கோவை சம்பவம்: ஆளுநர் ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் - 10 தகவல்கள்

கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக கோவையில் நிகழ்ச்சியொன்றில் இன்று பங்கேற்றப் பேசிய மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு கேள்விகளை மாநில அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பான 10 தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

1. "நம்முடைய வளர்ச்சி நம் எதிராளிகளுக்கு பிடிக்கவில்லை. அமைதியான முறையில் 'இந்தியாவின் எழுச்சி' இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர்களால் இதை எதிர் கொள்ள முடியாது. புல்வாமாவில் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கான பதிலடி கொடுக்கப்பட்டது. கல்வானில் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கான பதிலடி கொடுக்கப்பட்டது. அவர்கள் கையாளும் வழி 'தீவிரவாதம்'. தீவிரவாத செயல் திட்டங்களை தீட்டுகிறார்கள், தீவிரவாத தாக்குதல்களை நடத்துகிறார்கள். தீவிரவாதம் என்பது நேரடி யுத்தம் கிடையாது. மக்கள் மத்தியில் பயத்தை அச்சத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்த பழைய உத்திகள் எல்லாம் தற்போது எடுபடாது.

2. அரசியல் கட்சிகள் அரசியலமைப்பின் வரம்பு உட்பட்டு அரசியல் செய்வதில் தவறில்லை. ஒரு மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். அவர்கள் சார்ந்திருந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பு தடை செய்யப்பட்டவுடன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தீவிரமான சம்பவங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் அனைத்து விசாரணை அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாத சக்திகள் தனித்து செயல்படுவதில்லை. இவர்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய வலையமைப்பு இயங்குகிறது.

3. கோயம்புத்தூரை மையமாக வைத்து நீண்ட காலமாக தீவிரவாத செயல் திட்டங்கள் தீட்டப்படுவதாக அறியப்பட்டுள்ளது. இங்கே தீவிரவாத தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களும் நீண்ட காலமாக புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் இருந்தவர்கள் தான்., புதிதாக அவர்கள் கண்காணிப்பு வலையமைப்பில் வரவில்லை. பிறகு எங்கே தவறவிட்டோம்? நம்முடைய கண்காணிப்பு தோல்வி அடைந்து விட்டதா? இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு இராக், சிரியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அதனால் கோவையில் நடந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

4. கோவை சம்பவம் நடந்த சில நிமிடங்களிலே இது தீவிரவாத தாக்குதல் என்பது தெரிந்து விட்டது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதை விரைவாக விசாரித்த தமிழக காவல்துறையை பாராட்டுகிறேன்.

5. தமிழக காவல்துறை மிகவும் நவீனமானது. ஆனால் என்னுடைய கேள்வி - ஏன் சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து தான் என்.ஐ.ஏ வுக்கு ஒப்படைக்கப்பட்டது? தீவிரவாத தாக்குதலில் நேரம் என்பது முக்கியமானது. தமிழக காவல்துறை சிறப்பான பணி செய்தது. தமிழக காவல்துறை ஒரு கருவி தான். அவர்களால் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் ஏன் நான்கு நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள்? இதற்கு மேல் இதில் அதிகமாக பேச விரும்பவில்லை.

6. நான் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்தபோது தீவிரவாதம் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை சிறப்பான தகவல்களை கொடுத்து உதவியது. பிஎஃப்ஐ என்கிற தீவிரவாத அமைப்பு தொடர்பாக மிக முக்கியமான நம்பத் தகுந்த தகவல்களை தமிழக காவல்துறையினர் தான் கொடுத்தனர்.

7. விசாரணை அமைப்புகள் திறம்பட உள்ளன. அவை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தீவிரவாதத்தை மென்மையாக அணுகக் கூடாது என்பதே என்னுடைய கருத்து. தீவிரவாதம் என வரும்போது தெளிவற்ற நிலை இல்லாமல் கடினமாக செயல்படுவோம் என்பதை நம்முடைய பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறினார்.

தங்கம் தென்னரசு பதில்

8. கோவை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பதில் எந்த தாமதமும் இல்லை என்றும் விசாரணையின் துவக்கத்திலிருந்தே என்ஐஏ அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர் என்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோயம்புத்தூர் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் இறந்தவர் அடையாளம் காணப்பட்டு, அவரது வீடு சோதனையிடப்பட்டது. அங்கு நடந்த சோதனையில் கிடைத்த பொருட்களை வைத்து, அங்கு நடந்தது வெறும் சிலிண்டர் விபத்து அல்ல, அதற்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருக்கக்கூடும் என்பதை காவல்துறை உணர்ந்தது. இதையடுத்து அன்றைய தினமே ஜமீசா முபினின் கூட்டாளிகளையும் கைது செய்தது. அக்டோபர் 24ஆம் தேதி காலை தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள், மத்திய உளவுத் துறையின் அதிகாரிகள் ஆகியோர் மாநில காவல்துறையுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார்கள் என்று கூறினார்.

9. தமிழ்நாடு காவல்துறை எப்போதுமே பயங்கரவாத இயக்கம் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் வழக்கம் உண்டு. அப்படித்தான் இதிலும் செயல்பட்டது. 25ஆம் தேதியே இந்த வழக்கு UAPA சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று மாலை நடந்த ஆய்வுக் கூட்டத்தில், என்ஐஏ அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்களிடம் தமிழக காவல்துறை தெரிவித்தது. இதற்குப் பிறகு வழக்கு 26ஆம் தேதி என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் என்ஐஏ இந்த வழக்கை எடுத்துக் கொள்ளும்வரை, என்ஐஏவுக்கும் மத்திய உளவுத் துறைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன என்று தங்கம் தென்னரச் தெரிவித்தார்.

10. ஜமீசா முபின் 2019லேயே என்ஐஏவால் விசாரிக்கப்ட்டவர். அதற்குப் பிறகு, அவர் ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியது. அப்போது விசாரித்த என்ஐஏ அதிகாரிக்குத்தான் தெரியும். இந்த விவகாரத்தில் எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணைகள் அனைத்திலும் என்ஐஏவும் உடன் இருந்ததாகவும் ஆளுநர் ஏன் இம்மாதிரி கூறுகிறார் என தெரியவில்லை என்று தங்கம் தென்னரசு கூறினார்.

தாமதமான வழக்குகள் எவை?

இதைத்தொடர்ந்து தாமதமாக ஒப்படைக்கப்பட்ட என்ஐஏ வழக்குகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார். அதன் விவரம்:

"2021 டிசம்பர் 23ஆம் தேதி தில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு வெடி விபத்து நடந்தது. இதில் என்ஐஏ அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதிதான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. அதேபோல, மேற்கு வங்கத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 25ஆம் தேதிதான் என்ஐஏ முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. மேற்கு வங்கத்தின் நைஹாத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. பிப்ரவரி 8ஆம் தேதிதான் இந்த வழக்கில் என்ஐஏ முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. ஜனவரி 30ஆம் தேதி ஷில்லாங்கில் ஒரு சிறிய குண்டுவெடிப்பு நடந்தது. அதில் மார்ச் மாதம் 4ஆம் தேதிதான் என்ஐஏ முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. மார்ச் மாதம் 18ஆம் தேதி டோட்லாங்கில் ஒரு ஒர்க் ஷாப்பில் நடந்த குண்டு வெடிப்பு, ஜூலை மாதத்தில்தான் என்ஐஏவுக்குச் சென்றது. ஆனால், இந்த விவகாரத்தில் என்ஐஏ முழுமையாக புலனாய்வில் பங்கேற்றுள்ளது." என்றார் தங்கம் தென்னரசு.

என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு

இதற்கிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்திருக்கிறது. வெடிமருந்துகள் தடுப்புச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் என்ஐஏ பதிவு செய்துள்ள இந்த வழக்கு, புகார்தாரராக சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் பூசாரி எஸ். சுந்தரேசன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக என்ஐஏ சென்னை கிளை ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக காவல்துறையிடம் இருந்து இந்த வழக்கை அவர் ஏற்றுக்கொள்வார் என்று என்ஐஏ கண்காணிப்பாளர் டி.ஸ்ரீஜித் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகளின் தீவிரம் கருதி என்ஐஏ சட்டத்தின் விதிகளுக்கு உள்பட்டு இந்த வழக்கை விசாரிக்க இந்திய உள்துறை அக்டோபர் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

இந்த சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பொட்டாசியம் நைட்ரேட், கருந்தூள், தீப்பட்டி, 2 மீட்டர் நீளமுள்ள வெடி மருந்து திரி, நைட்ரோ கிளிசரின், சிவப்பு பாஸ்பரஸ், பென்டேரித்ரிடால் டெட்ரா நைட்ரேட், அலுமினிய தூள், தூய்மையான ஆக்சிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர், சர்ஜிக்கல் ஸ்டெரைல், கண்ணாடி மார்பிள், 9 வோல்ட் பேட்டரி, 9 வோல்ட் கிளிப், வயர், இரும்பு ஆணிகள், ஸ்விட்டச், இண்டேன் எரிவாயு சிலிண்டர், எரிவாயு ரெகுலேட்டர், இன்சுலேசன் டேப், பேக்கிங் டேப், கையுறைகள், நோட்டு புத்தகங்கள், இஸ்லாமியவாத சித்தந்தங்கள் மற்றும் ஜிஹாத் தகவல்கள் இடம்பெற்ற புத்தகங்கள் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது.

பாஜகவின் பந்த் அறிவிப்பு - கண்டித்த உயர் நீதிமன்றம்

முன்னதாக, கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி பி ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கடந்த 26ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கோவை சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், கோவையை காக்கவும் வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால், இவ்வாறு பந்த் நடத்துவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளதால், அதை மேற்கோள்காட்டி வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவை செய்தியாளர் சந்திப்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ள பந்த் அறிவிப்பை மாநிலத் தலைமை ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, சட்டத்துக்கு புறம்பாக யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடத்தினால், சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: