You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாத்மா காந்தி: ‘காந்தி’ படத்திற்குப் பிறகுதான் உலகம் முழுவதும் அறியப்பட்டாரா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 1982ஆம் ஆண்டில் ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை, காந்தி குறித்து வெளிநாட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியதற்கு காங்கிரஸ் தலைவர்களும் காந்திய சிந்தனையாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் காந்தி எப்போது சர்வதேச அளவில் அறியப்பட ஆரம்பித்தார்?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "உலகம் முழுவதிலும் பார்த்தால், மகாத்மா காந்தி ஒரு மகத்தான மனிதர். கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தி குறித்து தெரிய வைப்பது நம்முடைய பொறுப்பு அல்லவா? ஆனால், அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. முதன்முதலில் காந்தி குறித்து திரைப்படம் வெளியானபோதுதான் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உலகம் முழுவதும் ஏற்பட்டது," என்று கூறினார்.
அவரது இந்தக் கருத்து குறித்து இந்தியா முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, சமூக ஊடகங்களில் கேலியும் எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஷாக்காக்களில் கற்றுத் தரப்படும் உலகம் குறித்த பார்வை காந்தியைப் புரிந்துகொள்ள உதவுவதில்லை. அவர்கள் காந்தியைக் கொலை செய்த கோட்ஸேவின் பாதையைப் பின்பற்றுபவர்கள்," என்று குறிப்பிட்டார்.
ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி'
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குறித்து திரைப்படம் ஒன்றை உருவாக்க 1952இல் இருந்து பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 1960களில் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரிச்சர்ட் அட்டன்பரோ இதுதொடர்பான முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால், இந்த முயற்சி இழுத்துக்கொண்டே போனது. பிறகு ஒரு வழியாக 1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கியது. 1981ஆம் ஆண்டு மே மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தப் படத்தில் காந்தியாக பென் கின்ஸ்லியும் நேருவாக ரோஷன் சேத்தும் நடித்தனர். ஹர்ஷ் நய்யார் கோட்ஸேவாக நடித்தார்.
கடந்த 1982ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்தப் படம் டெல்லியில் ப்ரீமியரானது. இதற்குப் பிறகு லண்டன், அமெரிக்காவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. பல ஆஸ்கார் விருதுகளையும் பிரிட்டிஷ் அகாதெமி விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தில் காந்தியாக நடித்த பென் கின்ஸ்லிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
ஆனால், இந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் காந்தி உலகம் முழுவதும் அறியப்பட்டாரா? பொதுவெளியில் இருக்கும் தரவுகளை வைத்துப் பார்த்தால், காந்தி 1930களிலேயே உலகில் மிகவும் அறியப்பட்ட நபராக இருந்தார்.
நோபல் பரிசுக்கு 1937லேயே பரிசீலனை
மகாத்மா காந்தி 1930களின் பிற்பகுதியில் நோபல் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டதை வைத்தே இதைப் புரிந்துகொள்ளலாம். காந்திக்கு ஏன் நோபல் விருது தரப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் நோபல் பரிசு கமிட்டி, கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
அந்தக் கட்டுரையில் 1937லேயே காந்தி நோபல் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக காந்தி, ஐந்து முறை நோபல் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டிருக்கிறார். "1937, 1938, 1939, 1947 ஆகிய ஆண்டுகளிலும் 1948 ஜனவரியில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாகவும் நோபல் பரிசுக்காக அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது" என அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
அவருக்கு அமைதிக்கான நோபல் விருதைத் தர வேண்டுமென வலியுறுத்திய அமைப்புகள் குறித்து அந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள், 30களிலேயே சர்வதேச அளவில் காந்திக்கு இருந்த செல்வாக்கை விளக்குகிறது.
"காந்தியை ஆராதித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் 1930களின் துவக்கத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் துவங்கப்பட்ட 'Friends of India' என்ற குழுவினர். 1937இல் நார்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓலே கால்ப்ஜான்சன் நோபல் அமைதி விருதை காந்திக்கு வழங்க வேண்டுமெனப் பரிந்துரைத்தார். 13 பேரைக் கொண்ட குறும் பட்டியலிலும் காந்தியின் பெயர் இடம்பெற்றது" என்கிறது நோபல் பரிசு அமைப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
ஆனால், அந்த ஆண்டு விருது வழங்கப்படவில்லை எனக் கூறும் அந்தக் கட்டுரையில், "1938, 1939 ஆகிய ஆண்டுகளிலும் இவரது பெயரை ஓலே பரிந்துரைத்தார். விருது வழங்கப்படவில்லை. 1947இல் மீண்டும் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அப்போது 6 பேரைக் கொண்ட குறும் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றது. 1948இல் காந்தி கொல்லப்பட்ட பிறகு, மீண்டும் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது" எனக் குறிப்பிடுகிறது.
"ஆனால், அவர் உயிரோடு இல்லாத நிலையில் அதை வழங்க நோபல் பரிசு கமிட்டி விரும்பவில்லை. அந்த ஆண்டு யாருக்குமே நோபல் பரிசு வழங்கப்படவில்லை" என்கிறது நோபல் பரிசு அமைப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருக்கு முன்னோடி
இது மட்டுமல்ல, தான் வாழ்ந்த காலத்திலேயே உலகம் முழுவதும் சிவில் உரிமைp போராளிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் காந்தி. அவர்களில் மிக முக்கியமானவர் அமெரிக்க சிவில் உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
காந்தீய தத்துவங்களே “ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தார்மீக ரீதியாகவும் eதார்த்தரீதியாகவும் வலுவான முறையாக இருக்கின்றன" என்று My Pilgrimage to Nonviolence என்ற தனது நூலில் குறிப்பிட்டார் அவர். "கிறிஸ்து நமக்கான பாதையைக் காட்டினார், காந்தி நமக்கான வேலைத் திட்டத்தைக் காட்டினார்" என்றும் குறிப்பிட்டார் மார்டின் லூதர் கிங்.
மார்ட்டின் லூதர் கிங் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவில் இன ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்திலும் காந்தியின் தத்துவங்கள் பெரும் பங்கு வகித்தன. "காந்தி அஹிம்சைக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். என்னால் முடிந்தவரை காந்தியின் வியூகத்தை நான் பின்பற்றினேன்," என்று குறிப்பிட்டார் மண்டேலா.
அதேபோல, ஜெர்மனியில் பிறந்து 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர்களில் ஒருவராக உருவெடுத்தவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஃபிரான்சை சேர்ந்த எழுத்தாளரும் சிந்தனாவாதியுமான ரோமென் ரோலண்ட் போன்றவர்கள் காந்தியால் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தனர்.
காந்தி 1930களிலேயே சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்தார் என்பதற்கு காந்தியின் 70வது பிறந்தநாளை ஒட்டி 1939இல் வெளியான "மகாத்மா காந்தி" என்ற தொகுப்பு நூல் ஒரு மிகச்சிறந்த உதாரணம். பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்த நூலைத் தொகுத்திருந்தார்.
காந்தியின் வாழ்க்கை, அவரது பணிகள் குறித்த கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருந்தன. அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த 70 கட்டுரைகளில் பெரும்பாலானவை, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த சிந்தனையாளர்களால் எழுதப்பட்டிருந்தன.
ஐரோப்பிய நாடுகளில் காந்திக்கு இருந்த வரவேற்பு
காந்தி லண்டனுக்கு செல்லும்போதெல்லாம் பிற ஐரோப்பிய நாடுகளில் அவர் வரவேற்கப்படுவது வழக்கமாக இருந்தது. வட்டமேஜை மாநாட்டிற்காக லண்டனுக்கு சென்ற காந்தி, பிறகு பாரீஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்.
காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் மூத்த பத்திரிகையாளரான மிரா காம்தார், "1931இல் உலகின் மிகப் பிரபலமான மனிதர் காந்திதான்" எனக் குறிப்பிடுகிறார். "தண்டி மார்ச் குறித்து United Press நிறுவனத்தின் செய்தியாளர் வெப் மில்லர் எழுதிய கட்டுரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் வெளியானது. 1931இல் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்ட காந்தி, ரோமெய்ன் ரோலண்டை சந்திக்க ஜெனீவா செல்வதற்கு முன்பாக, பாரீசுக்கு சென்றார். அங்கே மேஜிக் சிட்டி என்ற அரங்கில் பேசியபோது, அவர் பேசியதைக் கேட்கப் பெரும் கூட்டம் குவிந்தது," என்கிறார் அவர்.
காந்தி 1930லேயே உலகம் முழுவதும் அறியப்பட்டவராயிருந்தார் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார் வரலாற்று ஆசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி.
"கடந்த 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் காந்தி தண்டி யாத்திரையைத் துவங்கியபோது அதுகுறித்த செய்தியைச் சேகரிக்கவும் படமாக்கவும் உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் குவிந்தனர். காந்தியின் பிரபலத்தைச் சொல்ல இது ஒன்றே போதுமானது," என்கிறார் அவர்.
காந்தி குறித்த விரிவான ஆவணப் படம்
ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் வெளியாவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, காந்தி குறித்த விரிவான ஆவணப்படம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. 20ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தியவர்களில் முக்கியமானவரான ஏ.கே. செட்டியார் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
இதற்காக 1930களில் உலகம் முழுவதும் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காந்தி குறித்த ஒரிஜினல் படச்சுருள்களைச் சேகரித்தார் ஏ.கே. செட்டியார். அதை வைத்து "மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்" என்ற இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய படம் ஒன்றை 1940இல் வெளியிட்டார். பிறகு தெலுங்கிலும் 1950இல் இந்தியிலும் பிறகு ஆங்கிலத்தில் அமெரிக்காவிலும் இந்தப் படம் வெளியானது.
இந்தப் படம் எடுப்பதற்காக தாம் மேற்கொண்ட முயற்சிகளை 'அண்ணலின் அடிச்சுவட்டில்' என்ற பெயரில் ஒரு தொடராக எழுதினார் ஏ.கே. செட்டியார். அந்தத் தொடரில், உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய சிந்தனையாளர்களும் தலைவர்களும் காந்தி மீது கொண்ட மரியாதையையும் பிரமிப்பையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 1931இல் காந்தியை தனது அட்டைப் படத்தில் வெளியிட்டு, Man of the Year எனக் குறிப்பிட்டது, அவர் அமெரிக்காவிலும் கவனிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறது.
தனது வழக்கறிஞர் படிப்பை முடித்த காந்தி, 1893இல் தென்னாப்பிரிக்காவின் நடாலில் வழக்கறிஞர் பணியில் சேர்ந்தார். அங்கே அவர் 21 ஆண்டுகள் இருந்தார். அங்கு கருப்பினத்தவர் மீது காட்டப்படும் ஒதுக்குதல், பாகுபாடு ஆகியவற்றுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்தார் காந்தி. 1915இல் இந்தியா திரும்பிய காந்தி, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)