பரீட்சைக்குப் படிக்காமல் செல்வது போன்ற கனவு அடிக்கடி வருகிறதா? காரணம் இதுதான்

    • எழுதியவர், ஹேசல் ஷீரிங்
    • பதவி, பிபிசி, கல்வி நிருபர்

பிரிட்டனை சேர்ந்த 17 வயது சிறுவர் ஒலுவாடோசின், அடுத்த ஆண்டு 'லீட்ஸ் சிக்ஸ்த் ஃபார்ம்' கல்லூரியில் தனது ஏ-லெவல் தேர்வுகளை எதிர்கொள்கிறார். இப்போது அவர் வாழ்க்கையில் எல்லாம் நன்றாக தான் போகிறது ஆனால் தேர்வு நெருங்கும் சமயத்தில், ​​மீண்டும் மீண்டும் ஒரு கனவு வந்து அவரை தொந்தரவு செய்யும்.

அந்தக் கனவு: ஒலுவாடோசின் தேர்வுக் கூடத்தில் அமர்ந்திருக்கிறார். கணித வினாத்தாள் அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் அதிலிருக்கும் வினாக்களை பு‌ள்‌ளி‌யிய‌ல் (Statistics) மற்றும் இயக்கவியலுக்கான விடைகளுடன் குழப்பிக் கொள்கிறார். மேலும் அந்த வினாத்தாள் அவருக்குத் தெரியாத பாடங்களில் இருந்து கேட்கப்பட்டக் கேள்விகளால் நிறைந்திருந்தது.

வியர்த்துக் கொட்டி, படபடப்பில் அவர் கண் விழித்து பார்த்த போது தான், அது ஒரு கனவு என்று புரிந்தது. தலைவலியுடன் படுக்கையில் இருந்து எழுந்த ஒலுவாடோசின் இது வெறும் கனவு தான் என்று நிம்மதி அடைந்தார்.

பரீட்சைகளைப் பற்றிக் கனவு காண்பது பொதுவாக பலருக்கு ஏற்படுமா என்பதை அறிந்து கொள்வது கடினம். ஏனெனில், பெரும்பாலானோர் கனவுகளை மறந்து விடுகின்றனர்.

‘மூளை தூங்குவதே இல்லை’

ஆனால் தேர்வுகளுக்கு முன் இவ்வாறு கனவுகள் ஏற்படுவது ஏன்? ஏதாவது செய்து அவற்றைத் தடுக்க முடியுமா?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தூக்க மருத்துவத்துறை பேராசிரியர் காலின் எஸ்பி இது குறித்து பேசுகையில், "நாம் தூங்கும் போதும் நமது மூளை விழிப்புடன் இருக்கும். நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை மூளை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கும். மேலும் நம் நினைவுகளை உருவாக்குதல், நம் உணர்ச்சிகளை செயலாக்குதல் என மும்முரமாகச் செயல்படும்," என்கிறார்.

"ஆனால் அவை சில சமயங்களில் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்கள் தொடர்பான கற்பனைக் காட்சிகளைக் கனவுகளாக உருவாக்கும். அல்லது நமக்குத் தெரிந்த சம்பவங்களைக் கனவுகளாக உருவாக்கும். உண்மையில், நமது மூளை வேலை செய்து கொண்டே இருக்கும்,” என்று விளக்கினார்.

தேர்வுகள் பற்றிய கனவுகள் நமக்கு 'மன உறுதியளிக்க' உதவ வேண்டும், நாம் கற்றுக் கொண்ட அனைத்து பாடங்களையும் மூளை முழுமையாகச் செயலாக்கும் போது, நம்மை அறியாமலேயே கனவுகள் தோன்றும்.

பரீட்சை கனவுகள் ஏன் வருகின்றன?

பேராசிரியர் எஸ்பியின் கூற்றுப்படி, "இரவில் உங்கள் மூளை உங்களிடம் சொல்ல வருவது: 'நீங்கள் இதனைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் படித்ததை நான் உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறேன். படிக்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கிறது. விரைவில் படித்துவிடலாம்'.

"நாம் கற்றுக் கொள்ள முயற்சிக்கும் விஷயங்களை மட்டுமே மூளை ஒருங்கிணைக்க முடியும்," என்கிறார்.

நம் வாழ்வில் நிறைய நடக்கிறது, ஆனால் தேர்வுகள் பற்றிய கனவுகள் மட்டும் ஏன் தனித்து நிற்கின்றன?

"அதாவது நம்மை அச்சுறுத்தும் சம்பவங்களைப் பற்றிக் கனவு காண்பது பொதுவான ஒன்று. மேலும் நம்மை அச்சுறுத்துவதால் அது மோசமானது என்று அர்த்தமல்ல. தேர்வுகள் நமக்கு சவாலானது என்று அர்த்தம்,” என்கிறார்.

"பெரும்பாலான மக்கள் தேர்வுகள் வேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை. எனவே தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் பகலில் உங்கள் மனதில் அது பற்றிய எண்ணங்கள் ஏற்படும். இரவில் நீங்கள் தூங்கினாலும் மூளை விழிப்புடன் அதைச் சிந்திப்பதால் கனவில் தோன்றுகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை," என்கிறார் எஸ்பி.

தேர்வு பற்றிய கனவுகள் மிகவும் பொதுவானவை என்று கூறும் எஸ்பி, "பலருக்கு தேர்வு கனவுகள் தூக்கத்தை கலைப்பதில்லை. எனவே அவர்களுக்கு அந்த கனவுகள் நினைவில் நிற்பதில்லை. சிலருக்கு சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் சிலருக்கு இது ஒவ்வொரு இரவும் பிரச்னையாக இருக்கும்." என்கிறார்.

உணர்வுபூர்வமான கனவுகள்

19 வயதான ஜுஹால், எல்லா இடங்களுக்கும் தாமதமாகச் செல்வதுபோல அடிக்கடி கனவு காண்கிறார்.

"நேரமாகிவிட்டதோ என்ற பதற்றத்தில் நான் இரண்டு அல்லது மூன்று முறை தூக்கத்தில் எழுந்து விடுகிறேன். என் அலாரம், ஒலி எழுப்புவதற்கு முன்னரே விழிப்பு வந்து விடுகிறது. இன்னும் ஒரு மணி நேரம் தூங்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் என்னால் முடியாது,” என்று ஜுஹால் கூறுகிறார்.

பேராசிரியர் எஸ்பி இதுபற்றி மிகவும் எளிமையாக விளக்கினார்.

"நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போதுகூட உங்களால் நேரத்தைச் சொல்ல முடியும். முந்தைய காலகட்டங்களில் மனிதர்களிடம் ஸ்மார்ட்போன்கள், கடிகாரங்கள் எதுவுமே இல்லை. உள்ளுணர்வு மூலம் காலையில் கண் விழித்தார்கள்,” என்கிறார்.

நாம் தூங்கும் போது நம் உணர்வுகள் அசைபோடப்படுவதால், நமக்கு உணர்வுபூர்வமான கனவுகள் ஏற்படுகின்றன. தேர்வுகள் தொடர்பான கனவுகள் சில வருடங்களுக்குத் தொடர்ந்து ஏற்பட்டு, சிலருக்குப் பிரச்னையை ஏற்படுத்தும்.

கொடுங்கனவுகள் சில சமயங்களில் உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கலாம். சிக்கலான உணர்வுகளாலும் தூண்டப்படலாம். சில சமயங்களில் அவை தற்செயலாகவும் நிகழலாம்.

"கடினமான சூழ்நிலைகளை மக்கள் சந்திக்கும் போது, ​​அவர்கள் கடந்த காலத்தை மீண்டும் நினைவுகூர்ந்து, 'எனக்கு இதே போன்று கடினமான சூழல் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. பள்ளியில் தேர்வெழுதும் போது இப்படி ஒரு உணர்வு எனக்கு இருந்தது' என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள். இப்படி உணர்வு ரீதியான சம்பவங்களை மூளை வகைப்படுத்திக் கொள்ளும்," என்கிறார் பேராசிரியர் எஸ்பி.

பரீட்சை கனவுகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

தேர்வு பற்றி மோசமான கனவுகள் ஏற்படுவதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

"உங்களுக்கு உண்மையில் தேர்வுகள் வரவிருந்தால், அதற்குத் தயாராவதற்கு, சரியான அளவு இடைவேளைகளுடன், படிப்பதற்கான ஒரு நல்ல கால அட்டவணையை உருவாக்குங்கள். திட்டமிட்டுப் படிக்க வேண்டும். உங்கள் அட்டவணையைப் பின்பற்றித் தேர்வுக்குத் தயாராக வேண்டும். அனைத்துப் பாடங்களையும் படித்து விட்டதை உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்,” என்கிறார்.

"இரவில் தாமதமாகச் சேர்த்து வைத்துப் படிப்பதைத் தவிர்க்கவும்."

"தூங்கும் முன்பு கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். கணிதத்திற்கான சூத்திரங்களைப் படித்தபடியே உங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்கள் மனதில் அது ஓடிக் கொண்டே இருக்கும்."

"நள்ளிரவிலும் தூங்காமல் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நீங்கள் தூக்கத்தில் விழிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே தூங்குவதற்கு முன்பு கொஞ்சம் உங்கள் சாந்தமாக்கிக் கொள்ளுங்கள்," என்று பேராசிரியர் எஸ்பி பரிந்துரைக்கிறார்.

நீங்கள் ஒரு கெட்ட கனவில் இருந்து எழுந்தவுடன் சாந்தமாக, இயல்பாக இருக்க முயற்சி செய்யலாம்.

"பகலிலோ அல்லது இரவிலோ நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் கனவுகளும் அதே வடிவத்தை எடுக்க முனையும். அதனால்தான் தேர்வுக்குத் தாமதமாகச் செல்வது அல்லது பதில்கள் எதுவும் தெரியாமல் இருப்பது போன்ற சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் கனவு காண்கிறீர்கள். அப்படிப்பட்டக் கனவுகள் ஏற்படுகையில், அதற்கான தீர்வைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்," என்றும் அவர் கூறுகிறார்.

19 வயதான ரோஸ் பரீட்சை கனவுகளால் பாதிக்கப்படவில்லை. அப்படி வந்ததாகவும் அவருக்கு நினைவில்லை.

ஆனால் தேர்வுகளுக்கு முன்னர் தேர்வு பற்றிய பதற்றம் அவருடைய தூக்கத்தைக் கெடுக்கின்றன. அவர் அதிகாலை 2 மணி வரை தூங்காமல் விழித்திருக்கிறார்.

அப்படி விழித்திருக்கையில், அவருக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான 'ரிக் அண்ட் மோர்டி'யைப் பார்ப்பதுதான் அவர் இதுவரை கண்டறிந்த ஒரே தீர்வு.

"டிவி பார்ப்பது என்னை அமைதிப்படுத்துகிறது. என் பதற்றத்தை நீக்க உதவுகிறது. இதனால் எளிதாகத் தூங்கச் செல்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

'உங்கள் தூக்கத்தை நம்புங்கள்'

பேராசிரியர் எஸ்பி கூறுகையில், "ஏதோ ஒன்றை பார்த்து கொண்டே உங்களை நீங்களே உறங்கச் செய்வது சாத்தியமற்றது. தானாக தூக்கம் வந்தால் மட்டுமே நிம்மதியாக தூங்க முடியும். அதிகாலை 4 மணிக்கு நீங்கள் விட்டத்தை பார்த்து விழித்திருக்கும் சூழலை மாற்றுங்கள்,” என்று கூறுகிறார்

மேலும், "பரீட்சைக்கு முந்தைய நாள் இரவு போதுமான தூக்கம் வரவில்லையே என்று கவலைப்படுவதை விட இன்னும் மூன்று மணி நேரம் தூங்கினால் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணி, தூங்க முயற்சி செய்யுங்கள். அது முடியாவிட்டால், உங்களை மீண்டும் தூங்க அனுமதிக்க சுமார் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் தொலைபேசி அல்லது கடிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அப்போதும் தூக்கம் வரவில்லை என்றால் உங்களுக்கு மீண்டும் தூக்கம் வரும் வரை சிறிது நேரம் எழுந்திருங்கள்,” என்கிறார்.

"மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள், மீண்டும் உறங்க உங்களை அனுமதிக்கவும், மேலும் விழித்திருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று விளக்கினார்.

"தூங்குவதற்காக மிகவும் கடினமாக முயற்சி செய்கிறேன் என்று சொல்லி மொபைல்ஃபோனைப் பார்ப்பது, டிவி பார்ப்பது என ஒரு மோசமான சுழற்சியில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இரவில் நடக்கும் நிகழ்வுகளை மிகைப்படுத்தாதீர்கள்,” என்றும் அவர் கூறுகிறார்.

"உங்கள் தூக்கத்தை நம்புங்கள்,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)