நிலவில் கால் பதிக்க அமெரிக்கா - சீனா போட்டியில் உள்ளே நுழையும் இந்தியா - முந்தப் போவது யார்?

அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது.

தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன.

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்?

கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

'நிலவின் உலக அரசியல்'

சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது.

"எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார்.

நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை.

நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது.

"இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.

இதற்கு என்னென்ன தேவை?

நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான்.

ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

"மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார்.

அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்'

தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது.

"நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார்.

"நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது.

பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா.

சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

"நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார்.

"முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.

தொழில்நுட்ப சவால்கள் என்ன?

நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை.

அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை.

நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார்.

பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும்.

"நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.

விண்வெளிப் போட்டி

சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்கநெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது.

அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது.

இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது.

"சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார்.

(இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)