You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விருதுநகர் கல்குவாரி: குடோனில் திடீரென வெடிமருந்துகள் வெடித்தது எப்படி? பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே டி.கடம்பன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை வைப்பதற்காக குடோன் உள்ளது.
இங்கு நேற்று காலை, வெடி மருந்துகளை இறக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் அருகிலிருந்த வீடுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
வெடி விபத்து நடந்த கல் குவாரியால், கிராம மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? கல் குவாரியில் உள்ள வெடிமருந்து குடோனில் வெடிவிபத்து நடந்தது எப்படி?
வெடித்துச் சிதறிய மருந்து குடோன்
மதுரையிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் டி. கடம்பன்குளம். இது விருதுநகர் மாவட்டத்தின் எல்லையான ஆவியூரின் அருகில் உள்ளது. இங்கு பல கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
டி.கடம்பன்குளம் கிராமத்தில், சேது என்பவருக்குச் சொந்தமான ஆர்.எஸ்.ஆர் புளு மெட்டல்ஸ் (RSR Blue Metal) என்ற கல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இங்கு கல் குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிமருந்தை வைப்பதற்கு குடோன் ஒன்றும் இருக்கிறது. குவாரி மற்றும் வெடி மருந்து குடோன் ஆகியவற்றில் மொத்தமாக 30 பேர் வரை இங்கு வேலை செய்து வருகின்றனர்.
இந்த வெடி மருந்து குடோன், அங்குள்ள கல் குவாரி மட்டுமின்றி அருகில் செயல்படும் பல கல் குவாரிகளுக்குத் தேவையான வெடி மருந்துகளை அனுப்பி வைக்கும் மையமாக இருந்து வருகிறது. இந்த வெடி மருந்து குடோனில் மருந்துகளை ஏற்றி, இறக்கும் பணிகளின்போது 4 சரக்கு வாகனங்கள், 8 பணியாளர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் மூன்று தொழிலாளர்கள் மட்டும் வெடி மருந்து இறக்கி வைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். நேற்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல வெடிமருந்துகளை குடோனுக்குள் இறக்கி வைக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அந்த வெடிமருந்து குடோன் வெடித்துச் சிதறியது.
இதனால் எழுந்த கரும்புகை சுமார் 100 அடி உயரத்திற்கு எழுந்தது. இந்த விபத்தால் பணியிலிருந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி(49), சிவகிரியைச் சேர்ந்த குமாரசாமி(55) மற்றும் கடையநல்லூரைச் சேர்ந்த பெரியதுரை(27) ஆகிய மூன்று பேரும் உடல் சிதறி பலியாகினர்.
‘ஏழு கி.மீ. தொலைவுக்கு கேட்ட வெடிச் சத்தம்’
விபத்துக்குப் பிறகு வெடிச்சத்தம் கேட்டு உடனடியாக அருகிலிருந்த பொது மக்கள் அங்கு கூடினர். இந்த விபத்து குறித்து உயிரிழந்த கந்தசாமியின் சகோதரர் பூமிராஜ் பிபிசி தமிழிடம் பேசினார்.
“நானும் இந்த கல்குவாரியில்தான் வேலை செய்கிறேன். ஆனால், விபத்து எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. எனது அண்ணன் கந்தசாமி வெடி பொருட்களை எடுத்துச் செல்லும் பணிகளைச் செய்து வந்தார். எனக்கு மே 1ஆம் தேதியன்று விடுமுறை என்பதால் எனது ஊரில் இருந்தேன்.
காலை 8:30 அளவில் பயங்கர சத்தம் கேட்டது. நேரில் வந்து பார்த்தபோது மொத்த கட்டடமும் ஒரு வாகனமும் முற்றிலும் சேதமடைந்து இருந்தது. இந்த விபத்தில் எனது அண்ணனும் சிக்கி இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது,” எனக் கூறினார்.
வெடி மருந்து குடோன் இருந்த இடத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் கந்தசாமியின் ஊர் அமைந்துள்ளது. அந்த வெடிச் சத்தம் தன்னைப் போலவே பலருக்கும் கேட்டதாகக் கூறுகிறார் அவர்.
ஆள் பற்றாக்குறை இருப்பதாக வேலைக்குச் சென்ற தனது கணவர் கந்தசாமியை வெடி விபத்தில் பறிகொடுத்த மாரியம்மாள், விபத்து நடந்த இடத்தில் அழுது கொண்டிருந்தார். தன்னுடைய 3 குழந்தைகளை இனிமேல் எப்படி பார்த்துக் கொள்வது என்று அவர் கவலை தெரிவித்தார்.
“எனது கணவர் வெடிமருந்து குடோனில் கடந்த ஏழு ஆண்டுகளாக மருந்துகளை ஏற்றிச் சென்று பல்வேறு குடோன்களுக்கு கொடுக்கும் பணியைச் செய்து வந்தார்.
விபத்து நடந்த அன்று விடுமுறையில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறி அவரை அழைத்தனர், நானும் போக வேண்டாம் எனக் கூறினேன்," என அன்று நடந்ததை விவரித்விவரித்த மாரியம்மாள், இன்னும் தனது கணவரின் உடலைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
ஆறு மணிநேரம் கழித்து மீட்கப்பட்ட உடல்
கல் குவாரியின் மருந்து குடோனில் காலை 8.30 மணியளவில் வெடிவிபத்து நடந்தது. ஆனால் சிதறிய உடல்களின் பாகங்கள் மதியம் 3 மணிக்குப் பிறகே ஊழியர்களால் மீட்கப்பட்டன. வெடிவிபத்து நடைபெற்ற இடத்திலிருந்து பல்வேறு இடங்களில் உடலின் பாகங்கள் பல பகுதிகளாகச் சிதறிக் கிடந்தன.
மேலும் அங்கு நின்றிருந்த மற்றொரு வாகனத்தில் வெடிக்காமல் இருந்த மீதி வெடி மருந்துகள் இருந்தன. இதனால் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வெடி விபத்து நடைபெற்ற இடத்திற்குச் செல்லாமல் 100 மீட்டர் தூரத்திலேயே காத்திருந்தனர்.
மதுரையிலிருந்து வெடிபொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, உடல்களை மீட்கும்போது வெடிமருந்து வெடிக்குமா, இல்லையா என ஆய்வு செய்து, வெடிக்காது என்பதை உறுதி செய்தனர்.
அதன் பின்னர் இறந்த நபர்களின் சிதறிய உடல்களை தீயணைப்பு மற்றும் போலீசார் உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து எடுத்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடுகளில் விரிசல், மக்கள் போராட்டம்
இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது பல கி.மீ. தூரத்திற்கு இதன் அதிர்வுகள் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்த பலரும் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் காரணமாக, வெடி மருந்து குடோனில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள டி.கடம்பன்குளம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல்கள், சில வீடுகளில் மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்தன.
இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கல் குவாரியால் விபத்துகள், உயிர்ச் சேதம் ஏற்படுவதால் அதை நிரந்தரமாக மூட வேண்டுமெனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த காவல்துறை உயரதிகாரிகள் மக்களிடம் பேசி சமாதானம் செய்து போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். இதனால் நேற்று மதியம் ஒரு மணிநேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
‘கல்குவாரியால் பல்வேறு விபத்துகள்’
"கல்குவாரியில் தினசரி பாறைகளை வெடி மருந்து மூலம் உடைக்கும்போது வீட்டுப் பொருட்கள் சில அதிர்வுகளால் கீழே விழும்." ஆனால், வெடிவிபத்து ஏற்பட்டபோது அந்த அதிர்வு எதிர்பாராத அளவுக்கு இருந்ததாகக் கூறுகிறார் சேதமடைந்த ஒரு வீட்டின் உரிமையாளர் கண்ணன்.
“எனது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இங்கு மட்டுமல்லாது கிராமத்தில் பல்வேறு வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன."
ஓராண்டுக்கு முன்பு கல்குவாரியின் லாரி மோதியதில், சிறுமி ஒருவரின் கால் அகற்றப்பட்டது எனவும் அப்போதே அதை மூடுமாறு கோரிக்கையை மக்கள் முன்வைத்ததாகவும் கண்ணன் தெரிவித்தார்.
ஆனால், "அரசு கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் அதே கல்குவாரியில் தற்போது நடைபெற்ற விபத்தில் மூன்று உயிர்கள் பலியாகியுள்ளனர். இனியாவது அரசு உரிய நடவடிக்கை எடுத்து கல் குவாரியை மூட வேண்டும்," என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் கண்ணன்.
வெடி மருந்து குடோன் அனுமதியுடன் செயல்பட்டதா?
வெடிவிபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
கடம்பன்குளத்தில் செயல்படும் கல் குவாரிக்கும், வெடி மருந்து குடோனுக்கும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "இந்த குடோனில் 1500 கிலோ வரை வெடி மருந்து சேமிக்க சென்னையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் உரிம காலம் 2027 வரை உள்ளது," என்றவர் இதில் ஏதும் விதிமீறல் நடந்துள்ளதா என்று விசாரணை செய்து வருவதாகவும் கூறினார்.
“குடோனில் வெடித்த வெடி மருந்து மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இவை அவ்வளவு எளிதில் வெடிக்கக் கூடியவை கிடையாது. இந்த வெடிப்புக்கான உண்மையான காரணம், வெடிமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் சோதனைக்குப் பின்னரே தெரியவரும்”, என்றார் பெரோஸ்கான் அப்துல்லா.
இந்த விபத்துத் தொடர்பாக கல் குவாரியின் உரிமையாளர் சேது(73), வெடி மருந்து குடோனின் உரிமையாளர் ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் வெடி பொருள் பிரிவு(Explosive substance act) 286, வெடி பொருளால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் 304(II) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குவாரியின் உரிமையாளர் சேது கைது செய்யப்பட்டுள்ளார்.
‘விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை’
கல் குவாரி, வெடி மருந்து குடோன் இரண்டுக்கும் தனித்தனி உரிமையாளர்கள் உள்ளனர். இரண்டுக்கும் தனித்தனி உரிமம் உள்ளது. இந்நிலையில், "இவற்றில் ஏதேனும் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளனவா என்று விசாரணை மேற்கொள்ளப்படும். ஒருவேளை விதிமீறல் இருப்பின் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் வி.ப.ஜெயசீலன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன."
மேலும், "வெடி மருந்து குடோனில் மீதம் இருக்கும் பெட்டிகளில் உள்ள வெடிபொருள்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை வேறு இடத்திற்குக் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருவதாக" மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முதல் தகவல் அறிக்கையில் வெளியான தகவல் என்ன?
இந்த விபத்து தொடர்பாக டி.கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் வெடி விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
டி. கடம்பன்குளத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கிரஸ்டரில் உள்ள வெடி மருந்து குடோனில், "ஒரே நேரத்தில் லாரியில் இருந்து அதிக அளவில் உயர்ரக வெடி மருந்துகள் இறக்கும் பணி நடந்துள்ளது."
"அங்கு போதிய கண்காணிப்பு அலுவலர்கள் இல்லாமல், எலக்ட்ரிக் டெட்டனேட்டர் வெடி மருந்து வாகனத்தையும், நைட்ரேட் மிக்சர் வெடி மருந்து வாகனத்தையும் நிறுத்தி மருந்துகளை ஏற்றி இறக்கியதால் வெடி விபத்து ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதனால் இது தொடர்பாக சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கிராம நிர்வாக அலுவலர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கல் குவாரி அமைப்பதற்கான விதிமுறைகள் என்ன?
"ஒரு பட்டா இடத்தில் கல்குவாரி அமைக்க வேண்டும் என்றால் அதற்கு கனிம வளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். கல் குவாரி அமையவிருக்கும் இடத்திலிருந்து குடியிருப்புப் பகுதி குறைந்தபட்சம் 300 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.
அதேபோல நீர்நிலைகள் ஏதேனும் இருந்தால் அந்த நீர்நிலையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே கல்குவாரி அமைத்துச் செயல்பட அனுமதி வழங்கப்படும்," என்று கல் குவாரி அமைப்பது தொடர்பான விதிகள் கூறுவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
வெடிமருந்து குடோனுக்கான அனுமதி
வெடி மருந்து சேமிப்பு குடோனுக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு (PESO) அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.
வெடிவிபத்து நடந்த எஸ்.எஸ்.பி வெடிமருந்து குடோனுக்கு சென்னையில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பில் இருந்து 1500 கிலோ வரை சேமித்து வைக்க 5 வருடத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் 2027ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் உள்ளது.
இந்த வெடி விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரிகளில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, இந்த வெடிபொருள் சேமிப்பு கிடங்கிற்கு ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கம். என்று தெரிவித்தார்.
மேலும், "விபத்து நடைபெற்ற குடோனில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்" என்றார்.
இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு கல் குவாரி சார்பில் தலா 12 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)