மலேரியா கொசுவை ஒழிக்க கொசுக்களையே பயன்படுத்தும் குட்டி நாடு - எப்படி தெரியுமா?

    • எழுதியவர், டோர்காஸ் வாங்கிரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் (Djibouti) மலேரியாவை பரப்பும் கொசு இனத்தின் பரவலைத் தடுக்கும் முயற்சியாக பல்லாயிரக்கணக்கான மரபணு மாற்றப்பட்ட (GMO) கொசுக்கள் பறக்கவிடப்பட்டன.

பிரிட்டனை தளமாகக் கொண்ட உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஆக்ஸிடெக் (Oxitec), மனிதர்களை கடிக்காத ஆண் அனோபிலஸ் ஸ்டெபன்சி (Anopheles Stephensi) கொசுக்களை உருவாக்கியது. இவை பெண் கொசுக்களை முதிர்ச்சி அடையும் முன் கொல்லும் மரபணுவை கொண்டுள்ளது. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களை கடிக்கக் கூடியவை. மலேரியா மற்றும் பிற வைரஸ் நோய்களை பரப்புவதும் பெண் கொசுக்கள் தான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இதுபோன்ற மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் பறக்க விடப்பட்டது இதுவே முதல் முறை, ஆப்பிரிக்க கண்டத்தில் இது இரண்டாவது முறையாகும்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) கூற்றுபடி, "இதேபோன்ற உயிரி தொழில்நுட்பம் பிரேசில், கேமன் தீவுகள், பனாமா மற்றும் இந்தியாவில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019 முதல் உலகம் முழுவதும் இதுபோன்ற ஒரு பில்லியனுக்கும் அதிகமான மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் பறக்க விடப்பட்டுள்ளன” என்கிறது.

ஆக்ஸிடெக் லிமிடெட், ஜிபூட்டி அரசாங்கம் மற்றும் அசோசியேஷன் மியூச்சுவாலிஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அந்நாட்டில் மலேரியாவை பரப்பும் கொசுக்களின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. முதற்கட்டமாக ஜிபூட்டி நகரின் புறநகர் பகுதியான அம்புலி என்னும் பகுதியில் வியாழக்கிழமை மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் திறந்த வெளியில் பறக்க விடப்பட்டன.

“கடிக்காத, நோய் பரப்பாத நல்ல கொசுக்களை உருவாக்கி இருக்கிறோம். இந்த சாதுவான கொசுக்களை நாங்கள் பறக்க விடும் போது, அவை பெண் கொசுக்களை தேடி இனச்சேர்க்கை செய்கின்றன,” என்று ஆக்ஸிடெக் தலைவர் கிரே ஃப்ரான்ட்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆய்வகத்தால் உற்பத்தி செய்யப்படும் கொசுக்கள் "சுய-கட்டுப்பாடு" (self-limiting) மரபணுவை கொண்டிருக்கும். இவை இனச்சேர்க்கை செய்யும் போது பெண் கொசுக்கள் முதிர் வயது வரை உயிர் வாழ்வதை தடுக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அவர்களின் ஆண் சந்ததிகள் மட்டுமே உயிர்வாழ்கின்றன, ஆனால் அவை இறுதியில் இறந்துவிடும்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 2018 இல் பறக்க விடப்பட்ட மலட்டு ஆண் அனோபிலிஸ் கொலுஸி (Anopheles colluzzi) கொசுக்களைப் போலல்லாமல், ஸ்டெபன்சி கொசுக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியும்.

ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் 2012 ஆம் ஆண்டு நாட்டில் முதன் முதலில் கண்டறியப்பட்ட அனோபிலிஸ் ஸ்டெபென்சியின் பரவலைத் தடுக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களை கடிக்காத மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஜிபூட்டியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஜிபூட்டியில் 2012 இல் சுமார் 30 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர், 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை 73,000 ஆக அதிவேகமாக உயர்ந்துள்ளது. எனவே ஜிபூட்டி அரசாங்கம் தற்போது மலேரியாவை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா, சூடான், நைஜீரியா மற்றும் கானா ஆகிய 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் பரப்பும் கொசு பரவலாக காணப்படுகிறது. ஆசியாவிலிருந்து வந்த ஸ்டெபனி இனத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இது ஒரு நகர்ப்புற கொசு என்றும் குறிப்பிடப்படுகிறது, இது பாரம்பரிய கட்டுப்பாட்டு முறைகளால் ஒழிக்க முடியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது பகல் மற்றும் இரவு என இரு வேளைகளிலும் கடிக்கும் திறன் கொண்டது. இந்த கொசுக்கள் ரசாயன பூச்சிக்கொல்லிகளை தாங்கும் எதிர்ப்புத் திறன் கொண்டவை.

ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி இணையதளத்துக்கு ஜிபூட்டி அதிபரின் சுகாதார ஆலோசகரான டாக்டர் அப்துலிலா அகமது அப்டி கொடுத்த பேட்டியில், "கடந்த பத்தாண்டுகளில் ஜிபூட்டியில் மலேரியா பரவல் அதிவேகமாக அதிகரித்துள்ளது. எனவே இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம்" என்று கூறினார்.

"நீண்ட காலத்துக்கு முன்பு மலேரியா என்னும் நோய் எங்கள் சமூகத்தில் மிகவும் அரிதாக இருந்தது. இப்போது ஜிபூட்டி முழுவதும் மலேரியா நோயாளிகள் தினமும் அவதிப்படுவதை பார்க்கிறோம். எனவே ஏதேனும் செய்து நோய் பரவலை தடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது" என்று அசோசியேஷன் மியூச்சுவாலிஸ் அமைப்பின் இயக்குனர் டாக்டர் பௌ அப்டி கைரே கூறினார்.

ஜிபூட்டி மிகவும் சிறிய அளவிலான நாடு என்பதால் இங்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவது எளிது என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதிகளை கொண்ட நாடான ஜிபூட்டியின் மக்கள்தொகை ஏறக்குறைய 10 லட்சம் இருக்கும்.

மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை உருவாக்கும் செயல்முறை ஆப்பிரிக்காவில் எப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதுகுறித்து கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும் என்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளனர்.

ஆனால் இத்திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் அல்லது மனித ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஆவணப்படுத்தப்படவில்லை என்று ஆக்ஸிடெக் நிறுவனத்தைச் சேர்ந்த ஃப்ரான்ட்சன் கூறுகிறார். இந்த பத்து ஆண்டுகளில் இவர் 100 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை பறக்க விட்டிருக்கிறார்.

"சுற்றுச்சூழலில் நாங்கள் வெளியிடும் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்கள் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதில் கவனமாக இருக்கிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. அவை நச்சுத் தன்மையற்றவை, ஒவ்வாமை ஏற்படாதவை” என்று அவர் கூறினார்.

"மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் உமிழ்நீரில் மரபணுக்கள் காணப்படுவதில்லை. இந்த கொசுக்கள் மனிதர்களை கடித்தாலும் அவர்களுக்கு அந்த மரபணுக்களின் விளைவுகள் இருக்காது” என ஆக்ஸிடெக் தரப்பில் கூறப்படுகிறது.

"இந்த புதிய தீர்வு சர்ச்சைக்குரியதாக இருக்கலாம், ஆனால் இதுதான் நம் எதிர்காலம்" என்று அதிபரின் சுகாதார ஆலோசகர் டாக்டர் அப்டி கூறினார்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மலேரியாவால் இறந்தவர்களில் பத்தில் ஒன்பது மரணங்கள் ஆப்பிரிக்காவின் சகாரா நாடுகளில் நிகழ்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)