You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை கார் வெடிப்பு: அதிமுக இன்னும் அரசியல் செய்யாமல் அமைதி காப்பது ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை மிகப் பெரிய அரசியல் விவாதமாக பாஜக மாற்றிய நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இது தொடர்பாக பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. இந்த அமைதிக்கு என்ன காரணம்?
கோயம்புத்தூரில் தீபாவளி தினத்தன்று கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த விவகாரம் அடுத்த ஒரு வாரத்திற்கு மேல் மிகப் பெரிய அரசியல் சர்ச்சைகளில் ஒன்றாக உருவெடுத்தது. சிலிண்டர் வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக தமிழ்நாடு அரசும் உளவுத் துறையும் தோல்வியடைந்ததாகக் குற்றம் சாட்டியது.
கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் ஒரு தற்கொலைப் படை தாக்குதல் எனச் சித்தரித்துப் பதிவிட்டார் அக்கட்சியின் மாநிலச் செயலர் கே. அண்ணாமலை. இதற்குப் பிறகு தினமும் அறிக்கைகள், பேட்டிகள், ஊடக சந்திப்புகள் என இந்த விவகாரத்தை ஆறவிடாமல் வைத்திருந்தது அக்கட்சி.
ஆளும் கட்சியான திமுகவும் தமிழ்நாடு காவல்துறையும் பதிலளிக்கத் துவங்கிய நிலையில், ஒரு பிரதான எதிர்க்கட்சிக்கான குரலில் பேசியது பாஜக. கோவை விவகாரம் தொடர்பாக, சிபிஎம், காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்தன. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பு ஒரே ஒரு அறிக்கையோடு நிறுத்திக் கொண்டது.
சிலிண்டர் வெடிப்பு நடந்த தினத்தன்று எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது. உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவே இது பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி.
அதேபோல அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம், "டி.ஜி.பி., நேரில் ஆய்வு செய்கிறார் என்றால், இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. இது, திமுக ஆட்சியில் 1998இல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது. முதல்வர் உடனடியாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, தமிழக மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, அதிமுகவின் இரு அணிகளில் இருந்தும் கோவை சிலிண்டர் வெடிப்பு குறித்து பெரிதாக அறிக்கையோ, பேட்டிகளோ வரவில்லை.
அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அதைக் கடுமையாக விமர்சிப்பார். அரசுக்கு மிகப் பெரிய அழுத்தத்தையும் கொடுப்பார். ஆனால், இந்த முறை அந்தப் பாத்திரத்தை பா.ஜ.க. எடுத்துக் கொண்டதைப் போல இருந்தது.
"இப்போது மட்டுமல்ல, இந்த ஆட்சி வந்ததிலிருந்தே தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதைப் போல மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனும் பேசி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எழுந்த அதிகாரப் போட்டியின் காரணமாக பிரதான எதிர்க்கட்சியின் பணியை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவருமே சரியாகச் செய்யவில்லை. எப்படி கட்சியைக் கைப்பற்றுவது என்பதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள். டி.டி.வியும் சசிகலாவும்கூட இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை." என்கிறார் மூத்த பத்திரிகையாளரான துரை கருணா.
"1972ல் திமுகவை பிரதான எதிரி என அறிவித்து கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர். அந்த நிலையிலிருந்து பின்வாங்கவே இல்லை. ஜெயலலிதாவும் திமுக எதிர்ப்பைத்தான் முன்னிறுத்தி இயங்கினார். ஆனால், அவர் இறப்பிற்குப் பிறகு கட்சி எதார்த்த நிலைக்கு வந்துவிட்டது. வன்ம அரசியலைக் கைவிட்டது. ஆகவே, வலுவான திமுக எதிர்ப்பு என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது," என்கிறார் அவர்.
ஆனால், இந்த ஒரு விஷயத்தால் பிரதான எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் போய்விடாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஜி.சி. சேகர்.
"அதிமுக தற்போது பொதுவாகவே எந்தப் பிரச்னையைப் பற்றியும் பெரிதாக பேசுவது கிடையாது. வழக்குத் தொடர்வார்களோ என்ற பயம் இருக்கிறது. எடப்பாடி தரப்பு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆகிய இரண்டுமே அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், அண்ணாமலைக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இமேஜ் வந்துவிட்டது" என்கிறார் ஜி.சி. சேகர்.
அ.தி.மு.கவின் வாக்குகள் இப்போது எடப்பாடி கே. பழனிச்சாமி, சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் என பல்வேறு திசைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க. எதிர்ப்பை கையில் எடுக்க வேண்டும். ஆனால், அந்தத் துணிச்சல் அவர்களிடம் இல்லை என்கிறார் துரை கருணா.
இந்த விவகாரம் குறித்து அழுத்தமாகப் பேசினால், இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சம் காரணமா?
"இப்போது அ.தி.மு.கவிடம் இஸ்லாமிய வாக்குகள் கிடையாது. அவை முழுவதுமாகப் போய்விட்டன. ஆகவே அந்த அச்சம் காரணமல்ல" என்கிறார் துரை கருணா.
ஜி.சி. சேகரும் அதே கருத்தை முன்வைக்கிறார். "இஸ்லாமிய வாக்குகள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கணக்கெல்லாம் இவர்களிடம் இல்லை. இவர்கள் ஜெயலலிதாவின் கட்சி என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்" என்கிறார்.
கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் பா.ஜ.க. பெரிய அளவில் குரல் கொடுத்ததால், அ.தி.மு.கவின் அமைதி கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. மின் கட்டண உயர்வு குறித்து போராட்டங்களை நடத்தியது தவிர, பொதுவாக தி.மு.க. ஆட்சியில் எழும் பிரச்சனைகள் குறித்து நீடித்த போராட்டங்கள் எதையும் அ.தி.மு.க. முன்வைக்கவில்லை.
ஆகவே, பல பிரச்சனைகளில் அ.தி.மு.கவின் எதிர்ப்பு என்பது வெறும் அறிக்கையாகவே கடந்து போகிறது. இதன் காரணமாக, வெகுசில பிரச்சனைகளில் பா.ஜ.க. சற்று உரத்த குரலை எழுப்பினாலும் அது பெரும் ஊடக கவனத்தைப் பெறுகிறது.
ஆனால், இவை எல்லாவற்றையும் மறுக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன். "தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தினமும் ஒரே பிரச்சனையை பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று கிடையாது. அதற்குப் பிறகு எவ்வளவோ பிரச்சனைகள் வந்துவிட்டன. வெள்ளம், தேயிலை போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்." என்கிறார் வைகைச் செல்வன்.
இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியைப் போல பா.ஜ.க. செயல்படுவது குறித்துக் கேட்டபோது, "தாங்கள்தான் எதிர்க் கட்சி என்று சொன்னால், அப்படி ஆகிவிடுமா? அண்ணாமலை அரசியலுக்குப் புது வரவு. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இதுபோல போராட்டங்களை நடத்துகிறார். ஆனால், அ.தி.மு.க. 7 முறை ஆட்சியைப் பிடித்த இயக்கம். நாங்கள் அப்படியிருக்க வேண்டியதில்லை. ஆனால், கோவையில் அமைதி திரும்பாவிட்டால், போராட்டம் நடத்துவோம்" என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதைப் போலச் செயல்பட்டாலும், அப்படி வெளியில் சொல்வதில்லை. அ.தி.மு.க. அழித்து அந்த இடத்தில் தாங்கள் வளர வேண்டுமென நனைக்கவில்லை என்கிறார்கள் அக்கட்சித் தலைவர்கள். ஆனால், இது எவ்வளவு நாளைக்கு என்பதைப் பார்க்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்