போதாவது ஒருவர் குப்பைத் தொட்டியை பார்க்கும்போது, அதில் நரிகளின் பஞ்சுபோன்ற வாலை பார்க்க முடியும். பெர்ரி மற்றும் பூச்சிகள் போன்ற காட்டு உணவுகளைத் தேடி வரும் இந்த சர்வ-உண்ணிகள், கூடுதலாக புதிதாக பிடிபட்ட புறாக்கள் மற்றும் குப்பைகளையும் தீவனமாக கொள்கின்றன.
வினோதமான வௌவால் காதுகள் கொண்ட பாலைவன நரிகள் முதல் கவர்ச்சிகரமான திபெத்திய மணல் நரி வரை குறைந்தது பத்து வகையான நரிகள் இந்த பூமியில் பரவி வாழ்கின்றன. அவை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே வாழ்ந்து வருகின்றன. 1991 ஆம் ஆண்டில், அர்ஜென்டினாவில் ஒரு நபரின் பண்டைய எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர், இது ஒரு செல்லப் பிராணியுடையதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இன்று, நகர்ப்புறங்களில் நரிகள் செழித்து வளர்கின்றன, லண்டனில் மட்டும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 18 (சதுர மைலுக்கு 45) நரிகள் உள்ளன. அவை அமெரிக்காவில் உள்ள நகரங்களிலும், குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
கொயோட் (ஓநாய் வகை)
சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்க நகரங்களில் கொயோட் எனப்படும் ஓநாய் வகைகள் எங்கும் காணப்படுகின்றன. இவை சந்தர்ப்பவாத துப்புரவு உயிரினங்கள். இவை எலிகள், முயல்கள், தவளைகள், பல்லிகள் முதல் குப்பைத் தொட்டிகளில் இருந்து எடுக்கப்படும் உணவுக் கழிவுகள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்தையும் உண்ணும்.
2022-ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் இவ்வகை ஓநாய்களின் உணவு குறித்த பகுப்பாய்வில், அவை பெரிய பாலூட்டிகளான மான் மற்றும் ரக்கூன்கள் போன்றவற்றையும் கோழி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்ற மனித உணவுகளையும் உட்கொண்டதாக கண்டறியப்பட்டது. அவற்றின் நெகிழ்வான உணவுமுறை, நகர்ப்புற வாழ்வில் அவற்றை திறமையானதாக ஆக்குகின்றன.
ஆனால், அவை துரித உணவுகளை உட்கொள்வது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், இவ்வகை நகர்ப்புற ஓநாய்கள் ஆரோக்கியமற்ற நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளன. இந்த நுண்ணுயிரிகள் அதன் முரட்டுத்தனமான நடத்தையுடன் தொடர்புடையதாகும்.
கடல் பறவைகள்
'சீ கல்' (seagull) இவ்வகை கடல் பறவைகள் கடலோர நகரங்களில், இரக்கமற்ற சந்தர்ப்பவாதிகளாக, பார்பிக்யூக்கள் மற்றும் உணவு தின்பண்டங்கள் ஆகியவற்றுக்காக நகரங்களை ஆக்கிரமிப்பதாக உணரலாம். உண்மையில், நாம் தான் பறவைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து வருகிறோம். மீன் வளம் குறைந்து வருதல் மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விட இழப்பு ஆகியவற்றின் காரணமாக, நகரங்கள் மற்றும் குப்பைக்கிடங்குகள் உட்பட வேறு இடங்களுக்கு அவை வருவதாக கருதப்படுகிறது.
"காலப்போக்கில் அவை மிகவும் திறமையான நடத்தைகளை வளர்த்துக்கொள்ளும், அதாவது குப்பைத் தொட்டிகளிலிருந்தோ அல்லது மனிதர்களிடமிருந்து நேரடியாக உணவை பெற இந்த நடத்தைகள் அவற்றுக்கு உதவும்," என பிரிட்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பால் கிரஹாம் பிபிசியிடம் தெரிவித்தார். "அவற்றுடன் இணைந்து எப்படி வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் அவர்.
அடுத்த முறை உங்களின் உணவை ஒரு கொறித்துண்ணி பறவை பறிக்கும் போது, முதலில் நாம் அவற்றின் மீன்களை பறித்தோமா என்று சிந்தித்துப் பாருங்கள்.
காட்டுப்பன்றி
இயல்பிலேயே தனிமையாக இருந்தாலும், புறநகர் வாழ்க்கையின் மோகம் காட்டுப் பன்றிகளை நகரின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஹாங்காங்கின் மலைகள் முதல் மத்தியதரைக் கடல் மார்பெல்லா கடற்கரைகள் வரை, ஒரு காலத்தில் வன விலங்குகளாக இருந்த இவை, தற்போது நகர்ப்புறங்களின் குப்பைகூளங்களில் உள்ளன. பெர்லினில், அவை ஆழமற்ற குளங்களில் தூங்குகின்றன. ஸ்பெயினில் கொலம்பிய பாப் நட்சத்திரம் ஷகிராவின் பையை ஒரு ஜோடி காட்டுப்பன்றிகள் பறித்துச் சென்றன.
அமெரிக்காவில், பன்றிகள் பூர்வீக விலங்கல்ல, அவை ஆக்கிரமிப்பு உயிரினமாக கருதப்படுகின்றன. அமெரிக்காவில் அதன் எண்ணிக்கை சுமார் 60 லட்சமாகக் கணக்கிடப்பட்டு அதிகரித்து வரும் நிலையில், குறைந்தது 35 மாகாணங்கள் இப்போது காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை குறித்து பதிவு செய்கின்றன. இதன் விளைவாக, வேர்க்கடலை மற்றும் சோளம் போன்ற அமெரிக்க பயிர்களுக்கு ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் சேதம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவை ஆக்கிரமிப்பு உயிரினம் என்பதால், அவற்றின் தாக்கங்கள் அனைத்தும் மோசமானவை என்று அர்த்தமல்ல. அவற்றின் மூக்குகள் மற்றும் குளம்புகள் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படுத்தும் நன்மைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கழுதைப் புலிகள்
கழுதைப் புலிகள் விலங்கினத்தின் 'வில்லன்'களாகப் பார்க்கப்படுகின்றன.
ஆனால் இந்த துப்புரவு விலங்குகள் மோசமானவை அல்ல.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் 2021 ஆய்வின்படி, கழுதைப் புலிகள் வசிக்கும் ஆப்பிரிக்க நகரங்களில் குறிப்பிடத்தக்க உடல்நலம் மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குகின்றன. வடக்கு எத்தியோப்பியாவில், கழுதைப் புலிகள் ஆண்டுதோறும் 207 டன் விலங்குகளின் சடலக் கழிவுகளை அகற்றுகின்றன. இது மக்களிடையே ஐந்து வகையான ஆந்த்ராக்ஸ் மற்றும் காசநோய், மற்றும் கால்வடைகளிடையே 140 வகையான நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
கிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹரார் நகரில், நகரின் சுவர்களுக்குள் கூட கழுதைப் புலிகள் துணிகரமாகச் செல்கின்றன. அங்கு நகரின் கசாப்புக் கடைக்காரர்கள் விட்டுச்செல்லும் குப்பைகள் மற்றும் மாமிசக் கழிவுகளை உண்கின்றன. இந்நகரின் 13-ஆம் நூற்றாண்டின் சுவர்களில் சிறிய திறப்புகள் உள்ளன. இவை `கழுதைப் புலி வாயில்கள்` என அழைக்கப்படுகின்றன. இவை இவ்விலங்குகள் சுதந்திரமாக உள்ளே செல்ல அனுமதிக்கின்றன.
யானைகள்
வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கோட்வார் நகரின் புறநகரில் உள்ள குப்பைக் குவியல்களை ஆசிய யானைகள் கிளறுவதைக் காணலாம். தங்கள் மூக்கால் கழிவுகளை ஆய்வு செய்து, எப்போதாவது கிடைக்கும் சுவையான உணவுத் துண்டுகளை விழுங்குகின்றன. ஆனால் இவை எலிகளோ காட்டு நாய்களோ அல்ல. பூமியின் மிகப்பெரிய நில விலங்குகளில் ஒன்று.
வேகமாக வளர்ந்து வரும் கோட்வார் நகரில் 45,000 மக்கள் வாழ்கின்றனர். இது யானைகள் பொதுவாகக் காணப்படும் வனவாழ்விடங்களின் விளிம்பில் அமைந்திருக்கிறது.
மனித வாழ்விடங்கள் காடுகளுக்கு அருகாமையில் வளர்ந்ததால், யானைகளுக்கு சில புதுமையான மற்றும் ஆச்சரியமான உணவு ஆதாரங்களைக் கண்டடைந்திருக்கின்றன. உத்தரகாண்ட் காடுகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படும் யானைகளின் சாணத்தை ஆய்வு செய்ததில், அவை மனித குப்பைக் கிடங்குகளில் உணவருந்தியதற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன.
கோட்வார் அருகே வாழும் யானைகள் குறிப்பாக இந்த குப்பை தொட்டி வாழ்க்கை முறையை பின்பற்றுவதாகத் கொண்டதாகத் தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக, கோட்வாரைச் சுற்றியுள்ள அனைத்து யானை சாணத்தின் மாதிரிகளிலும் பிளாஸ்டிக் பைகள், உணவுப் பாத்திரங்கள் மற்றும் எஞ்சிய உணவைத் தேடும் போது அவை சாப்பிட்ட டிஸ்போஸபிள் கரண்டிகள் கூட இருந்தன என்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உள்ள ஆசிய யானைகளுக்கும் குப்பைக் கிடங்குகள் விலங்குகளுக்கு எளிதான உணவு ஆதாரமாக உள்ளன. குப்பை கிடங்குகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு யானைகள் இறப்பது குறித்தும் செய்திகள் வந்துள்ளன.
காட்டு யானைகள் பொதுவாகக் காணப்படும் பகுதிகளில் மனித நகர்ப்புற மக்கள் தொகை பெருகும்போது, மனித-யானை மோதல் ஆபத்து அதிகரிக்கும் என்ற கவலையும் உள்ளது. மனித-யானை மோதல்கள் பெரும்பாலும் இரு தரப்பினருக்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
பாறு கழுகுகள்
பழங்காலத்திலிருந்தே, பாறு கழுகுகள் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும், மரணத்தின் தூதுவர்களாகவும். ஆனால் இறந்த விலங்குகளின் சடலங்களை மட்டுமே உண்ணும் இந்தத் துப்புரவுப் பறவைகள், நோய்க்கிருமிகள் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, சுற்றுச்சூழலில் அசுத்தங்கள் வெளியேறுகின்றன.
தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பாறு கழுகுகள் ஆபத்தான விகிதத்தில் மறைந்து வருகின்றன. 1990-கள் மற்றும் 2000-களில் டிக்ளோஃபெனாக் என்ற கால்நடை வலிநிவாரணி பரவலாகப் பயன்படுத்தியதால் இந்தியாவின் மூன்று பொதுவான கழுகு இனங்களின் எண்ணிக்கையில் 99% சரிந்தது. இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதால் இது தற்போது இது சற்று சரியாகியிருக்கிறது.
ஆப்பிரிக்காவில், பல பாறு கழுகுகள் மத நம்பிக்கைகள் காரணமாக கொல்லப்படுகின்றன. அவற்றின் தலைகள் அதிர்ஷ்டம் தரும் பொருட்களாக விற்கப்படுகின்றன, பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.
கரடிகள்
அமெரிக்காவில், நீங்கள் ஒரு கரடியால் கொல்லப்படுவதை விட ஒரு தேனீயால் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் கரடிகள் மனிதப் பகுதிகளில் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அல்லது, நாம் அவற்றின் இடத்தில் ஊடுருவுகிறோமா?
கிரிஸ்லி கரடிகள் மேற்கு அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வசித்து வந்தன. கருப்பு கரடிகள் அமெரிக்கா முழுவதும் வனப்பகுதிகளில் இருந்தன. இன்று, 2,000 கிரிஸ்லி கரடிகள் அவற்றின் முந்தைய பரப்பில் 6% மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. அதே நேரத்தில் 3,00,000 கருப்பு கரடிகள் அவற்றின் 50%-இல் மட்டுமே வாழ்கின்றன. அபைகள் மிகவும் புத்திசாலியான, துறுதுறுப்பான உயிரினங்கள். மேலும் அவற்றில் அதீத மோப்ப சக்தி மற்றும் அதீதப் பசியால் அவை உணவு தேடி வெகுதூரம் செல்கின்றன.
மனித உணவு, குப்பைகள், நாய் உணவு, அல்லது பழ மரங்கள் எளிதில் கிடைக்கும்போது பெரும்பாலான மனித-கரடி மோதல்கள் நிகழ்கின்றன. கரடிகள் உணவைத் திருடுவதற்காக வீடுகளுக்குள் நுழைகின்றன.
கரடிகளை வேட்டையாடுவதற்குச் அமெரிக்காவின் சில மாநிலங்களில் அனுமதி இருந்தாலும், கரடிகளுடன் எப்படி அமைதியாக வாழ்வது என்பதை அரசாங்க வனவிலங்கு அமைப்புகள் பொதுமக்களுக்குக் கற்பித்து வருகின்றன.
குளவிகள்
குளவிகள், ஜாம் சாண்ட்விச்கள், பழங்கள் மற்றும் பிற உணவுகளை உண்பதற்காக, பிக்னிக்குகளில் ஊடுருவுபவை என்ற பெயரைப் பெற்றுள்ளன. ஆனால் காடுகளில் அவை அழுகும் பழங்களை எவ்வளவு மகிழ்ச்சியுடன் உண்கின்றனவோ அதே அளவு இறந்த விலங்குகளையும் உண்ணும்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற ஐரோப்பியக் குளவிகள் சமீபத்தில் நுழைந்த பகுதிகளில் விஞ்ஞானிகள் இறந்த விலங்குகளை உண்ணும் மற்ற இனங்கள் மீது இவற்றின் வியத்தகு தாக்கத்தை அவதானித்திருக்கின்றனர். 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குளவிகள் புதிய சடலங்களை உண்பதற்காக விரைவாக வந்ததையும், ஈக்கள் முட்டையிட முடியாத அளவிற்கு போட்டியிடும் பூச்சிகளை ஆக்ரோஷமாக தாக்குவதையும் காட்டியது.
குளவிகள் மரபியல் மட்டத்தில் நகர வாழ்க்கைக்கு ஏற்றதாக உள்ளன என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஒரு சமீபத்திய ஆய்வின்படி, உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரிக்கும் போது தாவரங்கள் குறைந்த வெப்பமான நகர்ப்புறப் பகுதிகளில் சிறிய குளவிகள் உள்ளன. இது ஒரு பரிணாம நன்மையை வழங்கக்கூடும், ஏனெனில் அவற்றின் இலகுவான உடல்கள் காற்றில் மிதக்க குறைந்த ஆற்றலையே பயன்படுத்த வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)