கோவை கார் வெடிப்பு சம்பவம் - என்ஐஏவின் அதிகாரங்கள் என்ன?

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ) ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த சம்பவத்தை விசாரிக்கும்படி என்ஐஏவுக்கு இந்திய உள்துறை அக்டோபர் 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ஒரு வழக்கை என்ஐஏவிடம் விசாரணைக்காக ஒப்படைப்பது என்றால் என்ன? என்ஐஏவின் அதிகாரங்கள் என்னென்ன?

கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய 5 சந்தேக நபர்களை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி ஆறாவது நபராக அப்சர் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) பயன்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, கைதானவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174 மற்றும் வெடி மருந்துகள் சட்டப்பிரிவு 3ஏ ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஐவர் மீதும் குற்றச்சதிக்கான 120பி, இரு வேறு குழுக்கள் இடையே பகைமையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு 153ஏ ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம், வெடிமருந்துகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று (அக்.26) காலை கோவையில் என்ஐஏ விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த வழக்கின் விசாரணையை என்ஐஏவுக்கு மாற்ற உரிய பரிந்துரைகளை செய்திட அக்கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

என்ஐஏ என்றால் என்ன?

என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை 2008ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. தீவிரவாதம், நாடுகளுக்கு இடையிலான கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது, தீவிரவாத சம்பவங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக இந்த முகமை உருவாக்கப்பட்டது. இந்த முகமை உருவாக்கப்படும்வரை தீவிரவாதம் தொடர்பான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வந்தது.

இந்த முகமை தொடங்கியது முதல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, 473 வழக்குகள் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இந்திய உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

என்.ஐ.ஏ.வுக்கென்று தனித்த முறைமையுடன் கூடிய விசாரணை வழிகாட்டல்கள், வழக்காடு மன்றங்கள், வழக்கறிஞர்கள் ஆகியவற்றை தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008 வரையறுக்கிறது.

எப்போது என்ஐஏ விசாரிக்கலாம்?

"தேச பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு என்று அரசு கருதும்பட்சத்தில் என்ஐஏ ஒரு வழக்கை தாமாகவே விசாரிக்கலாம். இதற்காக மாநில அரசிடம் இருந்து அனுமதி ஏதும் தேவையில்லை என்கிறார் ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கார்த்திகேயன்.

மேலும் அவர், "ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான விசாரணைகள், சதித்திட்டம் அல்லது தேச பாதுகாப்பு தொடர்பான புலனாய்வுகளில் என்ஐஏ ஈடுபடுத்தப்படலாம்.

அதேபோல, ஒரு வழக்கை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றோ அல்லது தீவிரவாத தொடர்பு கொண்டதாகவோ இந்திய அரசு கருதும்பட்சத்தில், அந்த வழக்கை என்.ஐ.ஏ. மூலம் விசாரிக்கலாம்.

இதற்காக மாநில அரசிடம் இருந்து எந்த அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை. பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் வழக்கை ஒப்படைக்க மாநில காவல்துறை தயாராகவே இருக்கும். அத்துடன், இந்த விசாரணைக்கு மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

"சில சமயங்களில் நீதிமன்ற வழிகாட்டுதலிபடியும் ஒரு வழக்கை, என்ஐஏ விசாரிக்கலாம் என்கிறார் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன்.

என்ஐஏவுக்கு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனியாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது. அதன் தலைமை அதிகாரியாக டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் இரண்டு எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளும் உள்ளனர். ஆனால்,தமிழ்நாடு முழுவதும் தன்னிச்சையாக விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த என்ஐஏவுக்கு தமிழ்நாட்டில் சட்ட அனுமதி இல்லாத நிலை இருந்தது.

இதன் காரணமாக எந்தவொரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இருந்தாலும், அதற்கு முன்பாக டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதன் பேரிலேயே விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளை என்ஐஏ மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 17ஆம் தேதிதான் தமிழ்நாடு முழுவதும் ஒரு காவல் நிலையம் போல என்ஐஏ செயல்படுவதற்கான அனுமதியை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி என்ஐஏ 14 வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த முகமைக்கு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் சாலையில் புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அதுவரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்தபடி இந்த முகமையின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: