You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தூரில் '3 வீடு, 3 ஆட்டோ, கார்' உரிமையாளர் யாசகம் எடுத்து வந்தாரா?
- எழுதியவர், சமீர் கான்
- பதவி, பிபிசிக்காக
மரப்பலகையில் சக்கரம் பொருத்தப்பட்ட ஒரு சிறிய வண்டியில், முதுகில் ஒரு பையையும் கையில் காலணிகளையும் ஏந்திச் செல்லும் மங்கிலால் செளஹான், யாசகம் எடுப்பதை ஒழிப்பதற்கான திட்டத்தின்கீழ் இந்தூரிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தூரில் மங்கிலால் யாசகம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்வதாக மங்கிலால் கூறுகிறார்.
யாசகம் எடுப்போர் ஒழிப்பு திட்டத்தின்கீழ், அவர் மீட்கப்பட்டு தொழுநோயாளிகளுக்கான ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜனவரி 17-ம் தேதி, ஒரு தொழுநோயாளி வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து யாசகம் எடுப்பதாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்ததாக இத்திட்டத்தின் நோடல் அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறினார்
இதற்கிடையில், தான் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக மங்கிலால், செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
3 வீடுகள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்?
தகவல்கள் சேகரிக்கப்பட்ட போது யாசகம் பெற்று வந்தவரின் பெயர் மங்கிலால் என்றும் அவர் ஒரு செல்வந்தர் என்பது தெரியவந்தது என்றார் தினேஷ் மிஸ்ரா.
'அவருக்கு மூன்று வீடுகள் உள்ளன. அதில் ஒன்று மூன்று அடுக்கு மாடி வீடு. மேலும், வாடகைக்கு விடுவதற்காக மூன்று ஆட்டோ ரிக்ஷாக்களும், பயணம் செய்வதற்கு ஒரு காரும் அவரிடம் உள்ளன' என ஊடகங்களில் வந்த செய்திகள் கூறுகின்றன
மங்கிலால் கடந்த எட்டு ஆண்டுகளாக யாசகம் பெற்று வருவதாகவும், அதே நேரத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வருவதாகவும் தினேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
''அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு இந்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும்.''
அல்வாஸில் உள்ள வீடு, மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அரசாங்கத்தாலும் ரெட்கிராஸ் அமைப்பின் உதவியாலும் மங்கிலாலுக்கு வழங்கப்பட்டது.
திருமணமாகாத மங்கிலால், தனது தாய் மற்றும் இரண்டு உறவினர்களுடன் வசித்து வருகிறார். இவருடைய இரண்டு சகோதரர்களும் தனித்தனியாக வசிக்கின்றனர்.
மறுப்பு தெரிவிக்கும் மங்கிலால்
"நான் ஒருபோதும் யாசகம் எடுத்ததில்லை. நான் வட்டி தொழிலில் உள்ளேன். யாரிடமெல்லாம் நான் பணம் கொடுக்கவில்லையோ, அவர்கள் தான் என்னைப் பற்றி இத்தகைய வதந்திகளைக் கூறி ஊடகங்களில் செய்தி வரவழைக்கிறார்கள் " என்று மங்கிலால் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும், "நான் கொடுத்த கடனுக்கான வட்டியை வசூலிப்பதற்காக தினமும் புல்லியன் சந்தைக்குச் செல்வது வழக்கம். ஜனவரி 17, சனிக்கிழமை இரவு நான் வட்டி வசூலிக்கச் சென்றபோது, என்னை ஒரு காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். நான் யாசகம் எடுப்பவன் அல்ல என்று அவர்களிடம் எவ்வளவோ கூறினேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்காமல் என்னை இந்த ஆசிரமத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்"
"எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. என்னைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனது சொந்த உழைப்பாலும், சேமித்த பணத்தாலும் தான் நான் அந்த வீடுகளைக் கட்டினேன்"என்றும் அவர் தெரிவித்தார்.
அண்டை வீட்டார் என்ன கூறுகிறார்கள்?
பகத் சிங் நகரில் உள்ள மங்கிலாலின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சாந்தா பாய், மூன்று அடுக்கு மாடி வீடு மங்கிலாலுக்குச் சொந்தமானது என்றும், அவர் கடந்த சில ஆண்டுகளாகப் யாசகம் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மங்கிலால் அந்த வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வந்தார். உள்ளூர் ஊடகங்கள் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு கூலர், ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, கட்டில், எரிவாயு அடுப்பு மற்றும் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்தூரில் யாசகம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
யாசகம் எடுப்பவர்கள் மறுவாழ்வு பெறுவதை உறுதி செய்து, அந்தத் தொழிலை கைவிட ஊக்குவிப்பதற்காக மறுவாழ்வு மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இந்தூரில் மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் ரூபாலி ஜெயின் "மங்கிலால் இதற்கு முன்பும் மீட்கப்பட்டுள்ளார். அவர் ஒரு தொழுநோயாளி என்பதால், அவர் தொழுநோய் மையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டபோது, அவர் முன்பு கொத்தனாராக வேலை செய்ததும், அவருக்குச் சொந்தமாக வீடு இருந்ததும் தெரியவந்தது," என்றார்.
''தொழுநோய் காரணமாக அவர் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. தொழுநோயால் மங்கிலாலின் விரல்கள் பாதிக்கப்பட்ட பிறகு, இரண்டு ஆண்டுகளாக அவர் எங்கும் யாசகம் எடுக்கவில்லை. ஆனால் மீண்டும் யாசகம் எடுக்கத் தொடங்கினார்," எனத் தெரிவித்தார்.
'வீடு மங்கிலாலின் பெயரில் இல்லை'
இதற்கிடையில், மங்கிலாலின் உறவினர் பீம் சிங் செளஹான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், அந்த மூன்று அடுக்கு மாடி வீடு தனது தாயாரின் பெயரில் இருப்பதாகத் தெரிவித்தார்.
"தற்போது அவர் (மங்கிலால்) பெயரில் சொத்துக்கள் எதுவுமில்லை. இந்த மூன்று அடுக்கு மாடி வீடு எனக்குச் சொந்தமானது. இது எனது தாயார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆட்டோ ரிக்ஷாக்களில் இரண்டு என் பெயரில் உள்ளன, அதற்கான ஆதாரங்களை என்னால் வழங்க முடியும். காரைப் பொறுத்தவரை, அது எனது சகோதரிக்குச் சொந்தமானது. அவரது மாமாவின் பெயரில் கார் இருந்தது, ஆனால் அவரால் தவணைகளை செலுத்த முடியவில்லை. அதனால் அந்த காரை என்னிடம் கொடுத்து, தவணைகளைச் செலுத்திவிட்டு காரை வைத்துக் கொள்ளுமாறு கூறினார்," என்றார்.
கடந்த ஆறு மாதங்களாக மங்கிலால் தன்னுடன் வசித்து வருவதாகவும், தான் அவருக்குப் பணிவிடை செய்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அதைத் தொடருவேன் எனவும் பீம் சிங் தெரிவித்தார்.
யாசகம் எடுப்பது குறித்த கேள்விக்கு, தனது மாமாவின் வேலை வட்டிக்கு பணம் கொடுப்பது தான் என்றும், அதை வசூலிப்பதற்காகவே அவர் புல்லியன் சந்தைக்குச் செல்வார் என்றும் பீம் சிங் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு