ஏடிஹெச்டி குறைபாடு என்றால் என்ன? அதை குணப்படுத்த முடியுமா? மருத்துவர்கள் விளக்கம்

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

“நான் ஒரு மருத்துவரிடம் ஏடிஹெச்டி (ADHD) எனும் குறைபாடு குணப்படுத்தக் கூடியதா என்று கேட்டேன். சிறுவயதில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என்றார்.' 41 வயதில் கண்டறிந்தால்?' எனக் கேட்டேன். ஆம், எனக்கு மருத்துவ ரீதியாக ஏடிஹெச்டி என்ற குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.”

பிரபல நடிகர் ஃபஹத் பாசில் பேசிய வார்த்தைகள் இவை.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் கோதமங்கலம் அருகே உள்ள கிராமத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதைத் தெரிவித்திருந்தார் நடிகர் ஃபஹத் பாசில்.

ஒலிம்பிக் போட்டிகளில் 28 முறை தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், இவர்களும் ஏடிஹெச்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே.

ஏடிஹெச்டி என்றால் என்ன? குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இந்தக் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா?

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏடிஹெச்டி

ஏடிஹெச்டி என்பது மூளையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொதுவான ஒரு நரம்பியல் குறைபாடு அல்லது கோளாறு என அமெரிக்க மனநலச் சங்கம் வரையறுக்கிறது (American Psychiatric Association).

இதுதொடர்பாக மேலும் அறிந்துகொள்ள, சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம்.

“ஏடிஹெச்டி என்றால் ‘கவனக்குறைவு அல்லது அதியியக்கக் குறைபாடு’ (Attention-deficit/hyperactivity disorder). இது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்படும் பல குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இது சரியாகிவிடும், சிலருக்கு வளரிளம் பருவத்தைக் கடந்து பெரியவர்களான பிறகும் இருக்கும்,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

குறைபாட்டின் பெயருக்கு ஏற்றாற்போல் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கவனச்சிதறல் பிரச்னை இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறான அதீத சுறுசுறுப்புடன் அவர்கள் இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.

“ஏடிஹெச்டி குறைபாடு உடைய குழந்தைகள் காலையில் இருந்து இரவு வரை சோர்வடையாமல் அதே புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். சில நேரங்களில் இவர்களைக் கவனிக்க முடியாமல், பெற்றோர் சோர்வடைந்து விடுவார்கள். ஆனால் பிள்ளைகள் தொடர்ந்து சுறுசுறுப்புடன் இருப்பார்கள்."

"இவர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள். பள்ளி, கல்லூரி என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர்கள் செல்லும்போது, கவனச் சிதறலும் சேர்ந்து இது பிரச்னையாக மாறுகிறது,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் சந்திரிகா.

ஏடிஹெச்டி குறைபாட்டின் அறிகுறிகள்

ஏடிஹெச்டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் குறித்து நம்மிடம் பேசினார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “ஏடிஹெச்டி அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம், ஒன்று கவனச்சிதறல் தொடர்பான அறிகுறிகள் மற்றொன்று அதியியக்கம் தொடர்பான அறிகுறிகள்,” என்று கூறிய அவர் அவற்றைப் பட்டியலிட்டார்.

கவனக்குறைவுக்கான அறிகுறிகள்

  • அன்றாடப் பணிகள் அல்லது விளையாட்டு நடவடிக்கைகளில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் சிரமம்
  • பள்ளியில் அல்லது பிற செயல்பாடுகளில் அடிக்கடி கவனக் குறைவால் ஏற்படும் தவறுகள்
  • பணிகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் சிக்கல்.
  • தொடர்ச்சியான சிந்தனை அல்லது கவனம் தேவைப்படும் பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அல்லது தயக்கம் காட்டுதல்
  • பெரும்பாலும் அன்றாடப் பணிகள் மற்றும் செயல்பாடுகளுக்குத் தேவையான பொருட்களைத் தொலைப்பது (உதாரணம்- பேனா, பென்சில், சாவிகள் அல்லது பர்ஸை தொலைப்பது)
  • வெளிப்புற தூண்டுதல்களால் எளிதில் திசை திருப்பப்படுதல்
  • அன்றாட நடவடிக்கைகளில் மறதி

அதியியக்கம் தொடர்பான அறிகுறிகள்

  • மன அமைதியின்மையால் கை அல்லது கால்களை அசைத்துக்கொண்டே இருப்பது, இருக்கையில் அடிக்கடி நெளிவது.
  • ஓரிடத்தில் உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட அவ்வாறு இருக்க இயலாமை
  • பொருத்தமற்ற சூழ்நிலைகளில் அங்குமிங்கும் ஓடுதல்
  • விளையாட்டுகளில் அல்லது ஓய்வு நேரச் செயல்களில் பொறுமையாக ஈடுபட இயலாமை
  • அதிகமாகப் பேசுவது அல்லது எதிரில் பேசுபவருக்கு வாய்ப்பளிக்காமல் தொடர்ந்து பேசுவது
  • எப்போதும் ஏதோ மோட்டார் மூலம் இயக்கப்படுவது போல் ஓர் உந்துசக்தியுடன் செயல்படுவது
  • கேள்வி முடிவதற்குள் பதில்களைக் கடகடவெனக் கூறுவது
  • தன்னுடைய முறை வரும்வரை காத்திருப்பதில் சிரமம்
  • மற்றவர்களின் உரையாடல்கள் அல்லது செயல்பாடுகளில் குறுக்கிடுவது

“மேலே உள்ள அறிகுறிகளைப் படித்தவுடன் நமக்கும் ஏடிஹெச்டி இருக்குமோ எனப் பலருக்கும் தோன்றலாம், ஏனெனில் இவை பொதுவான அறிகுறிகள். இவை ஒரு குழந்தைக்கு அல்லது பெரியவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஏற்படும்போதுதான் மருத்துவரை அணுக வேண்டும். நடத்தைவழிச் சோதனைகள் (Behavioral assessments) மற்றும் பிற உளவியல் முறைகள் மூலம் அதை மனநல மருத்துவர்கள் உறுதி செய்வார்கள்” என்று கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

தொடர்ந்து பேசிய அவர், ஏடிஹெச்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்கிறார்,

  • கவனக்குறைவு தொடர்பான பிரச்னைகள் அதிகமாக இருப்பது
  • அதியியக்கம் தொடர்பான பிரச்னைகள் அதிகமாக இருப்பது
  • கவனக்குறைவு, அதியியக்கம் என இரண்டுமே அதிகமாக இருப்பது

"இதைப் புரிந்துகொண்டு குழந்தைகளை வழிநடத்துவது அவசியம்” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

ஏடிஹெச்டி எப்போது சிக்கலாக மாறும்?

ஏடிஹெச்டி குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கவனக்குறைவு பிரச்னை இருப்பதால், அவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

“என்னிடம் ஏடிஹெச்டி சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் பெரும்பாலானோர், பள்ளி நிர்வாகம் அல்லது வகுப்பு ஆசிரியர் அறிவுறுத்தியதால்தான் அழைத்து வந்திருப்பார்கள். ஏனென்றால் பொதுவாக ஒரு சுட்டித்தனத்தோடு செயல்படும்போது, பெற்றோர் அதைப் பெருமையாகப் பார்ப்பார்கள் அல்லது அவனது அப்பாவைப் போல் இவன், என எளிதாகக் கடந்து சென்றுவிடுவார்கள்."

ஆனால் "பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்தான், இந்தப் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தத் திணறுவதையும், அமைதியின்றி இருப்பதையும் கவனித்து பெற்றோரிடம் அறிவுறுத்துவார்கள். ஏடிஹெச்டி இருந்தால் கற்றல் குறைபாடு ஏற்படவும் பெரும்பாலும் வாய்ப்புகள் உண்டு,” என்று கூறுகிறார் அவர்.

ஏடிஹெச்டி குறைபாட்டை சிறுவயதில் கண்டுகொள்ளாமல் விட்டால், பெரியவர்களானதும் வேலை முதல் திருமண வாழ்க்கை வரை அனைத்தையும் இது பாதிக்கும் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

“இன்று பல அலுவலகங்களில் ஒருவரே ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாள வேண்டிய சூழல் உள்ளது (Multi-Tasking). ஏடிஹெச்டி உள்ளவர்கள் அதைச் செய்ய சிரமப்படுவார்கள். அதே போல ஒரு காதல் அல்லது திருமண உறவிலும் அவர்கள் நிலையாக இருக்க மாட்டார்கள், அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, திடீர் உற்சாகம் என உணர்ச்சிக் கட்டுப்பாடின்மை இருக்கும்."

"இது தவிர ஞாபகமறதியும் இருக்கும். இதனால் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி மனச்சோர்வு, இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) போன்ற இணை குறைபாடுகளும் ஏற்படும்,” என எச்சரிக்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.

ஏடிஹெச்டி குறைபாட்டிற்கான காரணங்கள்

“மூளையிலுள்ள நரம்புக் கடத்திகளின் (Neurotransmitters) செயல்பாடு குறைவாக இருப்பதுதான் ஏடிஹெச்டி என்றாலும் இந்தக் குறைபாட்டிற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

தொடர்ந்து பேசிய அவர், “மரபியல் காரணங்கள், குழந்தை கருவாக இருக்கும்போது மூளை வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு, குறைப் பிரசவம் அலலது குறைவான எடையுடன் குழந்தை பிறப்பது, வலிப்பு நோயாலும்கூட இது ஏற்படும்,” என்று கூறினார்.

ஏடிஹெச்டி குறைபாட்டிற்கான சிகிச்சைகள்

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கு ஏடிஹெச்டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டாலும் அதைக் கண்டிப்பாக குணப்படுத்தலாம் என்கிறார் மனநல மருத்துவர் கிருபாகரன்.

“ஏடிஹெச்டி இருந்தால் மூளையில் ரசாயன மாற்றங்கள் நிகழும். அதைச் சரி செய்வதற்கான மருந்து, மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்," என்கிறார் அவர்.

"மனநல மருத்துவர் ஒருவரின் ஆலோசனையோடு, நடத்தைவழி சிகிச்சை (Behaviour Therapy) அளிக்கப்படும். கவனச் சிதறலை ஒழுங்குபடுத்த, மனதை ஒருமுகப்படுத்துவதைக் கற்றுக்கொடுக்க பயிற்சிகள் உள்ளன. உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை தொடர்பான மருத்துவரின் ஆலோசனைகளும் இதற்கு உதவும்,” என்கிறார் அவர்.

மேலும் மிகச்சிறிய வேலைகள், பயிற்சிகளைக் கொடுத்து அவற்றுக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் மனநல மருத்துவர் கிருபாகரன்.

“குழந்தைகளின் எல்லா செயல்களையும் பாராட்ட வேண்டியதும், ஒழுங்குமுறைகளை அவர்களுக்குப் போதிக்க வேண்டியதும் அவசியம்."

"ஏடிஹெச்டி-யை கவனிக்காமல் அப்படியே விட்டால், அது மட்டுமின்றி கூடவே கற்றல் குறைபாடு, மனச்சோர்வு, ஆட்டிசம் குறைபாடு, போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் முறையான மனநல மருத்துவரை அணுகி சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது நல்லது,” என்கிறார் மனநல மருத்துவர் கிருபாகரன்.

சிறுவயதில் ஏடிஹெச்டி குறைபாட்டைக் கண்டறிந்தால் அதை எளிதில் குணப்படுத்தலாம் என்பதைவிட, குழந்தையின் வாழ்க்கையைப் பாதிக்காதவாறு நேர்மறையாக அதை மடைமாற்றலாம் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

“தனது ஏடிஹெச்டி குறைபாட்டைச் சிறுவயதில் கண்டறிந்து, அந்த உந்து சக்தியை விளையாட்டுத் துறையில் நேர்மறையாகப் பயன்படுத்தியதால்தான் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸால் 28 தங்க பதக்கங்களை வெல்ல முடிந்தது,” என்கிறார் அவர்.

மருத்துவர் பூர்ண சந்திரிகாவின் கூற்றுப்படி, "ஏடிஹெச்டி குறைபாட்டைப் பார்த்து பயப்பட அல்லது புறக்கணிக்க வேண்டாம், அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் அவர்கள் பல உயரங்களை அடைவார்கள்.”

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)