You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இணையம் வழியே பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் - பிபிசி கண்டறிந்த உண்மைகள்
- எழுதியவர், டோனி ஸ்மித், அங்கஸ் க்ராஃபோர்ட்
- பதவி, பிபிசி செய்திகள்
'பாலியல் ரீதியாக மிரட்டிப் பணம் பறிப்பது எப்படி? (Sextortion)' என்பது குறித்து வழிகாட்டும் கையேடுகளை குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் விற்பனை செய்கிறார்கள் என்பதை பிபிசி நியூஸ் கண்டறிந்துள்ளது.
(உங்களின் ஆபாச படம் என்னிடம் உள்ளது. நான் சொல்வதை நீங்கள் செய்யாவிட்டால் அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி அதற்கு ஈடாக பாலியல் உறவு அல்லது பணம் கேட்பதுதான் செக்ஸ்டார்ஷன் என்று அறியப்படுகிறது.)
ஆன்லைனில் இளம் பெண்களாக எப்படிக் காட்டிக் கொள்வது, ஒருவரை ஏமாற்றி அவரது ஆபாசப் படங்களை வாங்குவது எப்படி, பின்னர் அதை வைத்து அவர்களை மிரட்டுவது எப்படி என்பதை இந்த வழிகாட்டும் கையேடுகள் கற்றுக்கொடுக்கின்றன.
லண்டன் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒலமைட் ஷானு (Olamide Shanu) என்பவர் ஆஜரானார். பெரியவர்கள் மற்றும் பதின்பருவத்தினரை ஆன்லைனில் மிரட்டி 2 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 21.19 கோடி) சம்பாதித்ததாக நம்பப்படும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர் இவர் என்று சொல்லப்படுகிறது.
கடந்த மாதம் நேஷனல் க்ரைம் ஏஜென்சி, பிரிட்டன் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு செக்ஸ்டார்ஷன் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டது.
செக்ஸ்டார்ஷனால் பாதிக்கப்படும் பதின்பருவ பிள்ளைகள்
மேற்கு ஆப்பிரிக்காவில் முக்கியமாக நைஜீரியாவை தளமாகக் கொண்டு இயங்கம் கும்பல்களால் செக்ஸ்டார்ஷனுக்கு பலியாகும் பதின்பருவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2022 அக்டோபரில், பிரிட்டனில், செக்ஸ்டார்ஷனால் பாதிக்கப்பட்ட இரண்டு பதின்பருவத்தினர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இது பிள்ளைகளுக்கு ஒரு ‘மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என்று விவரிக்கிறார், உளவுத்துறை நிபுணரும், செக்ஸ்டார்ஷன் குறித்த வல்லுநருமான பால் ரஃபேல்.
"யாரும் இதுவரை பயன்படுத்திக் கொள்ளாத இந்தச் சந்தை மூலம் மிக விரைவாகப் பணக்காரர்களாக முடியும் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் இணைய மோசடி செய்பவர்கள் கண்டுபிடித்துள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
"பதின்பருவத்தினர்தான் அவர்களின் இலக்கு" என்று அவர் கூறினார்.
”பல வருடங்களாக பெரியவர்கள் செக்ஸ்டார்ஷனுக்கு இலக்காகி வந்தனர். இப்போது பதின்பருவ சிறுவர்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்,” என்று ரஃபேல் குறிப்பிட்டார்.
"அவர்கள், சமூக ஊடகங்கள் மூலமாக உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் இளைஞர் விளையாட்டு அணிகளைத் தேடி, அலசிப் பார்த்து, தங்கள் இலக்கைத் தேர்வு செய்கின்றனர். பின்னர் அவர்களை இணையத்தில் பின்தொடர்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
குற்றங்களை எவ்வாறு செய்வது என்பது குறித்த வழிகாட்டும் கையேடுகள் வெளிப்படையாக விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதை ஆன்லைனில் உள்ள வீடியோக்கள் முலம் பிபிசி நியூஸ் கண்டறிந்துள்ளது.
கண்டுபிடிக்க முடியாத தொலைபேசி எண்ணை எவ்வாறு பெறுவது, போலியான சமூக ஊடக சுயவிவரங்களை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவது எப்படி என்பதை அவை விரிவாக விளக்குகின்றன.
சிலர் தாங்கள் பிளாக்மெயில் செய்த நபர்களின் எண்ணிக்கையைப் பற்றிப் பெருமிதம் கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், ‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்’ தனக்குத் தவறாமல் பணம் கொடுத்ததாக ஒரு குற்றவாளி எழுதியுள்ளார்.
குற்றவாளிகள் கையாளும் உத்தி
லூசியின் 14 வயது மகன், இந்த ஆண்டு செக்ஸ்டோர்ஷன் கும்பலால் பாதிக்கப்பட்டார். எந்தப் புகைப்படத்தையும் அவர் அனுப்பவில்லை என்றாலும், பிளாக்மெயில் செய்தவர்கள் ஒரு ஆட்சேபனைக்குரிய புகைப்படத்தை உருவாக்கி அதை வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
"எங்களைப் புறக்கணிக்கலாம் என நினைக்காதீர்கள். 24 மணிநேரத்தில் நீங்கள் எங்களுக்குப் பணம் அனுப்பவில்லை என்றால் உங்கள் எல்லா தொடர்புகளுக்கும் இந்தப் படத்தை அனுப்புவோம் என்ற மிரட்டல் செய்தி வந்தது,” என்று லூசி தெரிவித்தார்.
"என் மகன் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவன் உடல் நடுங்க ஆரம்பித்தது,” என்றார் அவர்.
லூசியின் மகன் பிளாக்மெயில் செய்பவர்களுக்கு ஏற்கெனவே 100 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 10,000 ரூபாய்) கொடுத்திருந்தார். பின்னர், பெற்றோரின் உதவியுடன் தனது கணக்கை முடக்கிவிட்டார், போனையும் மாற்றிவிட்டார். அதன் பிறகு, மோசடி கும்பல் அவரை மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.
"அவன் அன்று காலையில் வீட்டில் இல்லாமல் இருந்திருந்தால், நானும் சமையலறையில் இருக்கவில்லையென்றால், அவன் என்னிடம் பேசாமல் இருந்திருப்பான். அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க இயலவில்லை" என்று லூசி கூறினார்.
வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரான ஷானுவை நாடு கடத்தி அனுப்புமாறு அமெரிக்க அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர். 33 வயதான ஷானு, மிரட்டிப் பணம் பறித்தல், பண மோசடி செய்தல் மற்றும் சைபர் ஸ்டாக்கிங் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவின் ஐடஹோ (Idaho) மாகாணத்தில் தேடப்பட்டு வருகிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பாதிக்கப்பட்ட 4 பேருடன் தொடர்புடையது. அவர்களில் ஒருவர் பதின்பருவ நபர். மூன்று வருட காலகட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
சமூக ஊடக நிறுவனங்கள் கூறுவது என்ன?
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செக்ஸ்டார்ஷனை நிறுத்தப் போதுமான அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்கிறார் ரஃபேல்.
"கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தக் குற்றம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் தளங்களில் அதிகரித்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தளங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
"இதைச் சமாளிப்பதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் முடுக்கிவிட்டுள்ளோம். குறிப்பாக பாலியல் உள்ளடக்கத்தைக் கசியவிடும் அச்சுறுத்தல்கள் பற்றிப் புகார் அளிக்கும் வசதி மற்றும் செயலியில் பதின்பருவ வயதினருக்கு இது பற்றிய விழிப்புணர்வு தரும் பாடங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்,” என்று ஸ்நாப்சாட் நிர்வாகம் பிபிசியிடம் கூறியது.
"ஒரு பிரத்யேக புகார் அளிக்கும் ஆப்ஷன் உள்ளது. எனவே தனிப்பட்ட படங்களைப் பகிரப் போவதாக அச்சுறுத்தும் எவர் பற்றியும் புகாரளிக்க முடியும்" என்று இன்ஸ்டாகிராம் உரிமையாளரான மெட்டா நிறுவனம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
"பிரிட்டனில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கும் போதே, அவை தனிப்பட்ட கணக்குகளாக தாமாகவே வகைப்படுத்தப்பட்டு விடும். இதன் மூலம் அவர்கள் யாரைப் பின்தொடர்கிறார்கள், அவர்களை யார்யார் பின்தொடர்கிறார்கள் என்பன போன்ற விவரங்கள் மறைக்கப்பட்டுவிடும்,” என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
"டீன் ஏஜ் வயதினருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டவர்கள் எளிதாகச் செயல்பட முடியாத வகையில் எங்கள் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செக்ஸ்டார்ஷனை ஊக்குவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அல்லது நடத்தையையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்," என்று டிக்டோக் நிர்வாகம் கூறியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)