You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியாண்டர்தால்: 75,000 ஆண்டுகள் முந்தைய பெண்ணின் முகத்தை வரைய உதவிய மண்டை ஓடு
- எழுதியவர், ஜோனாதன் அமோஸ், ரெபேக்கா மோரேல் மற்றும் ஏலிசன் பிரான்சிஸ்
- பதவி, பிபிசி அறிவியல் செய்திகள்
நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க வகையில் உருவகப்படுத்தி உள்ளனர். இது மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன. அவை "நன்கு குழம்பிய பிஸ்கட்" எப்படி இருக்குமோ அந்த நிலைத்தன்மையைக் கொண்டிருந்தன.
ஆராய்ச்சியாளர்கள் அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்த வேண்டியிருந்தது. அதன் பின்னர், வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள் (paleo artists) நியாண்டர்தால் பெண்ணின் 3D மாதிரியை உருவாக்கினர்.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில், பிபிசி ஸ்டுடியோஸ் உருவாக்கிய புதிய ஆவணப்படத்தில் இந்த உருவ அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
"நியாண்டர்தால்களின் ரகசியங்கள்” (Secrets of the Neanderthals) என்னும் இந்த ஆவணப்படத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன நமது மனித இனத்தின் பரிணாம உறவுகளைப் பற்றி இதுவரை கண்டறிந்த உண்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன. நியாண்டர்தால் பெண்ணின் முகத்தைச் சித்தரித்த சிற்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பழங்கால மானுடவியல் நிபுணரான டாக்டர் எம்மா பொமரோய் பிபிசியிடம் கூறுகையில், "நியாண்டர்தால் இனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் பெண்ணின் முகம் எங்களுக்கு உதவும் என்று நான் நினைக்கிறேன்."
"பழங்கால மனிதனின் எச்சங்களுடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமானது. இது பெரிய பாக்கியமும்கூட, குறிப்பாக இந்தப் பெண் எங்களின் ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமானவர்," என்று கூறினார்.
இராக் குர்திஸ்தானில் உள்ள ஷானிதர் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு புதைபடிவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த 3D மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் 1950களில் குறைந்தது 10 நியாண்டர்தால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இப்பகுதியை வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டில் குர்திஷ் அதிகாரிகள் பிரிட்டிஷ் ஆய்வுக் குழுவை மீண்டும் அழைத்தனர், இம்முறை அவர்கள் ஒரு எலும்புக் கூட்டை கண்டுப்பிடித்தனர். அதை `ஷானிடார் Z’ என்று அழைத்தனர். இந்த எலும்புக்கூடு ஒரு நபரின் முதுகுத்தண்டு, தோள்பட்டை, கைகள் உட்பட மேல் உடல் பாகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது.
மண்டை ஓட்டின் பெரும்பாலான எச்சங்கள் இருந்தன. ஆனால் 2 செமீ (0.7 அங்குலம்) தடிமன் அளவுக்கு நொறுங்கி இருந்தது. ஒருவேளை, ஏதோவொரு கட்டத்தில் குகையின் மேற்கூரையில் இருந்து விழுந்த ஒரு பாறையால் அது நொறுங்கி இருக்கலாம்.
ஷானிதரில் அகழ்வாராய்ச்சிக்குத் தலைமை தாங்கும் கேம்பிரிட்ஜின் பேராசிரியர் கிரேம் பார்கர் கூறுகையில், "அந்த மண்டை ஓடு பீட்சாவை போல தட்டையாக இருந்தது. அது கண்டுபிடித்ததில் இருந்து தற்போது 3D மாதிரி உருவாக்கப்பட்ட வரை ஒரு குறிப்பிடத்தக்க பயணமாக இருந்தது.”
"ஒரு தொல்பொருள் ஆய்வாளராக, நீங்கள் செய்வது சில நேரங்களில் உங்களைக் கோபப்படுத்தும். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் கடந்த காலத்தை புதைபடிவங்கள் வாயிலாகத் தொடுவதன் மூலம் உங்கள் வயது குறையும் உணர்வைப் பெறுவீர்கள். அது எவ்வளவு அசாதாரணமான விஷயம் என்பதை நாம் மறந்து விடுகிறோம்," என்றார்.
உள்ளூர் பழங்கால ஆராய்ச்சித் துறையின் அனுமதியுடன், மண்டை ஓட்டின் நொறுங்கிய எச்சங்கள், பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றைப் பிரித்தெடுத்து, உறுதியாக்கி, பின்னர் மீண்டும் ஒன்றாக இணைத்து உருவத்தைப் பெறும் கடினமான செயல்முறை தொடங்கப்பட்டது.
இந்தச் சிக்கலான புதிரைச் செய்து முடிக்க அந்த தொல்பொருள் பாதுகாவலருக்கு ஓராண்டுக்கும் மேல் ஆனது. மறு உருவாக்கம் செய்யப்பட்ட மண்டை ஓட்டின் மேற்பரப்பில் ஸ்கேன் செய்யப்பட்டது மற்றும் டச்சு கலைஞர்களான அட்ரி, அல்ஃபோன்ஸ் கென்னிஸ் ஆகியோருக்கு அதன் 3D பிரின்ட் வழங்கப்பட்டது.
அவர்கள் பண்டைய மக்களின் எலும்பு மற்றும் புதைபடிவ எச்சங்களில் இருந்து உடற்கூறியல் ரீதியாகத் துல்லியமான மாதிரியை உருவாக்குவதில் திறமை வாய்ந்தவர்கள்.
சிற்ப மாதிரி உருவாக்கப் பணிகள் சிக்கலானது என்ற போதிலும், உருவாக்கப்பட்ட பின்னர், அந்தப் பெண்ணின் சிந்திக்கும் தோரணை , பண்டைய எலும்புக்கூட்டின் உண்மையான மதிப்பை பிரதிபலிக்கிறது.
நியாண்டர்தால் 3D மாதிரியை உருவாக்கிய குழு இது கண்டிப்பாக 'பெண்’ தான் என்றனர். பாலினத்தை உறுதி செய்ய இடுப்பு எலும்புகள் பெரிதும் உதவும். ஆனால் ஆய்வில் அவை மீட்கப்படவில்லை.
புதைபடிவ மண்டை ஓட்டில் இருந்த பற்களின் பற்சிப்பியை ஆய்வு செய்தபோது, அதில் அதிக புரதங்கள் இருப்பது தெரிய வந்தது. இது பெண் மரபியலுடன் ஒத்துப் போகும் தன்மை என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்,
மேலும், எலும்புக்கூட்டின் உயரம் குறைவாக இருப்பதும் இந்த எச்சங்கள் பெண்ணுடையது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்ய உதவியது.
அந்தப் பெண்ணின் வயது என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, "அவர் 40களின் நடுப்பகுதியில் இறந்திருப்பார், ஏனெனில் பற்கள் கிட்டத்தட்ட வேர்கள் வரை தேய்ந்து கிடக்கிறது,” என்கின்றனர் ஆய்வாளர்கள்.
"பற்கள் தேய்ந்து போயிருப்பதால், அந்தப் பெண்ணால் கண்டிப்பாக உணவை மென்றிருக்க முடியாது. அந்தப் பெண்ணின் மோசமான பல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வேறு சில அறிகுறிகளும் எங்களுக்கு தென்பட்டன. நோய்த்தொற்றுகள், பல் ஈறு பாதிப்பு உள்ளிட்டவற்றால் அவர் இயற்கையாகவே நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம்," என்று டாக்டர் பொமராய் விளக்கினார்.
நீண்ட காலமாக, விஞ்ஞானிகள் நியண்டர்தால்களை மிருகத்தனம் மிக்கவர்கள் என்றும் நமது இனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்களாகவும் கருதினர்.
ஆனால் இந்த நம்பிக்கை, ஷானிதரில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவ எச்சங்கள் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளது.
நியாண்டர்தால் மக்கள் இறந்த உடலை அடக்கம் செய்ய சில வழிமுறைகளைப் பின்பற்றி இருப்பது இந்தக் குகையில் காண முடிகிறது. உயரமான பாறை தூணுக்கு அடுத்துள்ள பள்ளத்தாக்கில் உடல்கள் கவனமாகப் புதைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த அனைத்து உடல்களுமே ஒரே மாதிரியாகப் புதைக்கப்பட்டிருந்தன.
ஒரு புதைபடிவ எலும்புக் கூட்டின் மீது முழுவதுமாக பூக்களின் மகரந்தம் காணப்பட்டது. எனவே நியாண்டர்தால்கள் பூக்கள் தூவி புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது. இது மதம், ஆன்மீகம் உள்ளிட்டவை இருந்ததற்கான குறியீடு என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், பூக்களின் மகரந்தம், தேனீக்கள் அல்லது செடிகளில் இருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ் ஹன்ட் கூறுகையில், "உடல்களின் மீது மரக் கிளைகள் வைக்கப்பட்டிருந்ததால் கழுதைப்புலிகள் அவற்றை அண்டாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
மேலும் இங்கு அந்த உடல்கள் `அடக்கம்' செய்யப்பட்டவை என்ற வார்த்தையைப் பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. எந்த மதத்தையும் சாராமல் சிந்திக்க வேண்டும் எனில், இந்த உடல்கள் பாதுகாப்பாக `வைக்கப்பட்டுள்ளன’ (placement) என்பதே உண்மை. ஆனால் அவர்கள் ஒரு மரபைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை," என்றார்.
"நியாண்டர்தால்களின் ரகசியங்கள்’’ (Secrets of the Neanderthals) ஆவணப்படம் வியாழன் அன்று உலக அளவில் நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடப்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)