ஹமாஸ் ஆயுதக் குழுவை இஸ்ரேல்தான் உருவாக்கியதா? உண்மை என்ன?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லைத் எஸ்சம்
    • பதவி, பிபிசி நியூஸ், அரபு சேவை

பல ஆண்டுகளாக, ஹமாஸ் ஆயுதக் குழு என்பதே "இஸ்ரேலிய செயல் திட்டம்" தான் என்று கூறுபவர்களும் உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான பாலத்தீன போராளிக் குழுவின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கூற்று மீண்டும் வலுப்பெற்றது.

ஹமாஸின் பிறப்பிடத்தை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்துவது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மிகவும் பழைய குற்றச்சாட்டு.

இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்கள் இதை திட்டவட்டமாக நிராகரிக்கிறார்கள். மூத்த இஸ்ரேலிய அதிகாரிகளைப் போலவே, இந்தக் கூற்றை ஆதாரமற்றது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு முன்பே, இந்த குற்றச்சாட்டை ஒரு முன்னாள் பாலத்தீன அமைச்சர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் மீண்டும்மீண்டும் பல வெளிநாட்டு செய்தித்தாள்களுடன் பேசியபோது தெரிவித்திருந்தார். முக்கிய ஆர்வலர்களும் சமீபத்திய வாரங்களில் சமூக ஊடகங்களில் அவரைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

இந்த கூற்று பல தசாப்தங்களுக்கு முன்னர் முன்னாள் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக், அமெரிக்க காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியின் செனட்டராலும் இஸ்ரேலின் உள் பாதுகாப்பு சேவையான ‘ஷின் பெட்’ அதிகாரிகளாலும் பகிரங்கமாக கூறப்பட்டது.

ஆனால் இதிலெல்லாம் உண்மை இருக்கிறதா?

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹமாஸ் ஆயுதக் குழுவை உருவாக்கியதே இஸ்ரேல் தானா என்ற கேள்வியுடன் கூடிய விவாதம் பல நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

நீண்ட காலமாக செயல்பட்டு வரும் ஹமாஸ்

ஹமாஸ் 1987 இல் முதன்முதலில் தோன்றிய போது எங்கிருந்தும் தோன்றவில்லை. அதற்கு முன்பே, அது ஏற்கனவே வெகுதொலைவைக் கடந்துவிட்டது. அதை மிகவும் எளிமையான முறையில் இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்:

பாலத்தீன பிரதேசங்களில் இயக்கத்தின் முதல் வேர்கள் 1940 களின் நடுப்பகுதியில் காஸாவில் முஸ்லீம் சகோதரத்துவத்தின் முதல் கிளைகளை நிறுவியதன் மூலம், ஜெருசலேமின் ஷேக் ஜர்ரா சுற்றுப்புறத்திலும் மற்றும் பிற இடங்களிலும் தோன்றின.

1967ஆம் ஆண்டு ஆறு நாள் போரில் இஸ்ரேலுக்கு எதிரான தோல்வியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட "பின்னடைவு" மற்றும் சாத்தியமான ஆயுதம் பற்றிய முதல் யோசனைகளுக்குப் பிறகு, முஸ்லீம் சகோதரத்துவத்தின் இளைஞர்கள் அரபு தலைவர்களுடன் விரக்தியடைந்ததன் விளைவாக இரண்டாவது கட்டமாக மோதல் ஏற்பட்டது.

முஸ்லீம் சகோதரத்துவத்தின் பதிவுகளின்படி, பாலத்தீன பிரதேசங்களில் இஸ்லாமிய அமைப்பின் வரலாற்றின் பெரும்பகுதி மதம், ஆதரவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அவர்கள் மத மற்றும் சமூக நிறுவனங்களையும் மசூதிகளையும் கட்டியெழுப்பினார்கள்.

இந்த ஆவணங்கள், பாலத்தீன பிரதேசங்களில் அதன் முதல் ஆண்டுகளில், முஸ்லிம் சகோதரத்துவம் ராணுவ பயிற்சிக்கு பதிலாக இளைஞர்களின் அறிவுசார், கலாச்சார மற்றும் ஆன்மிக பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியது.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1966 ஆம் ஆண்டு பிரபல இஸ்லாமிய சிந்தனையாளர் சயீத் குத்புக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

"ஆயுதப் போராட்டத்தின்" அறிகுறிகள்

இந்நிலையில், 1950 மற்றும் 1960 களில் பல்வேறு காலகட்டங்களில் நாசரிஸ்ட் மற்றும் பாத்திஸ்ட் அரேபிய தேசியவாத அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற அமைப்புகளில் சமய ரீதியிலான சவால்கள் எழுந்ததன் காரணமாக இஸ்லாமியர்கள் பாலத்தீன பிரதேசங்களில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தற்போது வெளிநாட்டில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவராகச் செயல்பட்டு வரும் ஹமாஸின் முன்னாள் தலைவர் காலித் மெஷால் சுட்டிக்காட்டியுள்ளார். மிஷாலின் பத்திரிகை அறிக்கைகளின்படி, இஸ்லாமியர்கள் எங்கும் வரவேற்கப்படவில்லை.

இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் 1967 முதல் 1987 இல் இஸ்லாமிய இயக்கம் பிறக்கும் வரை ஹமாஸின் எழுச்சிக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மையப்படுத்துவோம்.

1967 போரில் அரேபியர்களின் தோல்விக்குப் பிறகு "இஸ்ரேலுக்கு எதிரான போரில்" பயன்படுத்தப்பட்ட வழிமுறையின் மாற்றத்திற்கான காரணிகளில் ஒன்று வடிவம் பெறத் தொடங்கியது.

ஹமாஸ் இயக்கத்தின் முதல் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கோஷே, “தி ரெட் மினாரெட்” (The Red Minaret) என்ற தலைப்பில் தனது நினைவுக் குறிப்புகளில் இந்தத் தோல்வி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் இளைஞர்களுக்கு ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றிப் பேசுகிறார்.

ஜோர்டானில் சகோதரத்துவத்தின் கன்ட்ரோலர் ஜெனரல் அழைப்பு விடுத்திருந்த இஸ்லாமிய மாநாட்டில் தானும் தனது தலைமுறையைச் சேர்ந்த மற்ற இளைஞர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கோஷே உறுதியளிக்கிறார். ஏனெனில் அது பாலத்தீனத்தின் எதிர்காலத்திற்கான தெளிவான தீர்வுகளை முன்வைக்கவில்லை என்பதுடன் அது இஸ்லாமிய ஜிஹாத்தை உருவாக்கவும் அழைப்பு விடுக்கவில்லை.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1960 களின் பிற்பகுதியில், சகோதரத்துவ இளைஞர்கள் ஃபதா இயக்கத்தின் பதாகையின் கீழ் இஸ்ரேலுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கோஷே மேலும் "தி ரெட் மினாரெட்" இல் கூறுகையில், இந்த பிரச்னை, ஏற்கெனவே இஸ்ரேலுக்கு எதிராகப் போராடி வந்த இஸ்லாமிய சகோதரத்துவத்தின் இளைஞர்களை மூத்தவர்களின் அறிவுரைகளை மீறி ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தியது. இதற்கு "சீர்திருத்த இயக்கம்" என்ற காரணமும் கூறப்பட்டது.

இதன் விளைவாக, அந்த நேரத்தில் ஜோர்டானில் "ஷேக் விதிகள்" என்று அறியப்பட்டதற்குள், சகோதரத்துவத்தின் இந்த இளம் உறுப்பினர்களை தயார் செய்து அவர்களுக்கு போர் திறன்களை வழங்க ஃபத்தா இயக்கத்துடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் எட்டப்பட்டது .

இந்த அளவுருக்களைப் பின்பற்றும் பயிற்சி 1968 இல் தொடங்கி "கருப்பு செப்டம்பர்" (ஜோர்டானிய உள்நாட்டுப் போர் என்றும் அழைக்கப்படுகிறது) நிகழ்வுகள் மற்றும் திருத்த இயக்கத்தில் சகோதரத்துவத்தின் தலைமையின் கண்டுபிடிப்புக்குப் பிறகு 1970 இல் முடிந்தது என்று கோஷே கூறுகிறார்.

இந்த நேரத்தில், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் "கிளாசிக்கல் தலைவர்கள்" மற்றும் "இளைய தலைமுறை" இடையே பல உள் மோதல்களை சந்தித்தது.

இளைஞர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தள்ளப்பட்டதால், தலைவர்கள் இஸ்ரேலுடன் போரிடுவதை விட "அரசு கட்டமைப்பிற்கு" முன்னுரிமை அளித்து, இயக்கத்தின் பல உறுப்பினர்களை சிதைத்து "தேசிய குழுக்கள் மற்றும் இயக்கங்கள்" ஆயுதப் போராட்டத்தைத் தழுவிய போராளிகளை உருவாக்க வழிவகுத்தது.

இது குழுவின் மீது அதிக அழுத்தத்தைக் கொண்டு வந்தது. ஏற்கனவே அதன் எதிரிகளின் பெருக்கம் மற்றும் பிற பாலத்தீன அறிவுசார் மற்றும் தேசிய இயக்கங்களின் ஆதிக்கம் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டது.

"யாசர் அராபத்தை சமாளிக்க ஹமாஸை இஸ்ரேல் உருவாக்கியது"

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தோன்றிய இஸ்லாமியக் குழுவிற்கும் இடையிலான "உறவு பற்றிய சந்தேகம்" குழுவின் கஷ்டங்களின் கடைசி இரண்டு தசாப்தங்களில், அதாவது 1970கள் மற்றும் 1980களில் தோன்றியது.

ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேலிய உருவாக்கம் என்று குற்றம் சாட்டிய போது , ​​இந்தச் சந்தேகத்தை எழுப்பியவர்களில், எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கும் ஒருவர் . முபாரக் ஒரு பழைய வீடியோவில், பல எகிப்திய வீரர்களைச் சந்தித்து, "பாலத்தீன விடுதலை அமைப்புக்கு (பிஎல்ஓ) எதிராகச் செயல்பட ஹமாஸை இஸ்ரேல் உருவாக்கியது," என்ற பிரசாரத்தை முன்னெடுத்தார்.

முபாரக் மட்டும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை - 1988ல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினரான ரான் பால், 2009ல் தனது நாடாளுமன்ற உரையின் போது,“யாசர் அராபத்தை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் ஹமாஸை உருவாக்க இஸ்ரேல் ஊக்குவித்து உதவியது என்பதை நாங்கள் நிரூபிப்போம்,” என்றார்.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோர்டானில் ஃபதா இயக்கத்தினர் பாலத்தீனத்தை விடுவிப்பதற்கான ஒரு பாதையாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாகப் போராடினர்.

மேலும், முன்னாள் அமைச்சரும், பாலத்தீன தூதுக்குழுவின் உறுப்பினருமான ஹசன் அஸ்ஃபோர், “1993 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தையின் போது, சில அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு - ஒரு அமெரிக்க திட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஹமாஸ் பிறந்தது. அது பாலத்தீன விடுதலை அமைப்புக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றது,” என செப்டம்பர் 2023 இல் பிபிசியிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இதைப் பற்றி, கத்தார் பல்கலைக் கழகத்தின் பாலத்தீன சர்வதேச உறவுகளின் பேராசிரியர் அகமது ஜமில் அஸமிடம் பேசினோம். இந்த குற்றச்சாட்டுகள் ஒரு தனிநபருக்கு மட்டும் பொருந்தக் கூடியது அல்ல என்று அவர் கூறினார். மேலும், பாலத்தீன அதிகாரத்திற்கு எதிராக இயக்கப்பட்ட சக்திகள் எந்த விதத்திலும் சிறிய அளவில் மோசமானவையாக இருந்தது இல்லை என்றும் கூறினார்: "இந்த குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாக இஸ்ரேலியர்களும் உள்ளனர். பாலத்தீனர்களிடையே உள்ள உள் பிளவுகளும் இந்த குற்றச்சாட்டுகளை தோற்றுவிப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.”

முபாரக்கின் பழைய அறிக்கைகளை குறிப்பிட்டு, அஸம் பிபிசியிடம் பேசியபோது, "எகிப்திய ஆட்சியின் பேச்சு அதன் நலன்களுக்கு ஏற்ப மாறியது. ஒருவேளை இந்த குற்றச்சாட்டுகள் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் விரோதப் பின்னணியில் அல்லது ஹமாஸுடனான பதற்றத்தின் போது ஏற்பட்டிருக்கலாம். அதேவேளையில், ஹோஸ்னி முபாரக்கும் அவரது உளவுத்துறை இயக்குநரான உமர் சுலைமானும் வெவ்வேறு காலகட்டங்களில் ஹமாஸுடன் மிகவும் நேர்மறையான உறவைக் கொண்டிருந்தனர். காஸா பகுதிக்குள் ஆயுதங்கள் நுழைவதை எளிதாக்கும் அளவிற்கு அது இருந்தது," என்றார்.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1967-ல் டேவிட் பென்-குரியன் (இஸ்ரேலின் நிறுவனர்களில் ஒருவர்) மற்றும் ஐசக் ராபின் (இஸ்ரேலிய ராணுவத்தின் தலைவர்) ஆகியோர் ஜெருசலேமின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள டோம் ஆஃப் தி ராக் முன் ஒரு ராணுவக் குழுவை வழிநடத்திய போது எடுத்த படம்.

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான "தடை செய்யப்பட்ட உறவு" பற்றிய குற்றச்சாட்டுகள் 1967 போருக்குப் பிறகு, முஸ்லீம் சகோதரத்துவம் பாலத்தீன பிரதேசங்களில் "மசூதி கட்டம்" என்று அழைக்கப்படுவதைத் தொடங்கிய கட்டங்களில் கட்டமைக்கப்பட்டது என்று கூறலாம்.

சில மதிப்பீடுகளின்படி, 1975 வரை நீடித்த இந்த நிலை, "மசூதிகளைக் கட்டுவது", "புதிய தலைமுறை இளைஞர்களை அணி திரட்டுவது மற்றும் சியோனிச இயக்கத்தை எதிர்கொள்ள அவர்களின் கோட்பாட்டை ஒருமுகப்படுத்தி ஆழப்படுத்துவது" என்று கல்வியாளர் காலித் ஹ்ரூப் கூறுகிறார்.

1967 போரின் விளைவாக இஸ்லாமியர்கள் கணிசமான முதலீடுகளைச் செய்ததாக ஹ்ரூப் மதிப்பிடுகிறார். தோல்வியடைந்த போருடன் மிகவும் தொடர்புடையதாக இருந்த நாசரிச தேசியவாத பேச்சுக்கு எதிராக மாற்று இஸ்லாமிய கருத்துக்கள் வெளிப்பட்டன.

தொடர்ந்து பேசிய அவர், "நிறுவனக் கட்டமைப்பின் அடுத்த கட்டம் 1970 களின் நடுப்பகுதியில் இருந்து 1980 களின் பிற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய மாணவர் குழுக்கள், கிளப்புகள், தொண்டு அமைப்புக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அப்போது நிறுவப்பட்டன. அவை புதிய இஸ்லாமிய இளைஞர் குழுக்களின் சந்திப்பு மையங்களாக மாறின," என தெளிவுபடுத்தினார்.

நியூயார்க் டைம்ஸ் 1981 இல் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் அவர் காஸாவில் அப்போதைய இஸ்ரேலிய ராணுவ ஆளுநரான யிட்சாக் செகேவுடன் பேசியதாகத் தெரிவித்தார்.

"இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சில இஸ்ரேலிய உதவிகளைப் பெறுகின்றனர்," என்று டைம்ஸிடம் செகேவ் கூறினார். "இஸ்ரேலிய அரசாங்கம் எனக்கு ஒரு தொகையைக் கொடுத்தது. ராணுவ அரசாங்கம் மசூதிகளுக்கான ஆதரவை வழங்குகிறது."

அந்தக் கட்டுரையில், இதற்கான ஒரு நியாயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம் பாலத்தீன விடுதலை அமைப்புடன் போட்டியிடுவதை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இஸ்ரேலிய பாதுகாப்புச் சேவையின் தலைவராகப் பணியாற்றிய யாகோவ் பெரி, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், "நான் 1988 முதல் 1995 வரை ஏஜென்சியின் தலைவராக இருந்தேன். ஹமாஸ் இயக்கத்தின் எழுச்சியை நான் அப்போது கண்டேன். அது ஒரு சமூக இயக்கத்தை ஒத்திருந்தது. மேலும் அது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையை செய்தது,” எனத் தெரிவித்தார்.

"பாலத்தீன விடுதலை அமைப்புக்கு மாற்றாக ஷின் பெட் எனப்படும் பாதுகாப்புச் சேவை, ஹமாஸ் அரசியல் எந்திரத்தை ஆதரிப்பதாக இஸ்ரேலில் உள்ள பலர் கருதினர். ஆனால் அது உண்மையல்ல." என்றார் அவர்.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல தலைமுறைகளை தயார் செய்து சமூகத்தை சீர்திருத்த முயற்சிப்பதற்கு முன் "ஆயுதப் போராட்டம்" என்ற அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஸ்லிம் சகோதரத்துவம் நம்பியது.

ஹமாஸ் இயக்கத்தின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் அறிக்கைகளை ஒருவர் அலசினால், அவர் இஸ்ரேலிய நிதி விவகாரத்தை ஒரு பிரச்னையாகப் பார்த்ததாகத் தெரியவில்லை.

இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக சம்பளம் வழங்கியதை யாசின் உறுதிப்படுத்தினார். மேலும், "வேலை செய்ய ஒப்புக்கொண்ட ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்கத் தொடங்கினர்," என்றார்.

காஸா ஆக்கிரமிப்பிற்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்யும் நோக்கில் இஸ்ரேல் சம்பளம் வழங்கி வருவதாக யாசின் மேலும் தெரிவித்தார்.

ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ட்ரூமன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் ரோனி ஷேக்ட், பிபிசிக்கு அளித்த பேட்டியின் போது, ​​மத சமூக இயக்கங்களுடன் இஸ்ரேலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சகோதரத்துவம் அந்த நேரத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் கூறினார்.

1970 களில் பாதுகாப்புச் சேவை அதிகாரியாக இருந்த ஷேக்ட், இஸ்ரேல் ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு நிதியளிக்கவில்லை என்றும், அதன் பங்களிப்புகள் உரிமம் வழங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்டவை என்றும் கூறினார்.

முன்னாள் உளவுத்துறை அதிகாரியின் பேச்சு அகமது அஸ்மின் பேச்சுடன் ஒத்துப்போகிறது.

இஸ்லாமிய இயக்கம் இஸ்ரேலை எதிர்கொள்ள விரும்பவில்லை - "ஆயுதப் போராட்டம்" என்ற அணுகுமுறையை ஏற்காத இயக்கங்களின் இருப்பை ஊக்குவித்தது - ஒரு "விருப்பமற்ற" சூழ்நிலையை ஏற்படுத்தியது என்று இருவரும் நம்புகிறார்கள்.

இஸ்ரேல் தனது கவனத்தை இஸ்லாமியர்களிடமிருந்து திருப்பியது. ஆனால் இது சகோதரத்துவத்தை ஆதரித்தது என்று அவர்கள் நம்பவில்லை.

இஸ்லாமிய சமூகத்துடனான இஸ்ரேலிய அரசாங்கத்தின் உறவின் தன்மை மற்றும் "இஸ்ரேலின் நிதியுதவி அல்லது இஸ்லாமிய மசூதிகளை நிர்மாணிப்பதற்கான அனுமதி" பற்றிய கேள்விகளின் பின்னணியில், 1992 இல் பிரிட்டிஷ் எழுத்தாளர் மைக்கேல் டெம்பர் ஒரு புத்தகத்தை புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில், 1967ல் இஸ்ரேலிய ராணுவ கவர்னர் எடுத்த முதல் நடவடிக்கைகளில் ஒன்று, காஸா பகுதியில் மத விவகாரங்களுக்கு இஸ்ரேலிய அதிகாரியை பொறுப்பாளராக நியமிப்பது என்றும், ராணுவ அரசை இஸ்லாமிய இயக்கம் மற்றும் பிரிவுகளுடன் இணைப்பதே அவரது வேலை என்றும் கூறுகிறார்.

70களின் பிற்பகுதியிலும் 80களின் நடுப்பகுதியிலும் பாலத்தீன விடுதலை அமைப்பின் முன் சமநிலையைக் கண்டறிவதற்கான வழிமுறையாக இஸ்ரேல் இந்த மசூதிகளைக் கட்ட அனுமதித்ததாக பிரிட்டிஷ் எழுத்தாளர் தெரிவித்தாலும், மசூதிகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு இடையே நிதி சுதந்திர ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைப் பற்றி அவர் பேசவில்லை.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1970 களில் இஸ்ரேல் வளர்ந்து வரும் இஸ்லாமிய இயக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றது.

காஸாவிற்குள் இஸ்லாமிய இயக்கத்தின் வளர்ச்சியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பயன்படுத்திய அணுகுமுறையில் இஸ்ரேல் உடன்படவில்லை.

இஸ்ரேலில் "ஹமாஸை ஆதரிப்பதற்கும் உருவாக்குவதற்கும் வருத்தம்" தெரிவிக்கும் முன்னாள் அதிகாரிகள் இருக்கும்போது, ​​காஸாவில் அந்த நேரத்தில் ராணுவ உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஷாலோம் ஹராரியின் சாட்சியங்களும் உள்ளன.

“இஸ்ரேல் ஒருபோதும் ஹமாஸுக்கு நிதியளிக்கவில்லை. இஸ்ரேல் ஒருபோதும் ஹமாஸுக்கு ஆயுதம் வழங்கவில்லை. "இஸ்லாமியர்களைப் பற்றிய எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன, ஆனால் அதற்குக் காரணம் அலட்சியமே தவிர, அவர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அல்ல" என்று அவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார் .

இந்த சூழலில், அஹ்மத் யாசின் கூறுகையில், “இஸ்ரேல் இஸ்லாமிய நிறுவனங்களை கண்காணித்து வருகிறது. அது மற்ற நிறுவனங்களை கண்காணிக்கிறது என்பதுடன் சமநிலையை கண்டறிய முயற்சிக்கிறது," என்றார்.

ஹமாஸ் இயக்கத்தின் எழுச்சிக்கு இஸ்ரேல் பங்களிப்பதாக குற்றம் சாட்டுபவர்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முக்கிய காரணங்களில் இஸ்லாமிய சங்கம் மற்றும் இஸ்லாமிய அகாடமி நிறுவப்பட்டதும் ஒன்றாகும்.

கடந்த நூற்றாண்டின் அந்த நிலை இஸ்ரேலிய சட்டத்தின் குடையின் கீழ் நடந்ததாக சகோதரத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஹமாஸ் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவர் அஹ்மத் யாசின் அந்தக் காலத்தைக் குறிப்பிட்டார்: “நாங்கள் ஆக்கிரமிப்புடன் மோதலில் ஈடுபட முடியாது. அப்போது தான் இஸ்லாமிய நிறுவனங்கள் பற்றிய யோசனை எழுந்தது. 1976 இல் இஸ்லாமிய சங்கம் ஒரு மசூதியில் ஒரு மண்டபமாக இருந்தது என்பதுடன் முக்கியமாக விளையாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.”

1990 ஆம் ஆண்டு அவர்களின் புத்தகமான “இன்டிஃபதா” வில் இஸ்ரேலிய எழுத்தாளர்களான எஹுட் யாரி மற்றும் ஜீவ் ஷிஃப் ஆகியோர், “இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் இஸ்லாமிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. அது பின்னர் முதல் இன்டிஃபதாவின் தொடக்கத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்ரேல் அவர்களை உள்ளூர் சமூகங்களில் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் நிலைகளை ஏற்க அனுமதித்தது. மேலும் அனைத்து வகையான நிறுவனங்களையும் நிறுவ அனுமதித்தது," என்று குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1992-ல்முஸ்லீம் சகோதரத்துவம் நீண்ட சவால்களை எதிர்கொண்ட பின்னர் ஹமாஸை உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது,

இரண்டு இஸ்ரேலிய எழுத்தாளர்களும், " பாலத்தீன விடுதலை அமைப்பின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் அதேவேளையில், இஸ்லாமியர்கள் மீது கட்டுப்பாட்டை செலுத்தி அவர்களின் எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று இஸ்ரேல் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டது. இஸ்ரேல் பாடம் கற்றுக் கொண்டது. ஆனால் அது மிகவும் தாமதமாக," எனக்குறிப்பிட்டுள்ளனர்.

ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் கோஷே கூறுகிறார்: “பிஎல்ஓவின் மத சார்பற்ற போக்கையும் சகோதரத்துவத்தின் மதப் போக்கையும் சமப்படுத்த இஸ்லாமிய அகாடமிக்கு உரிமம் வழங்குவது இஸ்ரேல் நம்புவதைப் போல் சகோதரத்துவத்தின் அல்லது ஷேக் யாசினின் தவறு அல்ல. சியோனிஸ்டுகள் தங்கள் மதிப்பீடுகளில் தவறு செய்தால், முடிவு அவர்களின் தலையில் தான் விழும்.

சில அறிஞர்கள் இஸ்ரேலிய அதிகாரிகள் இஸ்லாமிய இயக்கத்தை நிறுவனங்களை நிறுவ அனுமதித்தது மட்டுமல்லாமல், மற்ற தேசிய பிரிவுகளுக்கு அனைத்து வகையான நிறுவனங்களையும் நிறுவ அனுமதித்தனர் என்று குறிப்பிடுகின்றனர். கிளப்புகள், சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பத்திரிகை அலுவலகங்கள் போன்றவை அதில் அடங்கும்.

1988 இல் வெளியிடப்பட்ட "சாரிட்டபிள் சொசைட்டீஸ் இன் த வெஸ்ட் பேங்க் அண்ட் காஸா ஸ்ட்ரிப் " (Charitable Societies in the West Bank and Gaza Strip) என்ற புத்தகத்தின் ஆசிரியர் அப்துல்லா அல் ஹூரானி, 1987 இன் முதல் இன்டிஃபதாவிற்கு முன்னர் காஸாவில் உள்ள சங்கங்களின் எண்ணிக்கை 62 ஐ எட்டியது என்றும், அவற்றில் 4 மட்டுமே சகோதரத்துவத்துடன் தொடர்புடையவை என்றும் கூறுகிறார். அதில் இஸ்லாமிய அகாடமி மற்றும் இஸ்லாமிய சங்கம் ஆகியவை மிக முக்கியமானவை.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

சர்வதேச உறவுகள் பேராசிரியர் அஹ்மத் ஜமில் ஆஸ்ம் கூறுகையில், இஸ்ரேல் ஒரு மூலோபாய மற்றும் தந்திரோபாய தவறை செய்துவிட்டது என்றார். "அதற்கு ஒரு தெளிவான மூலோபாயம் இல்லை, இஸ்ரேல் எப்போதும் ஒரு பெரிய சக்தியாக அதன் மேன்மையை மட்டுமே நம்பியுள்ளது."

"உதாரணமாக, 1967 இல் காஸாவை ஆக்கிரமித்த பிறகு, அது நிதி உதவி அளிப்பதாகத் தெரிவித்து சமூகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தது. குறிப்பிடத்தக்க குடும்பங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் தலைமையை உயர்த்தியது மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்த அனுமதித்தது. ஆனால் முடிவெடுப்பது பாதுகாப்பு அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரம் ஆக்கிரமிப்பின் உண்மையான பரிமாணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய யதார்த்தமான புரிதலின் அடிப்படையில் அல்ல. இந்த முறைகளை ஆக்கிரமிப்பு எதிர்ப்பிற்கு மாற்றாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது."

ஹீப்ரு பல்கலைக் கழகத்தின் ட்ரூமன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் ரோனி ஷேக்ட் பிபிசியிடம் கூறுகையில், எதிர்காலத்தில் இஸ்லாமிய இயக்கம் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கைகள் கிடைத்திருந்தாலும், இஸ்ரேல் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றும், மேலும் இது குறித்து பேசும் போது குழப்பம் தான் இறுதியில் இருந்தது என்றும் தெரிவித்தார்.

காஸாவில் அப்போதைய இஸ்ரேலிய ராணுவ ஆட்சியாளர் யிட்சாக் செகேவ், "புரட்சிக்கு முன்னர் தெஹ்ரானில் இருந்த நிலைமையுடன் அவர்களுக்கு இருந்த ஒற்றுமையின் காரணமாக" பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியதாக ஷேக்ட் கூறுகிறார்.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸா சமூகம் ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்கும் ஒரு கட்டமைப்பு மாற்றம் மற்றும் சமூக இயக்கங்களைக் கண்டு வளர்ந்து வந்தது.

மேலும் பேசிய ஷேக், "ஷேக் அகமது யாசின் இஸ்ரேலை ஏமாற்றி, கம்யூனிஸ்டுகளுடன் சண்டையிடச் செய்தார். அதே நேரத்தில் மழலையர் பள்ளிகளை உருவாக்கவும் இளம் தலைமுறைகளை வளர்க்கவும் உழைத்து, இஸ்ரேலை எதிர்க்க அவர்களைத் தயார்படுத்தினார்," எனத் தெரிவித்தார்.

ஹமாஸை ஒழிப்பதன் மூலமும் பாலத்தீனர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார நலன்களை வழங்குவதன் மூலமும் ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என்று யூத அரசு இன்னும் நினைக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர் நம்புகிறார். "அது உண்மையல்ல. ஹமாஸ் ஒழிக்கப்பட்டால், அதற்குப் பிறகு புதிய தேசிய எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகும்," என்கிறார் ஷேக்ட்.

1983ல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் சகோதரத்துவத்தின் வழிமுறையில் தீவிர மாற்றம் ஏற்பட்டது. அந்த குழு ஜோர்டானில் ஒரு மாநாட்டை நடத்திய போது, ​​அதில் " மேற்குக் கரையிலும் காஸாவிலும் உள்ள அதன் பணியாளர்களை ராணுவ நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும் அவற்றைத் தொடங்கவும் கூடிய விரைவில் அனுமதிப்பது என்று முடிவு செய்தது. அவர்களுக்கு பொருத்தமான நிபந்தனைகள் இருந்ததால் இது சாத்தியம்,” என்று முதல் ஹமாஸ் செய்தித் தொடர்பாளரின் நினைவுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டிற்கு ஒரு வருடம் கழித்து, இஸ்ரேல் காஸா பகுதியில் உள்ள முதல் ராணுவ தளத்திற்கு ஒரு மரண அடியை அளித்தது என்பதுடன் அதன் உறுப்பினர்கள் அனைவரையும் பிடித்து வைத்தது.

13 ஆண்டுகளாக தங்களை வழிநடத்திய அகமது யாசினுக்கு போராளிகள் பதில் அளித்தனர். இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யும் வகையில் யாசினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 80 ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

ஆனால் யாசின் சில மாதங்கள் மட்டுமே காவலில் இருந்தார். இஸ்ரேலுக்கும் பாலத்தீன-ஜெனரல் கட்டளை அமைப்பின் விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையே ஒரு பெரிய கைதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் அவர் பயனடைந்தார். 1985 இல் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்த ஆரம்ப அடி வேதனையாக இருந்தபோதிலும் - குறிப்பாக இயக்கத்தின் "ராணுவ" பிரிவு ஆரம்பமானது. அனுபவமற்றது மற்றும் மிகவும் எளிமையான திறன்களை மட்டுமே அது கொண்டிருந்தது. அந்தக் குழுவின் சித்தாந்த அடித்தளங்கள் உறுதியாக இருந்தன என்பதுடன் அது தன்னை மறுசீரமைக்கவும் அனுமதித்தது.

சோதனை மற்றும் பிழை மூலம், இஸ்லாமியர்கள் இறுதியாக தங்கள் ராணுவப் பிரிவை ஒழுங்கமைக்க முடிந்தது.

ஆனால் அந்த நேரத்தில் கூட, இஸ்லாமிய அமைப்புகளின் மூலோபாய மாற்றத்திற்கு இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தோன்றியது. அல்லது பாலத்தீன எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் - இஸ்லாமியர்களை அபிவிருத்தி செய்ய அனுமதித்த அவர்கள் அடைந்த எல்லையை அது அறிந்திருக்கவில்லை.

இவையும், "ஆயுதப் போராட்டத்தை" நோக்கிய சகோதரத்துவத்தின் கவனமும், முதல் இன்டிஃபாடா தொடங்கிய மறுநாளான டிசம்பர் 14, 1987 அன்று ஹமாஸ் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகிரங்கமாக வெளிப்பட்டது.

ஹமாஸ் இயக்கத்தின் வரலாறு தெளிவின்மை மற்றும் ஆவணங்களின் பற்றாக்குறையால் வகைப்படுத்தப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. பாலத்தீன பிரதேசங்களில் முஸ்லிம் சகோதரத்துவம் உருவானதில் இருந்து அதைச் சூழ்ந்துள்ள பாதுகாப்பு நிலைமைகள் (அரசியல் மற்றும் சமூக சூழல்கள் தவிர) இந்த பதிவுகள் இல்லாததற்கு இயக்கத்தின் பல உறுப்பினர்கள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் ஹமாஸை "உருவாக்கியதா" என்ற கேள்விக்கு கேள்வியின் தவறான தன்மையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பதிலளிக்க முடியும். இஸ்ரேல் ஹமாஸை "உருவாக்கவில்லை". மாறாக ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு பாலத்தீன எதிர்ப்பின் மத்தியில் உருவாக்கப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவத்தின் நீண்ட சமூகப் பணியின் சிக்கலான வலைப்பின்னல், உறுதிப்படுத்தியபடி ஹமாஸின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. என ஷேக்ட் மற்றும் அஸ்ம் கூறுகின்றனர்.

எனவே, இஸ்ரேல் அதன் தொடக்கத்தின் போது குறைந்தபட்சம் இயக்கத்தை புறக்கணித்திருக்கும் அல்லது பாலத்தீனப் போராட்டத்தில் ஏற்கனவே வளர்ந்து வரும் சக்தியாக மாறியபோது அதன் இருப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் மீது விவாதத்திற்கு இடமிருக்கலாம்.

ஆனால் இஸ்லாமிய இயக்கத்தின் வரலாற்றுச் சூழல் மற்றும் அது தோன்றிய சூழ்நிலைகள் ஹமாஸை "இஸ்ரேல் தான் உருவாக்கியது" என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதை நிரூபிக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)