டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை, புதிய விதிகள், இந்தியா மோதும் ஆட்டங்கள் முழு விவரம்

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி மராத்தி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. 20 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த தொடர் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறும்.

முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை தோற்கடித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 194 ரன்களைக் குவித்தது. அதனை துரத்திய அமெரிக்க அணி, 18-வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்களைக் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்தப் போட்டியைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. போட்டிகள் எப்போது, எங்கு நடக்கின்றன, இந்தியா எங்கு விளையாடும் என்பன போன்ற தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

டி20 உலகக்கோப்பையின் வழிமுறை மற்றும் குழுக்கள்

இம்முறை டி20 போட்டிகள் மீண்டும் பழைய வழிமுறையைப் பின்பற்றி நடக்கிறது. அதன்படி மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது, குழு நிலை (Group stage), சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் (அரையிறுதி மற்றும் இறுதி) (Knockout) ஆகிய மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது.

இருபது அணிகளும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ரவுண்ட் ராபின் ஃபார்மட்டில் (Round Robin format) ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவார்கள். நான்கு குழுக்களில் இருந்து இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும்.

ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது.

குரூப் A: கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குரூப் B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து

குரூப் C: ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகாண்டா, மேற்கிந்திய தீவுகள்

குரூப் D: வங்கதேசம் நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை

உலகக்கோப்பை போட்டிகளை எப்போது, எங்கே, எப்படி பார்ப்பது?

ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையின் முதல் கட்டமாக, குரூப் ஸ்டேஜ், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும்.

இரண்டாம் கட்டமாக, 'சூப்பர் 8’ போட்டி ஜூன் 19 முதல் 25 வரை நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் 27ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் நடப்பதால், சில போட்டிகள் உள்ளூர் நேரப்படி காலையிலும் சில போட்டிகள் மாலையிலும் நடைபெறும். எனவே அந்தந்த அணிகளின் ரசிகர்கள் போட்டிகளைப் பார்த்து ரசிக்க முடியும்.

இந்தியாவின் முதல் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கும் மற்ற மூன்று போட்டிகளும் இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் இரண்டாவது போட்டியில் விளையாடும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஊடக உரிமையை 'டிஸ்னி ஸ்டார்’ (Disney Star) பெற்றுள்ளது, மேலும் பிபிசி இணையதளத்தில் அவ்வப்போது போட்டிகளைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படும்.

போட்டிகளுக்கான கால அட்டவணை

ஐசிசி ஆடவர் டி20யில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியின் அட்டவணை பின்வருமாறு.

இந்திய அணி பங்குபெறும் போட்டிகள்

  • ஜூன் 5, புதன், இரவு 7:30 மணி: இந்தியா vs அயர்லாந்து, இடம் - நியூயார்க்
  • ஜூன் 9, ஞாயிறு, இரவு 8:00 மணி: இந்தியா vs பாகிஸ்தான், இடம் - நியூயார்க்
  • ஜூன் 12, புதன், இரவு 8:00 மணி: அமெரிக்கா vs இந்தியா, இடம் - நியூயார்க்
  • ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:00 மணி: இந்தியா vs கனடா, இடம் - லாடர்ஹில்

எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன?

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள 6 மைதானங்களிலும், அமெரிக்காவில் உள்ள 3 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தியாவின் 'குரூப் ஸ்டேஜ்’ போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் மூன்று போட்டிகளும், ஃப்ளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் மைதானத்தில் ஒரு போட்டியும் நடக்கிறது.

நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் நாசாவ் கவுண்டி மைதானம் அமைந்துள்ளது. டி20 போட்டிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் தற்காலிக இருக்கை வசதியும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆடுகளமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரையிறுதிப் போட்டிகளில் டிரினிடாட்டில் உள்ள பிரையன் மைதானத்தில் ஒரு போட்டியும் மற்றொன்று கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்திலும் நடைபெறும்.

இறுதிப்போட்டி பார்படாஸ், பிரிட்ஜ் டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

2024 ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் இடங்கள்

  • நார்த் சவுண்ட், ஆன்டிகுவா & பார்புடாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்.
  • பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானம்.
  • கயானாவின் பிராவிடன்ஸில் உள்ள பிராவிடன்ஸ் மைதானம்.
  • செயின்ட் லூசியாவின் க்ரோஸ் ஐலெட் அருகே டேரன் சமி மைதானம்.
  • கிங்ஸ்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானம், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  • சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியம்
  • அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் பூங்கா மைதானம்
  • அமெரிக்காவின் டல்லாஸ்-டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானம்.
  • நாசாவ் கவுண்டி சர்வதேச அரங்கம், லாங் ஐலாந்து - நியூயார்க், அமெரிக்கா

ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கான விதிகள் என்ன?

முதல்முறையாக, டி20 போட்டியில் 'ஸ்டாப்-கடிகாரம்' (stop-clock) பயன்படுத்தப்பட உள்ளது. பந்துவீவீசும் அணி முந்தைய ஓவர் முடிந்த 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு போட்டியும், 3 மணிநேரம் 10 நிமிடங்களில் முடிக்கப்பட வேண்டும், (ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும் மற்றும் 20 நிமிட இடைவெளி வழங்கப்படும்).

வெவ்வேறு ஃபீல்டிங் கட்டுப்பாடுகளுடன் இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களுக்கு பவர் பிளே இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் இரண்டு மதிப்புரைகள் (reviews) கிடைக்கும்.

ஆட்டம் சமநிலையில் இருந்தால், சூப்பர் ஓவர் வெற்றி முடிவைத் தீர்மானிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஆறு பந்துகளை எதிர்கொள்ளும். சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வரை சூப்பர் ஓவர்கள் தொடரும்.

மழை பெய்தால் என்னவாகும்?

போட்டிக்கு நடுவில் மழை பெய்து இடையூறு ஏற்பட்டால், டிஎல்எஸ் (டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன், DLS) முறையானது முடிவுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்.

ஆனால் டிஎல்எஸ் நடைமுறைக்கு வர, ஒவ்வொரு அணியும் குரூப்/சூப்பர் 8 கட்டத்தில் குறைந்தது 5 ஓவர்கள் அல்லது நாக் அவுட் கட்டத்தில் 10 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும்.

முதல் அரையிறுதியில் ரிசர்வ் டே (Reserve day) இருக்கும் மற்றும் இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் டே இருக்கும். இருப்பினும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தை முடிக்க கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

முந்தைய வெற்றியாளர்கள் மற்றும் இந்தியாவின் பங்கீடு

இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் வென்றுள்ளன.

இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அடுத்த டி20 பதிப்பை தொகுத்து வழங்கப் போவது யார்?

கோவிட் கால இடைவெளியைத் தவிர்த்து, ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் டி20 பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடவர் டி20 உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

போட்டியின் அடுத்த பதிப்பை 2026இல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும். 2028 பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும்.

ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இடம்பெற்ற வரலாற்று சாதனைகள்

  • அதிக ரன்கள்: விராட் கோலி (இந்தியா) 27 போட்டிகளில் 1,141 ரன்கள்
  • ஒரு போட்டியில் அதிக ரன்கள்: விராட் கோலி (இந்தியா) 2014இல் 319 ரன்கள் எடுத்தார்
  • அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: 2012இல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் 123 ரன்கள் குவித்தார்.
  • அதிக சதங்கள்: கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 2007 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இரண்டு சதங்கள் அடித்தார்
  • அதிக விக்கெட்டுகள்: ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 36 போட்டிகளில் 47 விக்கெட்டுகள்
  • ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள்: வனிந்து ஹசரங்க (இலங்கை) 2021 பதிப்பில் 16 விக்கெட்டுகள்
  • சிறந்த பந்து வீச்சாளர்: அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) 2012இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 8 ரன்களில் 6 விக்கெட்டுகள்.
  • அதிக ‘Dismissals’ (விக்கெட் கீப்பர்): எம்எஸ் தோனி (இந்தியா) - 33 போட்டிகளில் 32 விக்கெட்டுகள்
  • அதிக கேட்சுகள் (ஃபீல்டர்): ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) - 30 போட்டிகளில் 23 கேட்சுகள்
  • அதிகபட்ச ஸ்கோர்: இலங்கை vs கென்யா - 2007இல் 260/6
  • குறைந்த ஸ்கோர்: நெதர்லாந்து vs இலங்கை - 2014இல் 39 (ஆல் அவுட்)

மகளிர் டி20 உலகக்கோப்பை எப்போது நடக்கும்?

கடந்த 2016இல் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் விளையாடப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, மகளிர் டி20 உலகக்கோப்பை தனிப் போட்டியாக நடத்தப்படும்.

இது 2024 அக்டோபரில் வங்கதேசத்தில் நடைபெறும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)