You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் என்ன ஆகிறார்கள்?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் சில விவரிப்புகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்)
சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த பிரவீன், மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அந்த பெண்ணின் சகோதரரால் கடந்த பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவரை இழந்த ஷர்மிளா இரண்டு மாதங்கள் கழித்து தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் வேலை செய்து வந்தவர் பிரவீன். ஜல்டியான்பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளாவும் பிரவீனும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எதிர்ப்பையும் மீறி பிரவீன் வீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு, பிரவீன் வீட்டில் வசித்து வந்துள்ளார் ஷர்மிளா. தனது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனவும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி மாதம் பள்ளிக்கரணை சந்தையில் பிரவீன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் மற்றும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரவீன் இறந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஷர்மிளா பிரவீன் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த பத்து நாட்களாக சிகிச்சையில் இருந்த ஷர்மிளா 22ஆம் தேதி மாலை உயிரிழந்தார்.
ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் வாழ்க்கை துணைகளின் நிலை என்ன?
ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை துணைகளின் வாழ்க்கை கடினமானதாகவே இருக்கின்றன. உளவியல் போராட்டங்கள், பொருளாதாரச் சிக்கல்கள், சட்டப் போராட்டங்கள் என பல்முனை துயரமாக இருக்கிறது.
ஆணவக் கொலை செய்யப்பட்ட தனது கணவரை இழந்து வாடும் அனுசுயா தானும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுகிறார். திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்த வந்த சுபாஷை காதலித்து திருமணம் செய்தார் அனுசுயா. ஒரே பகுதியில் வசித்து வந்த இரு குடும்பத்தினரும் முதலில் அவர்களின் காதலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பெண் வீட்டார் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்ததும் சுபாஷின் குடும்பத்தினர் விலக ஆரம்பித்துவிட்டனர்.
“நான் வேதியியலில் முதுநிலை முடித்து தரக் கட்டுப்பாட்டு அலுவலராக நல்ல சம்பளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன். எனினும் எனது சமூகத்தை காரணம் காட்டி சுபாஷின் தந்தை எங்களை ஒதுக்கினார். ஆனால் சுபாஷ் உறுதியுடன் இருந்ததால், நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம். "
“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து பாருங்கள். நான் சுபாஷை தான் கட்டுவேன் என்று அவரது தந்தையிடம் பேசினேன். அப்போதிலிருந்தே என் மீது அவருக்கு கோபம் தான்” என்றார்.
அனுசுயாவுக்கு என்ன நடந்தது?
விழா ஒன்றுக்கு ஊருக்கு வரச் சொல்லி, தூங்கிக் கொண்டிருக்கும் போது அனுசுயாவை சரமாரியாக வெட்டியுள்ளார் சுபாஷின் தந்தை. தடுக்க வந்த சுபாஷையும் அவரது தாயையும் வெட்டிக் கொன்று விட்டார். பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய அனுசுயா, இரண்டு கைகளை இழந்துவிட்டார்.
“முதலில் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் என்னை தைரியமாக அனுப்பி வைப்பார்கள். இப்போது அடுத்த ஏரியாவுக்கு செல்லவே துணையுடன் தான் செல்ல வேண்டியுள்ளது. சிறிது நேரம் வெளியே இருந்தாலும், யாராவது மீண்டும் கொலை செய்ய வந்துவிடுவார்களோ என்ற அம்மா பயப்படுகிறார்."
"நாங்கள் ஏதோ பதின்பருவத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளவில்லை. நல்ல படிப்பும், வேலையும் கொண்ட பிறகே காதலித்து திருமணம் செய்து கொண்டோம். என்னால் ஒரு நொடி கூட அவனை மறந்து இருக்க முடியவில்லை. ஒரு சில முறை தற்கொலைக்கு முயன்றேன். என்னை விட்டு போகாதே என்று தம்பி கதறுகிறான். சில சமயம் ஆதங்கத்தில் அம்மா என்னை திட்டுவதும் உண்டு. எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு தான் வாழ்கிறேன்” என்றார்.
இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்த அனுசுயாவுக்கு மேலும் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. அனுசுயாவின் தந்தை முன்பு போல் நெருக்கமாக இருப்பதில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு சொந்த ஊர் திரும்ப விரும்பாத அனுசுயா மற்றொரு நகரத்தில் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். சில தனிநபர் , அமைப்புகளின் உதவியுடன் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
கவுசல்யா மீண்டு வந்தது எப்படி?
இது அனுசுயா அல்லது ஷர்மிளாவின் கதை மட்டுமல்ல. வாழ்க்கை துணையை ஆணவக் கொலையால் இழந்த பெரும்பாலானவர்களின் நிலை இதுவே. உடுமலைப்பேட்டையில் 2017ஆம் ஆண்டு பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சங்கரின் துணை கவுசல்யாவும் தற்கொலைக்கு முயன்று பின் மீண்டு வந்தார்.
“சங்கர் இறந்த போது, எனக்கு உறுதுணையாக பல அமைப்புகள், தோழர்கள், அமைப்புகளில் இல்லாத பலர் குடும்பம் குடும்பமாக என்னை வந்து சந்தித்தனர். அவர்கள் எனக்கு பெரும் பலமாக இருந்தனர். அதனால் தான் இருவீட்டார் ஆதரவு இல்லாமலும் என்னால், தொடர்ந்து இயங்க முடிகிறது. ஆனால் இதை தனிநபர்கள் எப்படி செய்துக் கொண்டே இருக்க முடியும். அரசு தானே செய்ய வேண்டும்.
சென்னையில் ஷர்மிளா இருந்த வீட்டின் முன் காவல்பாதுகாப்பு இருந்தும் கூட, தற்கொலை நடந்துள்ளது. ஆணவக் கொலைக்கு எதிராக போராடுவேன் என்றும், கணவரை கொன்றவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் என்னிடம் அவர் தெரிவித்திருந்தார்.” என்கிறார் கவுசல்யா.
ஷர்மிளாவின் தற்கொலைக்கு என்ன காரணம்?
கணவனை இழந்த சோகத்தில் ஷர்மிளா இருந்தது உண்மை என்றாலும், பிரவீன் இறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொள்வதற்கு வேறு சில காரணங்கள் இருப்பதாக அவருடன் பழகியவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய பிரவீனின் சித்தியான பவுன் கூறுகையில், “கடந்த இரு வாரங்களுக்கு முன், குற்றம் சாட்டப்பட்ட ஷர்மிளாவின் அண்ணனுக்கு ஜாமீன் வழங்குவதற்கான நோட்டீஸ் எங்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் கிடைத்தது முதலே மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் ஷர்மிளா. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முந்தைய நாள் தான் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது."
"கொலையும் செய்து விட்டு, இப்போது மகனை காப்பாற்ற ஜாமீன் கேட்கிறார்களே என பெற்றோர்கள் மீது கடும்கோபத்தில் இருந்தார். பிரவீன் இறந்ததற்கு பிறகு, காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இடையில் ஒரு நாள் எந்த காவலரும் இல்லை. அதுவும் கூட அவளை பாதித்தது.” என்றார்.
"ஷர்மிளா தற்கொலைக்கு முயன்றபோது, அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். பின் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.” என்றார்.
இந்த வழக்கை நடத்தி வரும், மூத்த வழக்கறிஞர் மோகன், ஷர்மிளாவின் தற்கொலைக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.
“கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தும் கூட போலீஸார் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை. பிரவீனை கொலை செய்ய கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஷர்மிளாவின் பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீராம் என்ற பையனை பிரவீனுடன் நண்பராக பழகவிட்டுள்ளனர். கொலை நடந்த தினத்தில் ஸ்ரீராம் அழைத்ததன் காரணமாகவே பள்ளிகரணை சந்தைக்கு பிரவீன் வந்தார். அங்கு தான் அவர் கொலை செய்யப்பட்டார். காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாததால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
ஆணவக் கொலைகள் பெரும்பாலும் ஆதிக்க சாதி பெண்ணும் தாழ்த்தப்பட்ட சாதி ஆணும் திருமணம் செய்துக் கொள்ளும் போதே நடைபெறுகின்றன. சாதி தூய்மையை பெண்ணே சுமக்க வேண்டும் என்று கருதுபவர்கள், தாழ்ந்த சாதி ஆணை திருமணம் செய்துக் கொள்வதால் அந்த தூய்மை அழிந்து போவதாக கருதுகிறார்கள்.
எனவே தான் பல நேரங்களில் பெண்ணின் வீட்டாரே ஆணவக் கொலை சம்பவங்களில் ஈடுபடுவதை காண முடிகிறது. பெண் வீட்டார் தாழ்த்தப்பட்ட சமூக ஆணை கொலை செய்கிறார்கள், அல்லது தங்கள் வீட்டுப் பெண்ணையே அவமானமாக கருதி கொலை செய்கிறார்கள், அல்லது இருவரையும் சேர்த்தே கொலை செய்கிறார்கள்.
“பெண் வீட்டார் தங்கள் பெண்ணையே கொலை செய்யும் போது, மனைவியை இழந்த கணவனுக்கு சட்டப் போராட்டங்களும் உளவியல் ரீதியான போராட்டங்களும் இருக்கும். ஆனால் ஆண்கள் கொலை செய்யப்படும் போது கணவனை இழக்கும் பெண்களுக்கு அவலங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. "
"கொலை செய்தது தனது குடும்பத்தார் என்பதால், அந்த பெண் தன் சொந்த வீட்டுக்கு செல்ல முடியாத சூழல் இருக்கும். அதே நேரம், கணவன் வீட்டாருடனும் மிக நெருக்கமாக இருக்க முடியாது. ஆணவக் கொலைக்கு பிறகு எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கிறது என்பதை பொறுத்து தான் அவர்களின் வாழ்க்கை அமைகிறது. சிலர் மீண்டும் திருமணம் செய்து வாழ்க்கையில் நல்லபடியாக உள்ளனர்” என்கிறார் சாமுவேல்ராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர்.
ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களின் துணைகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்கிறார் கவுசல்யா.
“அவனை நம்பி தானே வந்தோம், அவன் இறந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாத மனநிலையில் தான் பெண்கள் இருப்பார்கள். அந்த பெண்ணுக்கு அந்த பையனை மட்டும் தான் தெரிந்திருக்கும். குடும்பத்தை சமீபமாக தான் தெரிந்திருக்கும். கணவர் வீட்டில் பார்த்துக் கொண்டாலும், அங்கேயே தொடர்ச்சியாக தங்க முடியாது. அப்போது பெண்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்போதுதான் தற்கொலை எண்ணங்கள் தலை தூக்குகின்றன. அவர்களுக்கு ஒரு வேலை கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்கிறார்.
மேலும், “பலரது கவனத்தை ஈர்த்த எனது வழக்கிலேயே முதல் குற்றவாளியான சின்னசாமி விடுதலையாகிவிட்டார். சமீபத்தில் பல்லடத்தில் பெண் வீட்டார் சாதி மறுப்பு திருமணத்துக்கு பிறகு, பெண்ணை அழைத்து சென்று அவரை கொன்ற வழக்கில் பெண்ணின் தாய் தந்தை வெளியே வந்துவிட்டனர்."
"பெண் இறந்ததை மறைத்துவிட்டனர் என்பது மட்டுமே அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றமாகும். திருமணமாகிய பின், பெண்ணை கணவரிடமிருந்து பிரித்து சென்றதும், கூட்டிச் சென்றே மறு நாளே பெண் இறந்ததும் பிரச்னையாக நீதிமன்றத்துக்கு தெரியவில்லையா? தன்னை நம்பி வந்த பெண்ணை பாதுகாக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அந்த பையன் தற்கொலைக்கு முயன்றுள்ளான். "
மனிதர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதி. அதன் மீதே இவ்வளவு கேள்விகள் எழுந்தால், என்ன செய்வது? நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் உங்களை பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்களா? நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வழக்கு தொடுத்து காத்திருக்கிறார்கள்.” என்கிறார்.
தனி சட்டம் அவசியம்
ஆணவக் கொலைகளை தவிர்க்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பது நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரால் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கை. கொலை செய்பவர்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என்பதால் புகார் அளிக்க யாரும் முன்வருவதில்லை என்பது இது போன்ற வழக்குகளில் சவாலாக இருக்கிறது.
மேலும் குடும்பத்தினரே தங்கள் வீட்டு பெண்ணை சில நேரங்களில் ஆணவக் கொலை செய்யும் போது சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளை பதிவு செய்ய முடியாது. இதன் காரணமாக தனிச்சட்டம் கோரப்படுகிறது.
“தனிச் சட்டம் இயற்றுவதற்காக சட்ட ஆணையம் தயாரித்த வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலும் அதற்கான வரைவை அமைப்புகள் தயார் செய்து அரசிடம் கொடுத்தன. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை” என்கிறார் வழக்கறிஞர் மோகன்.
தற்கொலை தீர்வல்ல
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)