மர்ம புன்னகை வீசும் 'மோனாலிசா' ஓவியத்தை டாவின்சி எங்கே வரைந்தார்? ஆய்வாளர் புதிய தகவல்

    • எழுதியவர், சுனெத் பெரேரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

'மோனாலிசா.'

உலகின் மிகப் பிரபலமான ஒரு ஓவியத்தின் பெயரைக் கேட்டால், நம்மில் பலரும் இந்தப் பெயரைத்தான் சொல்வோம்.

ஆனாலும் இந்த ஓவியத்தைச் சுற்றிப் பல மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன.

லியோனார்டோ டாவின்சி வரைந்த இந்த ஓவியம், அதன் 'மர்மப் புன்னகை'க்காகப் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் இது வரையப்பட்டு 500 ஆண்டுகள் ஆகியும் இந்த ஓவியத்தின் வேறுபல அம்சங்கள் இன்னும் மர்மமானவையாகவே உள்ளன.

தற்போது, புவியியலாளரும் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தின் (Renaissance) வரலாற்று நிபுணருமான ஆன் பீட்சோரூஸோ (Ann Pizzorusso), இந்த ஓவியத்தின் ஒரு மர்மத்தை விலக்கியுள்ளதாக நம்புகிறார். அது இந்த ஓவியம் வரையப்பட்ட இடம்.

தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இந்த ஓவியத்தின் நிலவியல் அமைப்புகளை அவர் அடையாளம் கண்டிருக்கிறார். ஓவியத்தின் பின்புலத்தில் இருக்கும் ஒரு 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம், அது இத்தாலியின் வடக்கே இருக்கும் லெக்கோ (Lecco) என்ற நகரத்தில் வைத்து வரையப்பட்டிருப்பதைக் குறிக்கிறது என்கிறார் அவர். இந்த நகரம் இத்தாலியில் லொம்பார்டி பகுதியில் இருக்கும் கோமொ ஏரியின் (Lake Como) கரையில் அமைந்திருக்கிறது.

'டாவின்சி புவியியலின் தந்தை'

தனது இந்தக் கண்டுபிடிப்புகளை பீட்சோரூஸோ வடக்கு இத்தாலியில் நடந்த ஒரு மாநாட்டில் வெளியிட்டார்.

புவியியல், கலை வரலாறு ஆகிய இரண்டு துறைகளில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தை இணைத்துப் பார்க்கையில், டாவின்சி ஒரு மகத்தான ஓவியர் மட்டுமல்ல, ஒரு சிறந்த புவியியலாளரும் ஆவார் என்கிறார் பீட்சோரூஸோ.

"டாவின்சியை நான் புவியியலின் தந்தை என்று கருதுகிறேன். அவரது ஓவியங்களில் புவியியல் துல்லியம் இருக்கும். அதுவே அவரது முத்திரை. அவர், பாறைகள், மரங்கள், செடிகள் ஆகியவற்றை வரைந்திருக்கும் எந்தவொரு ஓவியத்தையும் பாருங்கள். அவை கச்சிதமாக இருக்கும். அவற்றை அடையாளம் காணும் வகையில் துல்லியமாக இருக்கும். அதுவே அவரது முத்திரைகளில் ஒன்று," என்றார் அவர்.

'முக்கியமான விஷயங்களைப் பார்க்க தவறிவிட்டோம்'

பிபிசியின் உலகச் செய்திகள் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பீட்சோரூஸோ, 500 ஆண்டுகளுக்கு முன்பு டாவின்சி எங்கெங்கு சென்றாரோ, அவ்விடங்களுக்குத் தானும் சென்றதாகக் கூறினார்.

"அவரது ஓவியங்களில் இருக்கும் நிலப்பரப்பை, இவ்வளவு வருடங்கள் கழித்து இன்றும் என்னால் பார்க்க முடிகிறது," என்றார் அவர்.

மோனாலிசா ஓவியத்தில் பின்புலத்தில் இருக்கும் பாலம் போன்றவை, இத்தாலியின் பல நகரங்களிலும் காணப்படுகின்றன. ஓவியத்தில் இருக்கும் பாலம் எதுவென்று அடையாளம் காண, கலை வரலாற்றாசிரியர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.

"அவர்கள் வெறும் பாலத்தைமட்டுமே தேடி வந்தனர். இது இத்தாலியில் எங்கும் நிறைந்திருக்கும் மினி கூப்பர் காரைத் தேடுவதைப் போன்றது," என்கிறார் அவர். "பாலத்தைப் போலவே ஓவியத்திலிருக்கும் நிலவியலும் ஏரியும் முக்கியம். அவை இங்கே இருக்கின்றன," என்றார் அவர்.

'மோனாலிசா'வில் இருக்கும் பாலம் எது?

இந்த நிலவியல் அமைப்புகளை, பீட்சோரூஸோ, வடக்கு இத்தாலியின் கோமோ ஏரியின் கரையிலிருக்கும் லெக்கோ நகரோடு பொருத்தியிருக்கிறார். இந்த இடத்தில்தான் இந்த உலகப் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டதாக அவர் நம்புகிறார்.

"கோமோ ஏரியின் அருகில்தான் டாவின்சி பலநாட்கள் தங்கியிருந்தார். காரணம்? அவர் மிலன் நகரில் இருந்து கோமோ ஏரிக்கு ஒரு கால்வாய் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால அவ்விடத்தின் பல பகுதிகளில் பாறைகள் நிறைந்திருந்ததால் அவரால் அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை," என்கிறார் அவர்.

ஓவியத்தின் பின்புலத்தில் இருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ் மலைத்தொடர் என்கிறார் பீட்சோரூஸோ. டாவின்சி ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குச் சென்ற வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

ஓவியத்தில் இருக்கும் பாலம் 14-ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட அட்ஸோன் விஸ்காண்டி பாலம் (Azzone Visconti Bridge) என்று அவர் கருதுகிறார்.

மர்மம் விலகியது எப்படி?

இந்த ஆய்வுக்காக பீட்சோரூஸோ, கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த், ட்ரோன்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுதினார். இவற்றின் மூலம் இந்த இடத்தை அவர் அடையாளம் கண்டார். இவற்றின் மூலம் கிடைத்த தரவுகளை ஒன்றிணைத்ததும் "அனைத்தும் பொருந்திப் போனது," என்கிறார் அவர்.

இதற்குமுன், 2011-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வின்படி, மோனாலிசா ஓவியத்தின் பின்புலத்தில் இருக்கும் பாலமும் சாலையும் வடக்கு இத்தாலியில் இருக்கும் வேறொரு சிறு நகரமான பாப்பியோ நகரில் இருப்பவை என்று கருதப்பட்டன.

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான மற்றொரு கருதுகோள், டாவின்சி இந்தப் பாலத்தை அரெட்ஸோ நகரத்தில் வரைந்ததாகக் கூறியது.

கடந்த காலத்தில், இத்தாலியின் லாட்டெரினா என்ற சிற்றூரில் இருக்கும் போந்த் ரோமிதோ என்ற பாலம்தான் ஓவியத்தில் இருக்கும் பாலம் என்றும் கருதப்பட்டது.

யார் இந்த டாவின்சி?

லியொனார்டோ டாவின்சியால் 16-ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம் ஃபிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரத்திலிருக்கும் லூவ்ர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஓவியத்தைக் காண மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்துக்குச் செல்கின்றனர்.

லியோனார்டோ டாவின்சி 15-16-ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்தவர்.

பிரபலமாக அவர் ஓர் ஓவியராக அறியப்படுகிறார். ஆனால் அவர் ஒரு ஓவியர் மட்டுமல்ல – அவர் ஒரு சிற்பி, பொறியாளர், விஞ்ஞானி, கணிதவியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் என பல துறைகளிலும் நிபுணத்துவம் கொண்டிருந்தார்.

500 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கண்டுபிடித்த சில விஷயங்கள் இன்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)