ஒரு கிளாஸ் பீரும் ஒரு கிளாஸ் பாலும் கலோரி அளவில் ஒன்றா?

பட மூலாதாரம், Getty Images
இது இந்தாண்டில் நாம் அனைவரும் தீர்மானங்கள் எடுக்கும் காலகட்டம்.
ஒவ்வோர் ஆண்டும் எடுக்கப்படும் வழக்கமான தீர்மானங்களில் உடல் எடையக் குறைக்க வேண்டும் என்பது பரவலான ஒன்று.
அந்த இலக்கை அடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்து உடற்பயிற்சியை அதிகரிக்கிறோம்.
உணவில் உள்ள ஆற்றல் கலோரிகளில் அளவிடப்படுவதால் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைத்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று நாம் கருதுகிறோம்.
இது சரியான அணுகுமுறையா?
உட்கொள்ளும் கலோரி அளவைக் கணக்கிடுவது பழைய முறை என்பதோடு அது ஆபத்தானது என்றும் சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கலோரி என்றால் என்ன?
கலோரி என்பது ஆற்றலின் ஒரு அலகு. பொதுவாக உணவில் உள்ள ஊட்டச்சத்து அளவைக் குறிப்பிட இது பயன்படுத்தப்படுகிறது.
கலோரி என்ற சொல் கலோரி என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு வெப்பம் என்று பொருள்.
"நிக்கோலஸ் க்ளெமென்ட் கலோரியை ஒரு லிட்டர் தண்ணீரின் வெப்பநிலையை கடல் மட்டத்தில் 1C ஆக உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவாக வரையறுத்தார்`` என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மூலக்கூறு நியூரோஎண்டோகிரைனாலஜி பேராசிரியர் கில்ஸ் யோ பிபிசியிடம் கூறினார்.
பிரெஞ்சு விஞ்ஞானி க்ளெமென்ட் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெப்ப இயந்திரங்கள் பற்றிய விரிவுரைகளில் கலோரி என்ற வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்தினார்.
எனவே ஒரு கலோரி என்பது 1கிலோ நீரின் வெப்பநிலையை 1C உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப ஆற்றலுக்குச் சமம். மேலும் ஒரு கிலோகலோரி என்பது ஆயிரம் கலோரிகளுக்குச் சமம்.
அவரது கண்டுபிடிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

பட மூலாதாரம், Getty Images
உணவின் கலோரி அளவை அறிவியல்பூர்வமாக துல்லியமாக அளவிடும் முறை கண்டறியப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.
"ஒரு நபரின் உணவுமுறை அவரது இனம், வாழ்ந்த காலநிலை, சமூக அந்தஸ்து, பாலினம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்புடையதாக நம்பப்படும் புரிதலிருந்து மாறுபட்ட புரிதலுக்குச் சென்றோம்" என்று புளூமிங்டனில் உள்ள இண்டியானா பல்கலைக்கழக வரலாறு மற்றும் சர்வதேச ஆய்வுகளின் பேராசிரியர் நிக் குல்லதர் கூறுகிறார்.
உணவைப் பற்றிய நமது எண்ணத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. புரதம், கார்போஹைட்ரேட், நுண்ணூட்டச்சத்துக்கள், கொழுப்பு போன்ற பல கூறுகளின் கூட்டுத்தொகையாக மக்கள் உணவைப் பார்க்கத் தொடங்கினர்.
"தற்போது உடல் இயந்திரமாகவும், உணவு எரிபொருளாகவும் பார்க்கப்படுவது மக்கள் உணவைப் பார்க்கும் விதத்தை மாற்றியது" என்கிறார் குல்லதர்.
20ஆம் நூற்றாண்டில் கலோரிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின.
1920கள் மற்றும் 1930களில், ஜப்பானிய கடற்படை அதன் மாலுமிகளுக்கான உணவுமுறைத் தரத்தை அறிமுகப்படுத்தியது. கோதுமை, இறைச்சி, குறிப்பாக பன்றி இறைச்சி மற்றும் கோழி ஆகியவை மாலுமிகளின் உணவில் சேர்க்கப்பட்டன. மேலும், ஜப்பானிய மக்களிடமும் அவை விளம்பரப்படுத்தப்பட்டன. இன்று பலர் விரும்பும் ஜப்பானிய உணவுகள், இந்த உணவுமுறை மாற்றத்தில் இருந்து உருவானவை.
பல தசாப்தங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எவ்வளவு உணவு உதவி தேவை என்பதைத் தீர்மானிக்க அமெரிக்கா கலோரி எண்ணிக்கையைப் பயன்படுத்தியது. மேலும், முதல் உலகப் போரின் முடிவில் வெர்சாய்ஸ் உடன்படிக்கையில் இருந்து உருவான லீக் ஆஃப் நேஷன்ஸ், ஊட்டச்சத்து குறித்து ஆய்வு செய்து 1935ஆம் ஆண்டு உலகளாவிய அளவை நிர்ணயித்தது. அது, வயது வந்தவருக்கு ஒரு நாளுக்கு 2,500 கலோரிகள் தேவை எனப் பரிந்துரைத்தது.
தற்போது ஒரு ஆணுக்கு 2,500 கலோரிகள் மற்றும் பெண்ணுக்கு 2,000 கலோரிகள் என்ற அளவு நிலையானது.
கலோரி அளவைக் கணக்கிடுவது ஆபத்தானதா?

பட மூலாதாரம், Getty Images
கலோரி அளவைக் கணக்கிடுவது காலாவதியான முறை என சில வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கு என்ன காரணம்?
வெவ்வேறு உணவுகள் சமமான ஆற்றல் மதிப்பைக் கொண்டிருந்தாலும், அவை ஒரே மாதிரியான ஆரோக்கியம் அல்லது ஊட்டச்சத்து பயன்களைத் தராது. உதாரணமாக, ஒரு கிளாஸ் பாலில் சுமார் 184 கலோரிகள் உள்ளன. அதே ஒரு கிளாஸ் பீரில் 137 கலோரிகள் உள்ளன.
"நாம் கலோரிகளை உண்பதில்லை, உணவையே உண்கிறோம். அதிலிருந்து கலோரிகளை பிரித்தெடுக்க நம் உடல் வேலை செய்ய வேண்டும். நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்து, கலோரிகளைப் பிரித்தெடுக்க நம் உடல் வெவ்வேறு அளவுகளில் வேலை செய்ய வேண்டும்” என்கிறார் மரபியலாளர் கில்ஸ் யோ.
கடைகளில் நாம் காணும் உணவுப் பொட்டலங்களில் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்ற விவரம் இருக்கும். ஆனால் அதிலிருந்து நம் உடல் எவ்வளவு கிரகித்துக்கொள்ளும் என்ற விவரங்கள் இருக்காது.
“நாம் உண்ணும் ஒவ்வொரு 100 கலோரி புரதத்திலும், 70 கலோரிகளை மட்டுமே உடல் கிரகித்துக்கொள்ளும். மீதமுள்ள 30 புரத கலோரிகள் புரதத்தை உடல் எடுத்துக் கொள்வதற்காக செலவிடப்படும். மற்றொருபுறம் கொழுப்பு அடர்த்தியான ஆற்றல் கொண்டது. நாம் உண்ணும் ஒவ்வொரு 100 கலோரி கொழுப்பிலும், 98 முதல் 100 கலோரிகள் வரை நம் உடல் பெறுகிறது” என்றும் யோ கூறுகிறார்.
எளிதாக புரிந்துகொள்வதென்றால், 100 கலோரி கேரட் மூலம் கிடைக்கும் கலோரியைவிட 100 கலோரி சிப்ஸ் அதிக கலோரியை உடலுக்கு வழங்கும்.
உண்ணும் உணவின் வகையை கவனத்தில் கொள்ளாமல், கலோரிகளை எண்ணுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது யோவின் வாதமாக உள்ளது.
ஒரு உணவில் இருந்து நமக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்கும் என்பது நம்முடைய வயது, நாம் தூங்கும் அளவு, குடல் பாக்டீரியா மற்றும் ஹார்மோன்களின் அளவு, உணவை எப்படி மென்று சாப்பிடுகிறோம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறக்கூடியது.
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவை தயாரிக்கும் போது, அதில் புரதங்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிராகரிக்கப்பட்டு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இது உணவை கலோரி நிறைந்ததாகவும், ஊட்டச்சத்து அளவு குறைந்ததாகவும் மாற்றுகிறது.
கலோரிகள் உங்களுக்கு ஓர் அளவைத் தருகின்றன. இது ஊட்டச்சத்து அளவில் சரியானதல்ல. கொழுப்பு, சர்க்கரை, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் அளவு எவ்வளவு இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இதுதான் கலோரி தொடர்பான எனது பிரச்னை. எனவே இது தெளிவான கணக்கீடு அல்ல என்று கூறும் யோ, உண்மையில் கலோரி எண்ணிக்கை ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேர்வு செய்ய வழிவகுப்பதாகவும் கூறுகிறார்.
ஆபத்தான புரிதல்

பட மூலாதாரம், Getty Images
‘’கலோரிகள் நிர்ணயம் மக்களை பாதிக்கிறது" என எச்சரிக்கிறார் நியூயார்க் கார்னெல் பல்கலைக்கழக அமெரிக்க உணவு மற்றும் ஆரோக்கியத்தின் வரலாறு, கலாச்சார நிபுணர் அட்ரியன் ரோஸ் பிடார்.
“குடிப்பழக்கம் உள்ளவரைப் போல, உணவுப் பழக்கத்தை உங்களால் உடனடியாகக் கைவிட முடியாது. கலோரிகளைக் கணக்கிடும் பழக்கத்தால் பசியின்மை, புலிமியா, ஆர்த்தோரெக்ஸியா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன’’ என்று பிடார் கூறுகிறார்.
சில உணவுப்பழக்க திட்டங்கள் ஆபத்தான குறைந்த கலோரி உணவுகளில் உயிர்வாழ்வதை மக்களுக்கு அறிவுறுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
என்ன மாற்று?
உணவுத்துறைக்கு வெளியே ஆற்றலின் அளவு கலோரிகளில் அளவிடுவதற்குப் பதிலாக ஜூல்களியே அளவிடப்படுகின்றன. சில உணவு நிறுவனங்கள் தற்போது உணவின் மதிப்பை கிலோஜூல்களில் குறிப்பிடத் தொடங்கியுள்ளன.
ஆனால், கலோரி என்ற சொல் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமாகிவிட்டது. கலோரி என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்குகூட அதிகப்படியான கலோரிகளை எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு கேடு என்ற புரிதல் உள்ளது.
பிரிட்டிஷ் ஊட்டச்சத்து அறக்கட்டளையைச் சேர்ந்த பிரிட்ஜெட் பெனெலம் போன்ற சில நிபுணர்கள் கலோரிகளை குறித்த எண்ணங்களைக் கைவிட வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர். அதில் குறைபாடுகள் இருந்தாலும், மதிப்புமிக்க பயன்களும் இருப்பதாக அவர் கூறுகிறார்.
"தற்போது உடல் பருமன் என்பது நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொது சுகாதாரப் பிரச்னை. எனவே, அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு என்ன காரணம் என்பதை மக்கள் புரிந்துகொள்வது முக்கியம்" என்கிறார் பெனெலம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கலோரிகளைக் கணக்கிடுவது எடைக்குறைப்பிற்கான உணவுப்பழக்க முறையை வடிவமைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.
"மக்கள் எதை உட்கொள்கிறார்கள், அந்த கலோரிகள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். உதாரணமாக, அதிக நிறைவுற்ற கொழுப்பை (saturated fat) உண்கிறார்கள் எனும் போது, அதிலிருந்து எவ்வளவு கலோரிகளைப் பெறுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து நாம் கணக்கிட வேண்டும். இதுவே விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்" என்றும் பெனெலம் கூறுகிறார்.
ஒருவர் உட்கொள்ளும் ஆற்றலுடன் பயன்படுத்தும் ஆற்றலை சமநிலைப்படுத்த வேண்டும் என்றும், அவ்வப்போது அதிகமாக உட்கொண்டால் அது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறும் இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை, அதிக ஆற்றலை எடுத்துக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களில் குறைவான ஆற்றலை எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












