You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசின் முடிவால் கலங்கும் டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் - பிபிசி களச்செய்தி
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான (டான்டீ) 2,152 ஹெக்டேர் தேயிலை தோட்ட நிலங்களை மீண்டும் வனத்துறையிடமே வழங்கப்போவதாக வெளியாகியிருக்கும் அரசாணை, தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த அறிவிப்பு தொழிலாளர்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டான்டீ நிலத்தை வனத்துறைக்கு வழங்கும் முடிவை எதிர்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, பொன் ஜெயசீலன் வால்பாறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''டான்டீ நிறுவனத்தை தமிழக அரசால் நடத்த முடியவில்லையென்றால் மத்திய அரசிடம்கொடுத்து விடுங்கள்,'' என்றார்.
டான்டீ நிலங்களை திருப்பியளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்களும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் டான்டீ நிறுவனத்தைச் சுற்றி உருவாகியுள்ள சர்ச்சைகளைப் பற்றி அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
டான்டீ என்றால் என்ன?
தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் கடந்த 1968-ம் ஆண்டு நிறுவப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட டான்டீ நிறுவனத்தில் தமிழகத்தின் இதர ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வால்பாறையிலும் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, நடுவட்டம், சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், பாண்டியார் ஆகிய ஊர்களிலும் என எட்டு பிரிவுகளாக 4,431 ஹெக்டேர் பரப்பளவில் டான்டீ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மண்டலங்களில் டான்டீ நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு தேயிலை தூள்களாக சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. டான்டீ தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 3,800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, கடுமையான நிதி நெருக்கடியில் இயங்கி வரும் டான்டீ நிறுவனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள பல செலவு குறைப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. அதில் முதன்மையாக டான்டீ நிறுவனம் வசம் உள்ள 2,152 ஹெக்டேர் நிலங்களை மீண்டும் வனத்துறை வசமே ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் வால்பாறை மற்றும் நடுவட்டம் பிரிவில் இயங்கி வரும் தோட்டங்கள் முழுமையாக வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. உற்பத்தி திறன் குறைந்த, கைவிடப்பட்ட, வன விலங்கு மோதல் அதிகம் உள்ள இடங்களையே வனத்துறையிடம் ஒப்படைக்கப்போவதாக அரசு கூறுகிறது.
தொழிலாளர்கள் என்ன சொல்கின்றனர்?
டான்டீ நிறுவனத்தில் 3,800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆண் தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் உரம் தெளிப்பது களைகளை அகற்றுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலைகளில் பெரும்பாலும் பெண் தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு வருகைப் பதிவு செய்த பிறகு தேயிலை பறிக்கும் பணி தொடங்குகிறது. மதியம் ஒரு மணி நேரம் உணவு இடைவெளி. ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 கிலோ தேயிலை பறிக்க வேண்டியுள்ளது. பறிக்கப்பட்ட தேயிலைகள் மாலை எடை போடப்பட்டு தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஞாயிறு ஒரு நாள் விடுமுறை. இந்திராணி கடந்த 25 ஆண்டுகளாக பாண்டியார் பிரிவு தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்திராணியின் 350 ரூபாய் தினசரி வருமானத்தில் தான் அவரின் குடும்பம் இயங்கி வருகிறது.
''எனக்கு திருமணம் ஆனதிலிருந்தே நான் இங்கு தான் வசித்து வருகிறேன். என் கணவர் இறந்து விட்டார். 25 வருடங்களாக என்னுடைய வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வருகிறது. இதில்தான் படிப்பு செலவு, மருத்துவ செலவு என அனைத்தையும் பார்த்தாக வேண்டும். என் மகனுக்கு வேலை எதுவுமில்லை. எங்கள் வாரிசுகளுக்கு டான்டீ நிறுவனத்தில் பணி வழங்க வேண்டும். டான் டீ நிறுவனத்தை மூடினால் எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது,'' என்றார்.
டான்டீ என்ன சொல்கிறது?
விதிகளின்படி தேயிலை தோட்டங்களில் ஒரு ஹெக்டேருக்கு 1.7 தொழிலாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7,094 பணியாளர்கள் தேவைப்படுகிற இடத்தில் 3,319 பேர் மட்டுமே டான்டீ தோட்டங்களில் பணி புரிந்து வருவதாக அரசாணை கூறுகிறது. டான்டீ நிறுவனத்தில் பணியாற்ற போதிய தொழிலாளர்கள் கிடைக்காததும் இந்திய தேயிலை சந்தை தொடர்ந்து சரிந்து வருவதுமே தான் தற்போதைய இழப்புக்கு காரணம் என்கிறார் டான்டீ நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ்.
பிபிசி தமிழிடம் பேசியவர், ''தேயிலை தோட்ட தொழிலாளர்களில் அடுத்த தலைமுறையினர் படித்து வேறு வேலைகளுக்கு செல்வதால் தேயிலை தோட்டப் பணிகளை விரும்புவதில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அதே சமயம் சர்வதேச அளவிலும் இந்திய தேயிலை சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. தனியார் தேயிலை நிறுவனங்களுமே லாபகரமாக இயங்குவதில்லை. எனவே தற்போது உள்ள தொழிலாளர்களை வைத்து எவ்வாறு திறம்பட செயல்பட முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம்,'' என்றார். டான்டீயில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தரகர்கள் மூலம் ஏலம் விடப்படுகின்றன. டான்டீ நிறுவனத்தின் நிதி நெருக்கடி மற்றும் இழப்புக்கும் இதுதான் காரணம், டான்டீ நிறுவனமே நேரடியாக சந்தைப்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டை நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் மறுக்கிறார், ''தேசிய தேயிலை வாரியத்தின் விதிகள் 90% உற்பத்தியை தரகர்கள் மூலம்தான் சந்தைப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. அந்த வீதிகளை மீற முடியாது. தேயிலை வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் டான் டீ செயல்படுகிறது,'' என்றார்.
நிரந்தர பணியை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள்
பாண்டியார் தோட்டத்தில் பணிபுரியும் பரமகுரு தற்காலிக தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி வழங்கி டான்டீ தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிறார். ''எனக்கு ஐந்து வயது இருக்கும்போது இலங்கையிலிருந்து நாங்கள் இங்கு வந்தோம். 43 வருடங்களாக நான் இங்கு வேலை செய்து வருகிறேன். எங்கள் உழைப்பில்தான் டான்டீ இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால் இன்று டான்டீ நிறுவனத்தை மூடப்போவதாக கூறுவது கவலையளிக்கிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை என்கிறார்கள் ஆனால் நிரந்தர பணி வேண்டி தற்காலிக தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுத்து டான்டீயை தொடர்ந்து நடத்த வேண்டும்,'' என்றார். டான்டீ விதிகளின்படி 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் நிரந்தர பணி வழங்க வேண்டும். ஆனால் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்கு வருவதில்லை. 480 நாட்கள் பணி செய்து தேவைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது என்கிறார் வெங்கடேஷ்.
ஊட்டி - கூடலூர் சாலையில் நடுவட்டம் பிரிவு டான்டீ தேயிலை தோட்டம் இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 483 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நடுவட்டம் முழுமையாக வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. மூடப்படும் பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது வேறு பிரிவுகளுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஆனால் டான் டீ நிர்வாகத்திடமிருந்து முறையான அறிவிப்பு, தகவல் பறிமாற்றம் இல்லாதது தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடுவட்டம் பிரிவில் பணியிலிருந்த தொழிலாளர்களிடம் பேசுகையில் இதை உணர முடிந்தது. சின்கோனா என்கிற பெயரில் இயங்கி வந்த நடுவட்டம் எஸ்டேட் பின்னர் டான்டீ வசம் வந்தது. ஈஸ்வரி தன்னுடைய 13வது வயதில் வேலை செய்ய தொடங்கினார். ''என் அப்பாவின் வேட்டியை கட்டிக் கொண்டு நான் வேலை செய்ய தொடங்கினேன். சின்கோனாவாக இருந்த சமயத்திலிருந்து நாங்கள் இங்கு வேலை செய்து வருகிறோம். தற்போது திடீரென்று நடுவட்டம் பிரிவு மூடப்படுவதாக சொல்வது எங்களுக்கு வேதனையாக உள்ளது. எங்களுக்கு நடுவட்டத்தை விட்டால் வேறு ஊரோ, வேறு தொழிலோ கிடையாது. வேறு ஊர்களுக்கு மாற்றப்போவதாக சொல்கிறார்கள். இதனால் நிம்மதியில்லாத ஒரு நிலையில் நாங்கள் இருந்து வருகிறோம்,'' என்றார்.
மத்திய அரசின் செயலுக்கும் இதற்கும் வித்தியாசமில்லை
தொழிலாளர்கள் பற்றாக்குறை என டான்டீ கூறி வருகிற நிலையில் தற்காலிக தொழிலாளர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்கிறார் தோட்ட தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் சகாதேவன். பிபிசி தமிழிடம் பேசியர், ''லாபம் இல்லை என்பதால் மூடிவிடுவோம் என்று நிர்வாகம் சொல்வது ஏற்புடையது இல்ல. இதற்கும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்கும், தனியாருக்கு கொடுப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
டான்டீ என்பதே தொழிலாளர்களின் உழைப்பில்தான் உருவானது. இந்த மக்களின் ஒரே சொத்து அதுதான். நிர்வாகம் தோட்ட நிலங்களை வனத்துறைக்கே மீண்டும் வழங்க முடிவு செய்தால் அதை தொழிலாளர்களுக்கு பிரிந்து வழங்க வேண்டும். டான்டீயில் பணி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்,'' என்றார்.
ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்கிறார் வெங்கடேஷ், ''நிலங்கள் டான்டீ வசம் இருந்தாலும் சட்டப்படி அவை பாதுகாக்கப்பட்ட காடுகள் என்கிற வரையறையில்தான் வருகின்றன. அதனால் டான்டீ வசம் இல்லையென்றால் வனத்துறை வசம் இருக்கும். குத்தகையில் உள்ள நிலத்தை உள் குத்தைக்கு விட முடியாது. எனவே சட்டப்படி யாரும் இந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியாது,'' என்றார்.
முடிவை வரவேற்கும் வனத்துறை
வன உரிமைச் சட்டம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பொருந்துவதில்லை. உபயோகம் இல்லாத நிலங்களை டான்டீ வனத்துறை வசம் ஒப்படைப்பது இது முதல் முறையல்ல. கடந்த 1990ஆம் ஆண்டு டான்டீ வசம் 6,496 ஹெக்டேர் நிலம் இருந்தது. 2012 ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் படிப்படியாக 1,907 ஹெட்கேர் நிலம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது போல தான் தற்போது நில மாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டான்டீ நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கூடலூர் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''சட்டப்படி அவை வனத்துறையின் நிலங்கள் தான். வெவ்வேறு காரணங்களுக்காக முன்னர் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்தகைய நிலங்களை என்ன செய்வது என்று முறையாக வல்லுனர்களை வைத்து ஆய்வு செய்த பிறகு வனத்துறை முடிவெடுக்கும்,'' என்றார்.
கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 10 வருடங்களில் மனித - விலங்கு மோதலால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை தேயிலை தோட்டங்களில் தான் நடைபெற்றுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். பயன்பாடு இல்லாத நிலங்களை வனத்துறைக்கு மீண்டும் வழங்குவது வரவேற்கத்தக்க முடிவு தான் என்கிறார் வன ஆய்வாளர் ராமகிருஷ்ணன். பிபிசி தமிழிடம் பேசியவர், ''கூடலூர் மனித - விலங்கு மோதல் அதிகம் உள்ள பகுதி. யானைகள் தங்களுக்கான இடங்களை எடுத்துக் கொள்ளும். எனவே வனப்பரப்பை அதிகரிப்பது மோதல்களை குறைக்க உதவும். ஆனால் வனத்துறை எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளவாறு விட்டாலே போதுமானதாக இருக்கும்'' என்றார். டான்டீ தோட்டங்களை சுற்றிலும் தனியார் தேயிலை நிறுவனங்கள், தனியார் நிலங்கள் இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக தொகுப்பாக நிலங்களை வனத்துறைக்கு வழங்குவது வன விலங்கு மோதலை குறைக்க எவ்வாறு உதவும் எனத் தெரியவில்லை என்கிறார் சகாதேவன். ஓய்வு பெற்ற டான் டீ தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. டான்டீ நிர்வாகத்தை லாபகரமாக இயக்கும் வழிகளை Ernest and young நிறுவனம் மூலம் ஆய்வு செய்து வருகிறது டான்டீ நிர்வாகம். அதன் அறிக்கை கிடைத்த பிறகு கொடுக்கப்படும் பரிந்துரைகள் மூலம் டான்டீயை மீண்டும் லாபகரமாக இயக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே வேளையில் டான்டீயில் தங்களின் எதிர்காலம் பற்றிய அச்சமும் கவலையும் தொழிலாளர்களிடம் உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்