You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்தியரின் இதயம்; கைகொடுத்த சென்னை - என்ன நடந்தது?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
“கராச்சியில் இதை விட நெருக்கமாக வீடுகள் இருக்கும். ஆனால் இவ்வளவு வண்ணங்கள் இருக்காது.”
மருத்துவமனையின் பதினொறாவது மாடியில் நின்றபடி, ஜன்னல் வழியாக சென்னை நகரத்தைப் பார்த்துக் கொண்டே பதிலளித்தார் சனோபர் ரஷீத். 19 வயதான தனது மகள் ஆயிஷாவுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து நம்பிக்கையோடு இந்தியாவிற்கு வந்த அவரின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை நிறைந்திருந்தது.
ஆயிஷாவுக்கு ஏழு வயது இருக்கும் போது அவருக்கு 25% இதய பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. படிப்படியாக இதயம் செயலிழக்க ஆரம்பித்தது. 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள மூத்த இதயவியல் மருத்துவரை காண வந்திருந்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவருக்கு செயற்கை இதயத் துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. அதன் பின் கராச்சி திரும்பிய ஆயிஷாவுக்கு இரண்டு ஆண்டுகளில் தொற்று ஏற்பட்டு, அவரது இதயத்தின் வலதுபுறம் செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு பிறகு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
“பாகிஸ்தானில் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இந்தியா அல்லது கனடாவிற்குச் சென்றால்தான் அது சாத்தியம் என்று மருத்துவர்கள் கூறினர். நாங்கள் தேடிப் பார்த்தபோது இந்தியாதான் சிறந்தது என்பதை அறிந்துகொண்டோம்.” என்றார் சனோபர்.
சென்னையில் உள்ள மருத்துவரை அழைத்த அவரிடம் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லை. “கிளம்பி வாருங்கள், பார்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறினர்” என்று நினைவு கூறுகிறார் சனோபர். முதல்முறை விசா நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விண்ணப்பித்து விசா பெற்று அவர் இந்தியாவிற்கு வந்தார்.
“முதல் முறை ஆயிஷா வந்தபோதே அவருக்கு இதய பாதிப்பு அதிகமாக இருந்தது. சிகிச்சைக்கு வந்த பின்னர் மாரடைப்பும் ஏற்பட்டது. அதனால், எக்மோ (செயற்கை இதய நுரையீரல் கருவி) பொருத்த வேண்டியிருந்தது. செயற்கையாக இரத்தம் பம்ப் செய்யும் கருவியையும் பொருத்தினோம். இதன் பின்னர் ஓரளவு உடல் நிலை சீராகியதால் சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பினோம். செயற்கை பம்ப் செயல்பாட்டை கண்காணிக்கும் வசதி பாகிஸ்தானில் இல்லை. இந்த சூழலில் அவருக்கு இரத்த குழாயில் கசிவு ஏற்பட்டது. எனவே அவருக்கு மீண்டும் சிகிச்சை வழங்க வேண்டிய தேவை எழுந்தது.” என்று கூறுகிறார் மூத்த இதயவியல் மருத்துவர். கே ஆர் பாலகிருஷ்ணன். எம் ஜி எம் மருத்துவமனையின் இதய நுரையீரல் மாற்றுப் பிரிவின் இயக்குநரான இவர், ஆயிஷாவுக்கு 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
“மிகவும் தீவிர இதய பாதிப்புடன் ஆயிஷா இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். பல நாட்கள் சுயநினைவு இல்லாமல் தான் இருப்பார். எங்களிடம் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சிறுமி என்பதால் கூடுமான வரை உதவி செய்து அவரை காக்க வேண்டும் என முயற்சித்தோம்” என குறிப்பிட்டார் பாலகிருஷ்ணன்.
டெல்லியில் 69 வயது நபரின் இதயத்தை தானமாக அளிக்க அந்த இந்திய குடும்பத்தினர் தயாராக இருந்தனர்.
எம் ஜி எம் மருத்துவமனையின் இதய நுரையீரல் மாற்றுப் பிரிவின் இணை இயக்குநர் சுரேஷ் ராவ் கே ஜி “இந்தியாவில் உறுப்பு மாற்றுக் கொள்கையின் படி, இந்தியர் ஒருவருக்கு ஓர் உறுப்பு பொருந்தும் என்றால் அவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். எனவே ஆயிஷா பத்து மாதங்கள் காத்திருந்தார். இந்த இதயத்தை எடுத்துக் கொள்ள யாரும் முன் வராததால் ஆயிஷாவுக்கு கிடைத்தது.
அந்த இதயம் கிடைக்காவிட்டால், ஆயிஷா இறந்திருக்கலாம், அந்த இதயமும் வீணாகியிருந்திருக்கும். ஆயிஷாவுக்கு அந்த இதயம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்தவுடன், ஆயிஷாவை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். டெல்லியிலிருந்து ஐந்து மணி நேரத்தில் இதயம் மருத்துவமனைக்கு வந்தடைந்தது. ஐந்து மணி நேரம் தனது துடிப்பை நிறுத்தியிருந்த இதயம், புதிய உடலில் பொருத்தப்பட்ட பின்னர் மீண்டும் துடிக்கத் தொடங்க வேண்டும். அவ்வாறு அதன் முதல் துடிப்பை பார்க்கும் போது எங்களுக்கு பரவசமாக இருந்தது” என்றார்.
சிகிச்சைக்கான நிதி பற்றி குறிப்பிட்ட மருத்துவர் பாலகிருஷ்ணன் “ஆயிஷாவின் குடும்பத்திடம் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லை. ஐஸ்வர்யம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியும், எம்.ஜி.எம் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களால் நன்கொடை அளிக்கப்பட்ட தொகை மற்றும் எனது சொந்த பணம் ஆகியவற்றை கொண்டு இந்த சிகிச்சை சாத்தியமானது” என்றார்.
ஐஸ்வர்யம் தன்னார்வ அமைப்பின் உதவியுடன் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமான இதய சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 175 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் ஆகும்.
தனது உயிரைக் காத்த மருத்துவர்களுக்கு நன்றி கூறிய ஆயிஷா பி.பி.சியிடம் பேசியபோது , “அறுவை சிகிச்சைக்கு பின்னர் மிக நன்றாக உணர்கிறேன். இரண்டு மாதங்களுக்கு பின் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறினார். ஊருக்கு சென்ற பின் எனது படிப்பை தொடர நினைக்கிறேன். எதிர் காலத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஆக விரும்புகிறேன்” என்றார்.
“இந்தியாவில் தங்கியிருப்பது என்பது பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டில் இருப்பது போல தோன்றவில்லை. அங்கேயும் இங்கேயும் எல்லாமே ஒன்று போலத்தான் இருக்கிறது. எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.” என்று கூறினார்.
சென்னையை சுற்றிப் பார்த்தீர்களா என கேட்டபோது, “உடல் நலமில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில்தான் பெரும்பாலும் நேரத்தை செலவிட்டேன். கிடைத்த வாய்ப்பில் கடற்கரைக்குச் சென்றேன். என் வாழ்நாளில் இப்போதுதான் கடற்கரையை பார்க்கிறேன். ஷாப்பிங் மால் சென்றேன். சென்னையில் உணவுகளை சாப்பிட்டபோது தோசை மிகவும் பிடித்திருந்தது” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)