You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீடியோ வெளியானதால் இளம் பெண் தற்கொலை முயற்சி - யூட்யூப் சேனல்களைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியானதால் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதுதொடர்பாக அந்த யூட்யூப் சேனலின் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் உரிமையாளர் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இரட்டை அர்த்த காணொளிகள், உரையாடல்கள் என வெளியிட்டு வந்திருக்கிறது இந்த யூட்யூப் சேனல்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த சேனலின் தொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் இணைந்து பெண் ஒருவரிடம் காதல் குறித்துப் பேட்டி எடுத்துள்ளனர். அந்தப் பேட்டி சமீபத்தில் வெளியான நிலையில் அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்று, கீழ்ப்பாக்கம் போலீசார் அந்த யூட்யூப் சேனலின் உரிமையாளரான ராம் (23), ஒளிப்பதிவாளர் யோகராஜ் (21), தொகுப்பாளர் ஸ்வேதா (23) ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'தனது வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்யக்கூடாது' என்று தான் அப்போது கூறியதாக அந்தப் பெண் குறிப்பிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஏற்கெனவே பிராங்க் (Prank) உள்ளிட்ட விஷயங்களை செய்வது மக்களின் தனியுரிமையை மீறுவதாகp பலரும் புகார் தெரிவித்து வரும் நிலையில், தங்களது யூட்யூப் சேனலை வளர்ப்பதற்காக ஒரு சில சேனல் உரிமையாளர்கள் ஆபாசமான உள்ளடக்கங்கள் (Content) கொண்ட காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர், என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் பொது மக்களிடமும், இளைஞர்களிடமும் பொதுவெளியில் இரட்டை அர்த்த உரையாடல்களை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற நிகழ்வுகள் சர்ச்சையாகி வருகின்றன.
யூட்யூப் தளத்தின் வளர்ச்சி
கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் யூட்யூப் நிறுவனமானது, காணொளிகள் பகிர்தல், பார்த்தல் மற்றும் பதிவிறக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காகp பயன்படுத்தப்படும் ஒரு சமூக ஊடகம்.
மேலும் இதில் குழந்தைகளுக்கென்று தனி தளம் உள்ளிட்ட ஒரு சில பிரிவுகளுக்கான கிளை தளங்களையும் யூட்யூப் நடத்தி வருகிறது.
செய்தி ஊடகங்களின் சேனல்கள் முதல் தனிமனிதர்கள் வரை கிட்டத்தட்ட 5.1 கோடி யூட்யூப் சேனல்கள் இயங்கி வருவதாக அந்தத் தளம் கூறுகிறது. ஜிமெயில் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் ஒரு யூட்யூப் சேனலை தொடங்க முடியும்.
அதில் தொடர்ந்து விதவிதமான உள்ளடக்கங்களைப் பகிர்வதன் மூலம் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களைப் பெற்று, அந்தக் கணக்குக்கு ஏற்றபடி பணம் சம்பாதிக்க முடியும்.
இதில் காணொளிகளைப் பகிர்வதற்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, யாராவது யூட்யூப் விதிகளுக்கு மாறாகக் காணொளிகளைப் பகிர்ந்தால் அந்த வீடியோ நீக்கப்படும், அல்லது அந்த வீடியோவின் தன்மையைப் பொறுத்து வேறு எதிர்வினை அமையும்.
இதைக் கண்காணிப்பதற்காகவே யூட்யூப் தனியாக செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புத் தொழில்நுட்பம் மற்றும் ஒரு குழுவைக் கொண்டுள்ளது.
யூட்யூப் கூறியிருக்கும் விதிமுறைகள் என்ன?
- யூட்யூப் விதிகளின்படி, பாலியல் ரீதியான அல்லது பாலியல் உறுப்புகளை வெளிப்படையாகk காட்டக்கூடிய உள்ளடக்கம் கொண்ட எந்தவிதமான வீடியோ, ஆடியோ எதையும் ஒளிபரப்பக் கூடாது.
- சிறார்களை பாலியல் ரீதியாகவோ அல்லது அவர்களைத் தொடர்பு படுத்தக்கூடிய எந்த விதமான பாலியல் உள்நோக்கம் கொண்ட உள்ளடக்கங்களையோ வெளியிடக்கூடாது.
- ஒருவரை உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கும் வகையில், தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் ஒளிபரப்பவோ அல்லது பகிரவோ கூடாது.
- கல்வி மற்றும் ஆவணப்படம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களைத் தாண்டி வேறு எந்தக் காணொளிகளிலும் தவறான மொழியையோ அல்லது வார்த்தைகளையோ பயன்படுத்தக் கூடாது.
- அதில் பாலியல் உள்நோக்கம் கொண்ட வார்த்தைகள், அவதூறு உள்ளிட்டவையும் அடங்கும்.
- தனிநபரைத் தாக்கும் நோக்கிலோ அல்லது அவர்களை ஏதாவது ஒரு வகையில் தனிப்பட்ட முறையில் கேலிக்கு உள்ளாக்கும் விதத்திலோ உள்ளடக்கம் இருத்தல் கூடாது.
- மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்களை எந்த வகையிலும் பாதிக்கும் வண்ணம் உள்ளடக்கங்களைப் பகிரக்கூடாது.
- இதைத்தாண்டி, வெறுப்புப் பிரசாரம், தீங்கு விளைவிக்கக் கூடிய உள்ளடக்கம் எனப் பல விதமான விதிமுறைகள் உள்ளன.
இதைப் பின்பற்றாத சேனல்களுக்கு 90 நாட்களுக்குள் 3 முறை எச்சரிக்கை வழங்கப்பட்டு, யூட்யூப் கொள்கைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்படும். அதையும் மீறும் சேனல்கள் முழுமையாக நீக்கப்படும் என்று யூட்யூப் கூறுகிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
என்னதான் தவறான உள்ளடக்கம் கொண்ட யூட்யூப் சேனல்கள் அந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டாலும், தற்போது நடந்துள்ள சம்பவம் போல சில நேரங்களில் பாதிப்புகள் நடக்கும் பட்சத்தில் அதைக் கையாள என்னென்ன சட்டங்கள் இந்தியாவில் உள்ளன என ஆராய்ந்தோம்.
ஆயினும், 'டிஜிட்டல் உலகம் இவ்வளவு வளர்ந்த பிறகும் கூட இன்னும் அதற்கென்று தனியான சட்டங்கள் உருவாக்கப்படாத நிலையே இருக்கிறது', என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும் பொதுவாக மற்ற குற்றங்களுக்கு இருக்கும் சட்டப் பிரிவுகளையே இதற்கும் பயன்படுத்த முடியும் என்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சைபர் சட்ட நிபுணர் மற்றும் சைபர் கிரைம் வழக்கறிஞரான கார்த்திகேயன், “தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு என்னென்ன சட்டங்கள் உள்ளனவோ, அவை அனைத்தும் இணையதளத்தில் வெளியாகும் உள்ளடக்கங்களுக்கும் பொருந்தும்,” என்கிறார்.
உதாரணத்திற்கு, “தகவல் தொழிநுட்ப சட்டம் 66சி-யின் படி, ஒரு நபரின் அடையாளத்தை எந்த வகையில் பயன்படுத்தி மோசடி செய்தாலும் தவறு என்று சட்டம் சொல்கிறது. இதே சட்டம் சமூக ஊடக தளங்களில் போலிப்பெயரை பயன்படுத்தி கருத்துக்கள் தெரிவிப்பவர்களுக்கும் பொருந்தும். இது போன்ற வழக்குகளில் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்,” என்கிறார் அவர்.
இதே சட்டத்தின் கீழ் தான் ஒருவரது படம் அல்லது தகவல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார் கோவை மாவட்ட சைபர் க்ரைம் ஆய்வாளர் அருண்குமார்.
மேலும், "யூட்யூப் சேனல்களில் இரட்டை பொருள் தரும் வார்த்தைகள் மற்றும் பாலியல் நோக்கில் கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் 294(b) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67, 67(A)-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்," என்கிறார் அவர்.
கார்த்திகேயன் பேசுகையில், “ஒரு சேனல், ஒருவரது போட்டோ அல்லது தனிப்பட்ட அடையாளத்தை சமூக காரணங்களுக்காக அன்றி, வணிகரீதியாக பயன்படுத்தும் போது அதற்கு அந்த நபரின் ஒப்புதல் தேவை. அப்படி அனுமதி இல்லாமல் பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி குற்றமாகும்,” என்கிறார்.
இவை தவிர மேலும் சில சட்டங்களும் தனிநபரின் தனியுரிமைக்கு அரணாக உள்ளன என்கிறார் வழக்கறிஞர் சுரேகா. இந்திய தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில தனியுரிமை கொள்கைகளுக்கான சட்டங்கள் குறித்து அவர் விளக்கினார்.
“ஒருவரது அனுமதி இல்லாமல் அவரது அடையாளத்தை இணையத்தில் பகிர்ந்ததால் அல்லது வேறு காரணங்களாலோ அவரை தற்கொலைக்குத் தூண்டினால் இந்திய தண்டனைச் சட்டம் 306-இன் படி குற்றமாகும். அதற்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்,” என்றார்.
மேலும், “இந்திய தண்டனைச் சட்டம் 354சி-இன் படி ஒருவரது அனுமதியின்றி அவர் இருக்கும் வீடியோ அல்லது அவரது அடையாளத்தை பொதுவெளியில் அல்லது சமூகவலைத்தளங்களில் பகிர்வது குற்றம். அதற்கு ஒன்று முதல் மூன்றாண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்,” என்கிறார் அவர்.
"அதேபோல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66இ-இன் படி, ஒருவரது அந்தரங்க உறுப்புக்கள் தெரியுமாறு உள்ளடக்கங்களை பொதுவெளியில் பகிர்ந்தாலோ அல்லது ஒளிபரப்பினாலோ அவருக்கு ஓராண்டு தண்டனை அல்லது 2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்,” என்றார்.
'சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்'
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் யூட்யூப் சேனல்கள் பெருகியிருப்பதும் இதற்குக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதுகுறித்து பிரபல யூட்யூபரும், சமூக ஊடக பிரபலமுமான தேநீர் இடைவேளை பிரகதீஸ்வரனிடம் பேசினோம்.
“ஒரு ஜிமெயில் ஐடி இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் யூட்யூப் சேனல் தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. யூட்யூப் நிறுவனம்கூட இதற்கான எந்தப் பயிற்சிகளையும் வழங்குவதில்லை,” என்கிறார் அவர்.
அதேநேரம், “எல்லா கிரியேட்டர்களும் இதுபோன்று இரட்டை அர்த்தத்தில் பேசுவதையோ, எதிர்மறையாகப் பேசுவதையோ இலக்காகக் கொண்டு இந்தப் பணிக்கு வருவதில்லை," என்று கூறும் அவர், “நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் பலன் கிடைக்காத சிலர் மட்டுமே இப்படி பாதை மாறும் வாய்ப்பு உள்ளது,” என்கிறார்.
‘பார்வையாளர்களும் தடுக்கலாம்’
என்னதான் ஒரு சில கிரியேட்டர்கள் தவறான உள்ளடக்கம் கொண்ட காணொளிகளை ஒளிபரப்பினாலும், அதை ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்று கூறும் பிரகதீஸ்வரன் அவர்களேகூட இதைத் தடுக்க முடியும் என்கிறார்.
இதற்கான தேர்வை யூட்யூபே வழங்கியிருக்கிறது. ஒரு வீடியோ தவறானதாகவும் அதேநேரம் பொது சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் இருந்தால் பார்வையாளர்களே அந்த வீடியோவை ரிப்போர்ட் செய்யலாம்.
பிறகு யூட்யூப் அந்த வீடியோவை தணிக்கை செய்து நீக்கிவிடும் அல்லது அந்த சேனலை முடக்கும்.
“சினிமாவுக்கு எப்படி ஒரு தணிக்கை வாரியம் உள்ளதோ, அதுபோல் இதுபோன்ற சமூக ஊடக தளங்களையும், ஓடிடி தளங்களையும் நெறிமுறைப்படுத்த ஒரு வாரியம் அமைக்க வேண்டும். காலத்திற்கேற்ப தனித்துவமான சட்டங்களையும் உருவாக்க வேண்டும். அதேபோல் தவறு நடக்கும்போது, அவற்றைத் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் ஒரு குழுவை உருவாக்க வேண்டும்,” என்கிறார் சட்ட நிபுணர் கார்த்திகேயன்.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டால்...
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)