You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் தயாராகும் 2 மசாலாப் பொடிகளில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனமா? அமெரிக்க உணவுத்துறை ஆய்வு
இரண்டு இந்திய மசாலா நிறுவனங்கள் தயாரித்த மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக,`அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்’ ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் எம்டிஹெச் (MDH) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று மசாலாப் பொடிகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் ஒரு மசாலாப் பொடியின் விற்பனையை ஹாங்காங் தடை செய்தது. இந்த மசாலாப் பொருட்களில் அதிக அளவு எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவைத் தவிர, எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. கடந்த காலங்களில், இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகையில், எவரெஸ்ட் நிறுவனம் தனது தயாரிப்புகள் உடல்நலனில் எந்த தீங்கையும் ஏற்படுத்தாதது, பாதுகாப்பானது என்று கூறியது. எம்டிஹெச் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) செய்தித் தொடர்பாளர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், "இந்த ஆய்வு அறிக்கைகள் பற்றி FDA-வுக்கு தகவல் கிடைத்தது. கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலா கலவையில் அதிக அளவு புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு இருக்கும் காரணத்தால் சிங்கப்பூர் அரசு நிர்வாகத்தால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த வார தொடக்கத்தில், மசாலா ஏற்றுமதிக்கான அரசு ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய மசாலா வாரியம் (the Spices Board of India), ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகக் கூறியது. அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்பு ஆலைகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தரம் குறித்த சிக்கல்கள் ஏற்பட மூல காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நிறுவனங்களின் இணையதளங்களும் சனிக்கிழமை இயக்கத்தில் இல்லை.
எத்திலீன் ஆக்சைடு என்பது தொழில் துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது மசாலாப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) இந்த ரசாயனம் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகிறது.
2018 ஆம் ஆண்டில், EPA "எத்திலின் ஆக்சைடு பெண்களுக்கு லிம்பாய்டு புற்றுநோயையும் மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என சான்றுகள் கூறுகின்றன" என்று கூறியது.
தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களை பிபிசி தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கக்கூடும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து MDH தயாரிப்புகளை அமெரிக்கா தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள்.
சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை
ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன?
சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.
"எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்.
எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது.
ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது.
எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?
எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது.
இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.
எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன.
அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள்
இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.
இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.
சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல.
சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)