மோதி பேச்சு முதல் தபால் வாக்கு வரை - நாடாளுமன்ற தேர்தல் சர்ச்சைகளும் எதிர்பாராத நிகழ்வுகளும்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் 16-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவு, ஏப்ரல் 19-ஆம் தேதி துவங்கி, ஜூன் 1-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்ம். காலை 9 மணியளவில் முதற்கட்ட நிலவரம் வெளியாகும்.

இந்தத் தேர்தலில் வேலை வாய்ப்பின்மை, மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை முக்கியப் பிரச்னைகளாக நாடு தழுவிய அளவில் முன்வைத்தன எதிர்க்கட்சிகள். பிரதமர் நரேந்திர மோதியைப் பொறுத்தவரை, தான் பேசும் மாநிலங்களை பொருத்து பிரச்னைகளை அல்லது அந்த மாநிலங்களில் எடுபடக் கூடிய விஷயங்களைப் பேசினார்.

மோதியின் பேச்சு முதல் தபால் வாக்குகளை எப்போது எண்ணுவது என்பது வரை இந்த தேர்தலில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்கவில்லை.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘காங்கிரஸ் பெண்களின் தங்கத்தை எடுத்துக்கொள்ளும்’

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான உடனேயே அதனை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. செய்த பிரசாரம் பல தருணங்களில் சர்ச்சைக்குள்ளானது.

இதில் மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது பிரதமர் மோதியின் பேச்சு ஒன்றுதான். முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்த பிறகு ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ‘தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய’ காங்கிரஸ் விரும்புவதாக கூறினார்.

“பழங்குடியின குடும்பங்களில் இருக்கும் வெள்ளி கணக்கிடப்படும். சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம், சொத்துக்கள் ஆகியவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இதில் உங்களுக்குச் சம்மதமா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? முன்பு, அவர்களது அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினர். அதாவது சொத்துகளை வசூலித்த பிறகு, அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்? அதிக குழந்தை பெற்றவர்களுக்கு. நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா?”

“தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப் போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. சகோதர, சகோதரிகளே, இந்த 'அர்பன் நக்சல்' எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்," என்றார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியதோடு, தங்கள் தேர்தல் அறிக்கையில் அப்படி குறிப்பிட்டிருப்பதைக் காட்டும்படி சொன்னது.

‘முஸ்லீம் லீக்கின் அறிக்கையா?’

பிரதமர் மட்டுமல்லாமல், பா.ஜ.க-வின் மற்ற தலைவர்களும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்து பேசிய பேச்சுகள் சர்ச்சைக்குள்ளாயின. காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “தனிச்சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது,” என்றார். அதேபோல, பா.ஜ.க-வின் தலைவர் ஜேபி நட்டா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ​​“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்த போது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார்.

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்" என்றார்.

கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய மற்றொரு விவகாரம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் கிடைத்த இடைக்கால ஜாமீன். தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிணைக்காக முயற்சி செய்த நிலையில், மூன்று கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில் மே 10-ஆம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்குப் பிறகு வந்த நான்கு கட்டத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு எதிராகத் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி மீண்டும் அவர் சரணடைந்தார்.

ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவி

ஒடிஷாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, அங்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமாக உள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. கார்த்திகேய பாண்டியனைக் குறிவைப்பதற்காக, தமிழர்களை பா.ஜ.க. அவமரியாதை செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. ஒடிஷா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "ஜெகந்நாதர் ஆலய கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த ஒடிஷா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இதை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?" என்றார்.

இது தமிழர்களை அவமதிப்பதாக திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஒடிஷா தொடர்பாக பா.ஜ.க. வெளியிட்ட விளம்பரங்களும் தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் மீது விமர்சனங்கள்

இந்த தேர்தல் காலம் நெடுக மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானது இந்தியத் தேர்தல் ஆணையம்தான். பா.ஜ.க. மீது பல்வேறு புகார்களை எதிர்க்கட்சிகள் கொடுத்த போதும் அவை தொடர்பாக போதுமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

முக்கியமான தருணங்களில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதைக் குறிப்பிடும் வகையில், ‘Laapataa Gentlemen’ என்று குறிப்பிட்டு மீம்கள் வெளியாயின. சமீபத்தில் வெளியான ‘Laapataa Ladies’ திரைப்படத்தில் திருமணமான பெண்கள் காணாமல் போவதை வைத்து இந்த மீம்கள் உருவாக்கப்பட்டிருந்தன. திங்கட்கிழமையன்று இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், நாங்கள் காணாமல் போகவில்லை, இங்கேதான் இருக்கிறோம் என்று கூறும் அளவுக்கு நிலைமை சென்றது.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராகுல் vs பினராயி விஜயன்

கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருந்த போதும் பினராயி விஜயனை விசாரணை அமைப்புகள் ஏன் இன்னும் விட்டுவைத்துள்ளன? எனக் கேள்வியெழுப்பினார்.

கேரளாவை ஆளும் இடது முன்னணியின் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல் காந்தியை இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏவான பி.வி. அன்வர் கண்டித்ததோடு, "ராகுல் காந்தி உண்மையில் நேரு-காந்தி குடும்பத்தில் பிறந்தவரா என மரபணு சோதனை செய்ய வேண்டும்," என்று கூறும் அளவுக்கு விவகாரம் சென்றது.

பரம்பரை சொத்து வரி, தோலின் நிறம் பற்றி பிட்ரோடா பேச்சு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளிக்கும்போது "உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம். நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போலவும் மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும் வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும் தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டது இனவெறிப் பேச்சாக பார்க்கப்பட்டது.

அதேபோல, பரம்பரை சொத்துக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படுவது குறித்து அவர் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)